IPL : பாவம் பஞ்சாபியன்ஸ்…யார் சிறப்பாகத் தோற்பது என்பதில் போட்டாபோட்டி...அப்புறம் என்ன நடந்துச்சுனா?

வெல்வதாக காட்டித் தோற்பதும், தோற்பதாகக் காட்டி வெல்வதும், பஞ்சாப்புக்கும் ராஜஸ்தானுக்குமே கைவந்த கலை! இம்முறை, தியாகியின் தாக்குதலில் வெற்றிக் கோட்டைத் தொடும் நிலையில், நிலைகுலைந்து மண்ணைக் கவ்வியது குட்டி ஆர்சிபி. டேபிளின் முதல் தளத்துக்கு குடிபுக ததிகினத்தோம் போட்டுக் கொண்டுள்ள அணிகளுக்கு இடையேயான மோதல் என பஞ்சாப், ராஜஸ்தானுக்கு இடையேயான போட்டியை எப்போதும் ஒதுக்கித் தள்ள முடியாது. ஏனெனில், சமீப காலங்களில் இவர்கள் சந்தித்த சமயங்களில், ‘மாவீரன்’ திரைப்படத்தில், ஹீரோ ராம் சரணும் வில்லனும் சந்தித்துக் கொண்ட ரீதியில், பந்துக்கள் பஞ்சராக்கப்பட்டு, பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. 'இந்த சீசனில் இதுவரை' என காட்சிகளை ஓட்டிப் பார்த்தாலும், இவர்கள் முன்னதாக மோதியபோது, ஒட்டுமொத்தமாக 400 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டிருந்தது. டாஸ் வென்ற ராகுலுக்கு, பனிப்பொழிவு நினைவில் வர, 'பௌலிங்' என்றார். கெயிலுக்கு பிறந்தநாள் விடுமுறை விடப்பட்டு, புதுமுக வீரர்களோடு களமிறங்கியது பஞ்சாப். கடந்தமுறை, அயல்நாட்டு வேகப்பந்து வீச்சுக்கு அடைக்கலம் கொடுத்து சூடு கண்டவர்கள், இம்முறை அந்த ஸ்லாட்டில், ஆதில் ரஷித்தைப் பொருத்தி இருந்தனர். பெளலர்களை உருட்டி விளையாடும் பட்லர், ஸ்டோக்ஸ், உள்ளிட்ட பெரிய தலைக்கட்டுகள் இல்லாததால், லூயிஸ் மற்றும் லிவிங்ஸ்டனைக் களமிறக்கியிருந்தது ராஜஸ்தான்.IPL - PBKSvRR ஜெய்ஸ்வால் - லூயிஸ் மனதுக்குள் '200+' என்ற மந்திரத்தை மனனம் செய்து வந்திருந்தனர் போலும். சந்தித்த முதல் பந்திலிருந்து, அதுவே நோக்கமாக, அதை நோக்கியே நீண்டது அவர்களது பேட்கள். 'கிரவுண்டட் ஷாட்டுகளா, கிலோ என்ன விலை' என அத்தனை பந்துகளையும், அந்தரத்தில் மிதக்க விட்டு, பவுண்டரி லைனைப் பார்த்துவர அனுப்பினார்கள். ஓப்பனிங் ஓவரிலேயே, ஷமியின் பந்தில் சரமாரியாக, பேக் டு பேக் பவுண்டரிகளை அடித்தவர்கள், புதுமுக வீரர் இஷான் பொரேலைத்தான் அன்பொழுக கவனித்தனர். நான்கு பவுண்டரிகளை, அவரது ஒரே ஓவரில் விளாசியவர்கள், அவரது எக்கானமியை, சுடுதண்ணீரில் வைத்த தெர்மாமீட்டராக எகிற வைத்தனர். ஓவர்களுக்கும், ரன் ரேட்டுக்கும் இடையே வரையப்பட்ட கிராஃப், பத்தில் இருந்து இறங்கவே இல்லை. மரண பயத்தைக் காட்டிய கூட்டணியை, ஆபத்பாந்தவனாக வந்த அர்ஷ்தீப் ஒரு ஸ்லோ பாலினால் முறித்தார். மாயங்க் பிடித்த அற்புதக் கேட்சால் லூயிஸ் வெளியேறினார். எனினும், 57 ரன்களோடு, ராஜபாட்டையில் நடைபோட்டது ராஜஸ்தானின் பவர்பிளே. ஒன் டவுனில் சாம்சன் இறங்கினார். இந்த சீசனின், முந்தைய மோதலில், சதத்தோடு சகலத்தையும் தனதாக்கி இருந்தார் சாம்சன். இம்முறையும், கேப்டன் நாக் ஆடுவார் எனத் தோன்ற, அது தோற்றப் பிழை என அவர் போரெல்லின் பந்தில், ஆட்டமிழந்து