இந்த வருட ஐபிஎல் போட்டிகளின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பிளே-ஆஃப் போட்டிக்குத் தகுதி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்திலிருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கவுகாத்தி நகரத்தில் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து வீரர்கள் ஏற்கெனவே தாயகம் திரும்பிய நிலையில் பட்லர் இப்போட்டியில் இடம்பெறவில்லை. இதனால் ஜெய்ஸ்வாலுடன் டாம் கோஹ்லர் தொடக்க ஆட்டகாரராகக் களமிறங்கினார். RR vs PBKS
ஆட்டத்தின் முதல் ஓவரை பஞ்சாப் கேப்டன் சாம் கரண் முதல் பந்திலேயே ஃபோரோடு தொடங்கினார் ஜெய்ஸ்வால். சிறப்பான தொடக்கம் எனப் பேசி முடிப்பதற்குள் அதே ஓவரில் இன்சைட் எட்ஜ் வாங்கி போல்ட்டாகி வெளியேறினார் ஜெய்ஸ்வால். அதே ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு அனுப்பி பிள்ளையார் சுழி போட்ட கோஹ்லர், ராஜஸ்தான் கேப்டனுடன் கைகோத்தார். அர்ஷ்தீப் சிங் வீசிய நான்காவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விரட்டிய சாம்சன், இந்த சீசனில் 500 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். "இழப்பதற்கு ஏதுமில்லை" என்ற நிலையில் பஞ்சாப் இருந்தாலும், "கடைசி இடம் நமக்கில்லை" என்ற முனைப்பில் பஞ்சாப் வீரர்கள் பவர்பிளேயில் சிக்கனமாக சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தினர். இதனால் 6 ஓவர் முடிவில் வெறும் 38 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் சேர்த்தது.
நாதன் எலிஸ் வீசிய 7வது ஓவரில் சஞ்சு சாம்சன் 18 (15), கேட்ச் பயிற்சி கொடுப்பது போல ராகுல் சஹாரிடம் பாப்பா கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் சென்று உட்காருவதற்குள் டெஸ்ட் மேட்ச் போல அடிக்கொண்டிருந்த கோஹ்லரும் 18 (23) ஜிதேஷ் ஷர்மாவிடம் கேட்ச்சானர். இதையடுத்து 43-3 என்ற நிலையில் RR தடுமாற ஆரம்பித்தது. இதையடுத்து ரியான் பராக்குடன் ஜோடி சேர்ந்த அஷ்வின் விக்கெட் விழாமல் பாட்னர்ஷிப்பை போட ஆரம்பித்தார். குறிப்பாக ராகுல் சஹாரின் 12வது ஓவரில் தொடர்ந்து 6, 4, 4 என பவுண்டரிகளை விளாசிய அஷ்வின் ரன்ரேட் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்த ஆரம்பித்தார்.RR vs PBKS
இவர்களின் பார்ட்னர்ஷிப் 50 ரன்கள் கடந்த நிலையில், அதை அர்ஷ்தீப் சிங் தனது வேகத்தில் அஷ்வின் 28 (19) விக்கெட்டை வீழ்த்தி உடைத்தார். இதன் பின்னர் மணியோசை போல துருவ் ஜூரேல் கோல்டன் டக்காகி வெளியேற, யானை போல அவர் பின்னே நடையை கட்டினார் பாவல் 4 (5). சாம் கரண், சஹார் தங்கள் அடுத்தடுத்த ஓவர்களில் அவர்களை வெளியேற்றினர். இதனால் 102-6 என்று தடுமாறியது ராஜஸ்தான்.RR vs PBKS
இதையடுத்து இம்பேக்ட் பிளேயர் அஸ்திரத்தை கையில் எடுத்து டோனோவன் பெரேராவை உள்ளே இறக்கியது ராஜஸ்தான். ஆனால் அதை பஸ்பமாக்கி பெரேராவை 7 (8) சீக்கிரமாக நடையை கட்டவைத்தது பஞ்சாப். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் தனியாளாக ரன்களுக்காகப் போராடிக் கொண்டிருந்தார் பராக். இருப்பினும் அரை சதத்தை நெருங்கிய நிலையில் ஹர்ஷத் பட்டேல் பந்தில் 48 (34) புல் டாஸ் ஸ்லோவர் பந்தில் எல்பிடபுள்யூ முறையில் வெளியேறினார். அந்த விக்கெட்டின் மூலம் பர்பிள் கேப்பினைப் பெற, கடைசி பந்தில் போல்ட் ரன் அவுட்டாக 20 ஓவர் முடிவில் 144-9 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் அணி.