வெளியேறினார். இரண்டாவது ஸ்பெல்லில், இழந்ததை மீட்டெடுத்தார் போரெல். இவ்வளவு களேபரத்திலும், ரன்ரேட் மட்டும் சரியவே இல்லை, கச்சிதமாக அதனை, கவனத்தில் கொண்டது ராஜஸ்தான். லிவிங்ஸ்டன் - ஜெய்ஸ்வால் கூட்டணியும், அதற்கு விதிவிலக்கல்ல. வேகம், சுழல் என ராகுல் மாற்றி மாற்றி வலை பின்னினாலும், எதற்கும் பணியாது, பிரம்மாண்டமான ஷாட்டுகளால் பிரமிக்க வைத்துக் கொண்டிருந்தனர். 11 ஓவர்களில், 100 ரன்கள் கடக்கப்பட, துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டதைப் போல், கருத்து இருண்டது ராகுலின் முகம். ஒரு கட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் ராஜஸ்தான் சென்றுவிடும் என்ற நிலையில் இருக்க 'அர்ஷ்தீப்பே அபயம்' என அவரிடம் பஞ்சாப் சரணடைய, அவரது ஓவரையும், பவுண்டரி சிக்ஸரோடு சிறப்பித்தார் லிவிங்ஸ்டன். இறுதியில், அதே ஓவரிலேயே, டீப் மிட்விக்கெட்டில் நின்ற ஃபேபியன் பிடித்த ஒரு கடின கேட்சால் லிவிங்ஸ்டன் வெளியேறினார்.IPL - PBKSvRR மூன்று விக்கெட்டுகள் விழுந்து விட்டன என மூச்சுவிட முடியவில்லை பஞ்சாப்பால். இம்முறை, சோதனை, லாம்ரோரின் வடிவில் வந்தது. ஹர்ப்ரீத் அவருக்கு வீசிய முதல் ஓவரில் மட்டுமே, சற்றே அடக்கி வாசித்தார். ரஷித்தின் ஓவரையோ ரணகளப்படுத்தி விட்டார்.பிரதான ஸ்பின்னர் என்றும் பாராமல், பேக் டு பேக் சிக்ஸரோடு கலங்கடித்தார். நடுவில், 49 ரன்களோடு ஜெய்ஸ்வாலை அனுப்பிவைத்து ஆறுதல்பட்டுக் கொண்டது பஞ்சாப் தரப்பு. ஆனாலும், லாம்ரோரின் வெப்பம் தணிவதாக இல்லை. ஹூடாவின் ஓவரில் மட்டும், 24 ரன்களை அடித்துப் பிடுங்கினார். ராகுல், பிரதான பௌலர் ஃபேபியன் ஆலனுக்கு ஓவர் கொடுக்காமல், பகுதிநேர பௌலரான ஹூடாவுக்கு ஓவர் கொடுத்ததன் பாவத்தை, இரண்டு ஓவர்களில், 37 ரன்கள் என்ற தண்டனையோடு அனுபவித்தது பஞ்சாப். பௌலிங் ரொட்டேஷனில் ராகுல் செய்யும் தவறு, ஒவ்வொரு முறையும் அவர்களுக்கே எதிர்வினையாகிறது. எனினும், ஒருவழியாக 'பராக் பராக்', என சொல்லி முடிப்பதற்குள் அவர் வந்த வேகத்தில் வெளியேற, திவேதியா, களமிறங்கினார். இதற்குப் பிறகுதான் ராஜஸ்தானுக்கு ஆன்டி கிளைமாக்ஸ் ஆரம்பமானது. 200-க்கு மேல்தான் டார்கெட் இருக்கப் போகிறது என்பதை மாற்றி எழுதத் தொடங்கின டெத் ஓவர்கள். அதற்கு ஆரம்பப் புள்ளி வைத்தது லாம்ரோரின் விக்கெட். அர்ஷ்தீப் மற்றும் ஷமி, வேகப்பந்து வீச்சின், உச்சகட்ட வீச்சைத் தொட, இறுதி ஓவர்களில் விட்டதைப் பிடித்தது பஞ்சாப். மோரிஸ் உள்ளிட்ட பின்வரிசை வீரர்கள் சோபிக்கத் தவற, கடைசி நான்கு ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து, 21 ரன்களை மட்டுமே சேர்த்த ராஜஸ்தான் 186 என இலக்கைக் கொண்டு போய் நிறுத்தியது. அதுவும் கடைசி பந்தில், தியாகியின் விக்கெட்டை வீழ்த்திய அர்ஷ்தீப், தனது ஐந்து விக்கெட் ஹாலை பூர்த்தி செய்து, பெருத்த சேதத்திலிருந்து அணியைக் காத்திருந்தார். ஷமியும், மூன்று விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். 186 ரன்கள் மிரள வைக்கும் இலக்குதான் எனினும் மயாங்க் - ராகுல் கூட்டணிக்கு அசாத்தியமானதும், சாத்தியம்தானே?! சமீப காலங்களில், ஐபிஎல்-ன் சிறந்த ஓப்பனிங் கூட்டணிகளில் ஒன்றைக் கையில் வைத்திருப்பதால், பஞ்சாப்புக்கு இதெல்லாம் சர்வ சாதாரணமாகத்தான் தோன்றியிருக்கும். அதை மீண்டும் ஒருமுறை, செயலில் காட்டத் தொடங்கியது இந்த இருவரணி. முஸ்தாஃபபைசுர் ரஹ்மானின் முதல் ஓவரில் அடிக்கவே தெரியாதவர்கள் போல் ஆரம்பித்த இவர்கள், அதன்பிறகு, சகாரியாவிடம் 'சாரி யா' என்று சொல்லி, அவரது ஓவரை துவம்சம் செய்து 19 ரன்களை அடித்துக் குவித்தனர். அங்கே தொடங்கிய ஜெட் விமானம், அதன்பின் சில ஓவர்கள் வரை தரையிறங்கத் தயாராகவே இல்லை. போதாக்குறைக்கு, சாம்சனின் சகாக்கள், கேட்ச்களைப் பிடிக்கவே மாட்டோம் என சத்தியப் பிரமாணம் எடுத்து வந்ததைப் போல், அத்தனை பந்துகளையும், தரையை முத்தமிட வைத்தனர். ஜான்டி ரோட்ஸின் வார்ப்புகளாக, பிடிக்க முடியாத கேட்சுகள் கூட பஞ்சாப் அணியால் பிடிக்கப்பட்டதெனில், "கேட்சுகள் இவ்விடம் சிறப்பாக விடப்படும்" என அறிவிப்புப் பலகை வைக்காததுதான் குறை. மொத்தத்தில், பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட்டையும் வீழ்த்தாமல், ரன்களையும் கசிய விட்ட ராஜஸ்தான், அங்கேயே, போட்டியை, பஞ்சாப்பின் பேருக்கு பட்டா போட்டுத் தர முயன்றது.IPL - PBKSvRR சாம்சனும் ஒலிம்பிக் தீபத்தை, கைமாற்றுவது போல், ஒவ்வொருவர் பௌலர் கையிலும், பந்தைக் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால், விக்கெட் மட்டும் விழுந்த பாடில்லை. ஆளுக்கொரு அரைசதம் என்னும் கணக்கில், போட்டி போட்டு இருவரும் ஆட, முதலில் அரைசதத்தை அகர்வால் தொட்டு விட்டார். ரன் அப் தேய்ந்ததே ஒழிய, விக்கெட் மட்டும் விழவேயில்லை. அசத்தலாகத் தொடங்கி, சொதப்பலாக முடிப்பதில் முனைவர் பட்டம் ராஜஸ்தானின் வசமென்பது பழங்கதைதான் என்றாலும், அச்சுப் பிசகாமல், மீண்டுமொரு முறை அது அரங்கேறிக் கொண்டிருந்தது. ஆனாலும், ராகுலின் விக்கெட்டை வீழ்த்திய சகாரியா, ஒரு பொட்டு வெளிச்சத்தைக் காட்டி, தொலைக்காட்சி பெட்டியின் கண்களை மூட வைக்கும் முடிவை, ராஜஸ்தான் ரசிகர்களை மறுபரீசிலனை செய்ய வைத்தார். ஒரு ரன்னில், அரை சதத்தைத் தவற விட்டு வெளியேறினார் ராகுல். அதற்கடுத்த ஓவரிலேயே, 'அண்ணனின் வழியில் தம்பியும் தொடர்வேன்' என, 67 ரன்களோடு மயாங்க் வெளியேற, உறங்கச் செல்லலாம் என்ற முடிவை ஒத்தி வைத்தனர் ராஜஸ்தான் ரசிகர்கள். உண்மையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பும், நிஜமும், அச்சமயத்தில், எதிர்திசையில் பயணித்தன. செட்டில் ஆன இரண்டு பேட்ஸ்மேன்களையுமே அடுத்தடுத்த ஓவர்களில் இழந்தது பஞ்சாப்புக்கு பேரிடியாக எல்லாம் மாறவில்லை, ஏனெனில், 42 பந்துகளில், 60 ரன்கள் என இலக்குக்கு அருகில் ஏற்கெனவே பாய்ந்தோடி வந்து விட்டது