இன்றைய டிரெண்டில் இதுவொரு எளிய இலக்கு என்று பார்க்கப்படுகிற நிலையில் பிரப்சிம்ரன், பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை போல்ட் வீச, 3வது பந்தை ஃபோருக்கு விரட்டிய சிம்ரன் அடுத்த பந்திலேயே சஹாலிடம் கேட்ச் கொடுத்து குறைந்த ரன்னிலேயே வெளியேறினார். இதன்பிறகு ரில்லே ரூஸோ கிடைக்கிற பந்தை எல்லாம் கேப் பார்த்து பவுண்டரிக்கு விரட்டிக்கொண்டிருந்தார். குறிப்பாக போல்ட்டின் 3வது ஓவரில் 3 பவுண்டரிகளையும், சந்தீப் சர்மாவின் அடுத்த ஓவரில் 3 பவுண்டரிகளையும் சாத்தினார். RR vs PBKS
இதனால் போட்டி ஒரு பக்கமாக சீக்கிரம் முடியும் என்று எதிர்பார்க்கப்பட, "எட மோனே" என அவேஷமாக வந்து ரூசோவின் விக்கெட்டை வீழ்த்தியது மட்டுமல்லாமல் சஷாங் சிங்கையும் டக் ஆவுட்டாக்கி போட்டியை ராஜஸ்தான் பக்கம் திருப்பினார் அவேஷ்கான். இதனால் பவர்பிளே முடிவில் 39-3 என்ற நிலையில் பஞ்சாப் திணறிக் கொண்டிருந்தது. "நெக்ஸ்டு ஜூஸ்" என்பது போல பேஸ் அட்டாக்கிலிருந்து சுழலுக்கு மாறிய RR, சஹாலின் சூழலில் பேர்ஸ்டோவின் 14 (22) விக்கெட்டை எடுத்தது. அணியை சரிவிலிருந்து மீட்க ஜிதேஷ் ஷர்மா கேப்டன் சாம் கரணோடு சேர்ந்து விக்கெட் விழாமல் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கு நடுவே ரியான் பாரக் சாம் கரணின் கடினமான கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார். இதனால் 12 ஓவர் முடிவில் 76-4 என்ற நிலையை பஞ்சாப் அணி எட்டியது.
பொறுமையாக ஓவருக்கு ஒரு பவுண்டரிகளை அடித்து வந்த இந்த ஜோடி அஷ்வினின் 15வது ஓவரில் ஆளுக்கு ஒரு சிக்ஸர் என ஆட்டத்தின் போக்கை முழுவதுமாக மாற்ற ஆரம்பித்தனர். இதுவே ஆட்டத்தின் திருப்புமுனை என்றும் சொல்லலாம். பஞ்சாப் அணி 15 ஓவர் முடிவில் 103-4 என்ற நிலைக்கு வர, கைவசம் இன்னும் 6 விக்கெட்டுகள் இருந்த நிலையில் 42 ரன்கள் மட்டுமே தேவைபட்டன. வெற்றி பாதை கண்ணில் தென்படும் தூரத்தில் இருக்க ஜிதேஷ் ஷர்மா 22 (20) சஹாலின் சூழலில் பராக்கிடம் கேட்ச் ஆனார்.RR vs PBKS
சுட்டி குழந்தை சாம் கரண் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல் சந்தீப் சர்மா, அவேஷ் கான் இருவரையும் சிக்ஸருக்கு வெளுத்தார். முடிவில் 19வது ஓவரில் அஸ்வதோஷ் சிங் தன் பங்குக்கு ஒரு சிக்ஸர் அடிக்க 18.5 ஓவரில் இலக்கை எட்டியது பஞ்சாப். இந்தப் போட்டியோடு இங்கிலாந்து செல்லவிருந்த சாம் கரண் 41 பந்துகளில் 63 ரன்களை அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஏற்கெனவே பிளே-ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் தகுதி பெற்றிருந்தாலும், இது அவர்களின் தொடர்ச்சியான நான்காவது தோல்வி என்பதால் ராஜஸ்தான் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் டாப் 2-வில் லீக் போட்டிகளை முடிக்கும் வாய்ப்பும் சிக்கலாகியுள்ளது.
http://dlvr.it/T6xv4k

0 Comments
Thanks for reading