பஞ்சாப். எனினும், ராஜஸ்தானும் அவ்வளவு எளிதாகப் பணிந்து விடவில்லை. அந்த இரு விக்கெட்டுகள், அவர்களுக்குள் புது உத்வேகத்தைக் கொண்டு வந்தது. மறுபக்கம் பஞ்சாபும், பலம் பொருந்தியே இருந்தது. முந்தைய பஞ்சாப் அணியில், உடைத்துப் பார்த்தால் ஒன்றுமில்லாத வெறுங்கூடைப் போல், ஓப்பனர்கள் மற்றும் கெய்லை நகர்த்தி விட்டாலே வெற்றியை வசமாக்கி விடலாம். ஆனால், இந்த அணி நிரம்பவே மாறியிருந்தது. களத்தில் நின்ற மார்க்ரம் மற்றும் பூரணும் நிதானமாக ஆடத் தொடங்கினர். எனினும், ராஜஸ்தானின் இன்னிங்சில் நடந்ததைப் போல், இறுதி ஓவர்களில், எல்லாம் மாறத் தொடங்கியது. அவ்வப்போது, ஒரு பெரிய ஷாட் மூலமாக, ரன்களை இக்கூட்டணி பகிர்ந்து கொண்டாலும், சிறு நம்பிக்கையோடு கட்டுக்கோப்பாக பந்து வீசியது ராஜஸ்தான் தரப்பு. அதுதான் கேட்சுகள் விடப்பட்ட பாவத்துக்குரிய பரிகாரமாக மாறி, அவர்களுடைய வெற்றிக்கான நிகழ்தகவை, புள்ளிக் கணக்கில் அதிகரித்தது.ipl டி20-க்கு உரிய இலக்கணம் மாறாமல், இறுதி ஓவரில் நான்கு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வந்தது போட்டி. தியாகி கையில் பந்து தரப்பட, பவுண்டரி வின்னிங் ஷாட் = வெற்றி! இப்படித்தான் எழுதப்படப் போகிறது இறுதி ஓவரின் முதல் பந்து என்பதுதான் பலரது மனக்கணக்காக இருந்தது. ஆனால், நிலைமை மாறத் தொடங்கியது. மார்க்ரம் முதல் பந்தை டாட் பால் ஆக்க, இரண்டாவது பந்தில் ஒரு ரன் வந்து, ஸ்டிரைக் பூரணின் கையில் சென்றது. மூன்றாவது பந்து எட்ஜாகி, கீப்பர் கேட்சாகி, பூரணை வெளியே அனுப்ப, மூன்று பந்துகளில், மூன்று ரன்கள் என 'கேம் இஸ் ஆன்' என ரசிகர்களை இருக்கை நுனிக்கு உந்தித் தள்ளியது தியாகியின் பந்துவீச்சு. நான்காவது பந்தை ஹூடா டாட் பாலாக்க, ஐந்தாவது பந்து அவரது விக்கெட்டை பலி வாங்கி, காற்றில் பரபரப்பைக் கூட்டி, இறுதிப் பந்தில், மூன்று ரன்கள் வேண்டுமென்ற நிலைக்குச் சென்றது. ஸ்ட்ரைக் ஃபேபியனிடம் வர, சிக்ஸர் அல்லது பவுண்டரியோடு முடித்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட, அந்தப் பந்தும் டாட் பாலாகி, இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றது. எதிர்பாராததெல்லாம் நடந்தேறி, தியாகியின் தாக்கத்தில், த்ரில் வெற்றியைச் சுவைத்தது ராஜஸ்தான். இரண்டு பக்கமுமே பல தவறுகள் செய்யப்பட்டு, வெறுத்துப் போய், "இரண்டு அணியுமே தோற்றதாக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா?!' என பொது ரசிகர்களை நொந்து போக வைத்தாலும், இறுதியில், குறைவான தவறைச் செய்த ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இந்த ஒரு வெற்றி, ராஜஸ்தானை ஐந்தாவது இடத்துக்கு முன்னேற்றி இருந்தாலும், அங்கிருந்து, மேலேற இன்னமும் நிரம்பவே தேற வேண்டும் சாம்சன் அண்ட் கோ. அப்படி இல்லையெனில், அடுத்தடுத்த அணிகளால் கொத்தப்பட்டு, மறுபடியும் அடியில் தேங்க வேண்டியதுதான்.
http://dlvr.it/S85Q2n

Post a Comment

0 Comments