ஒரு யார்க்கர் வெல்லும்; ஒரு யார்க்கர் கொல்லும்! கார்த்திக் தியாகியின் அந்தக் கடைசி ஓவர் ஏன் ஸ்பெஷல்?

ஐபிஎல் இன் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. இந்த மூன்று போட்டிகளில் உச்சக்கட்ட பரபரப்பை எட்டிய போட்டியென்றால் அது ராஜஸ்தான் vs பஞ்சாப் போட்டியே. முழுமையாக ஆட்டத்தை தங்கள் கைக்குள் வைத்திருந்த பஞ்சாப் அணி கடைசி ஓவரில் 4 ரன்களை அடிக்க முடியாமல் கோட்டைவிட்டது.கார்த்திக் தியாகி வீசிய அந்த கடைசி ஓவர் ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கடைசி ஓவர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. 19 ஓவர்களாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பஞ்சாப் அணியை ஒரே ஓவரில் கார்த்திக் தியாகி எப்படி கடிவாளம் போட்டு நிறுத்தினார்? பஞ்சாபின் சேஸிங்கைப் பார்க்கும் போது ராஜஸ்தான் அணி இந்தப் போட்டியை வெல்வதற்கு 1% கூட வாய்ப்பில்லை என்றே தோன்றியிருக்கும். கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் மட்டுமே 120 ரன்களை எட்டியிருந்தது. அடுத்து வந்த பூரனும் மார்க்ரமும் பெரிய சிக்சர்களை அடித்து மிரட்டிக் கொண்டிருந்தனர். இப்படியான சூழலில் ராஜஸ்தான் வெற்றி பெறும் என நினைப்பதெல்லாம் கற்பனையின் உச்சமாக இருந்திருக்கும். ஆனால், கார்த்திக் தியாகி நினைத்தார். நிகழ்த்தியும் காட்டினார். அந்த மேஜிக்கல் ஓவரில் பஞ்சாபை வீழ்த்த கார்த்திக் தியாகி கையில் எடுத்துக் கொண்ட அஸ்திரம் யார்க்கர்கள். அவர் வீசிய இரண்டு யார்க்கர்கள்தான் நேற்று ராஜஸ்தானுக்கு அசாத்திய வெற்றியை பெற்று கொடுத்திருந்தது.தோனிதோனிநல்ல வேகத்தில் துல்லியமாக வரும் யார்க்கரை என்னாலும் சிக்ஸர் அடிக்க முடியாது. ஆனால், பௌலர்களால் எப்போதுமே அப்படி ஒரு யார்க்கரை வீச முடியாது. அவர்கள் தவறவிடும்போது நான் சிக்ஸராக்கிவிடுவேன். யார்க்கர்கள் குறித்து தோனி சொன்ன கருத்து இது. இப்போது கார்த்திக் தியாகி விஷயத்திற்கு வருவோம். கடைசி ஓவர் 4 ரன்களை டிஃபண்ட் செய்ய வேண்டும். டி20 போட்டிகளில் 90% சாத்தியமில்லாத டாஸ்க். பந்து கார்த்திக்கின் கைகளுக்கு செல்கிறது. கிரீஸில் எய்டன் மார்க்ரம் இருக்கிறார். ஏற்கெனவே ஓர் இமாலய சிக்ஸரை அடித்து ஆச்சர்யப்படுத்தியிருந்தார். ஒரே ஹிட்டில் மேட்ச்சை முடித்துவிடும் தொனியில் பேட்டை பிடித்திருந்தார். முதல்பந்தே யார்க்கராக வீச வேண்டும் என கார்த்திக் முடிவெடுத்தார். வீசினார். ஆனால், அது யார்க்கராக அமையவில்லை. மிஸ் ஆகி லோ ஃபுல் டாஸாக மாறியிருந்தது. 134.5 கி.மீ வேகமே வீசியிருந்தார். தோனி பாஷையில் சொல்ல வேண்டுமென்றால், சுமாரான வேகத்தில் லெந்தை மிஸ் செய்து பௌலர் யார்க்கர் வீசுகிறேன் என சொதப்பிவிட்டார். இது பேட்ஸ்மேனுக்கான பந்து. பேட்ஸ்மேன் அதை க்ரவுண்டுக்கு வெளியே பறக்கவிட்டிருக்க வேண்டும். ஆனால், அதிர்ஷ்டவசமாக மார்க்ரம் அதை சிங்கிள் கூட தட்டியிருக்கவில்லை. முதல் பந்தில் யார்க்கர் சரியாக விழவில்லை. மீண்டும் யார்க்கருக்கு முயற்சி செய்து அது சரியாக விழவில்லையென்றால், இரண்டாவது முறையாகவும் மார்க்ரம் தவறவிடுவாரா என்ன? ஒரே ஹிட்டில் மேட்ச்சை முடித்துவிடுவார். அதனால் இரண்டாவது பந்தில் யார்க்கர் வேண்டாம் என கார்த்திக் முடிவெடுத்தார். நல்ல வேகத்தில் நல்ல லெந்த்தில் ஒரு பந்தை வீசினார். மார்க்ரம் சிரமமே இல்லாமல் சிங்கிள் தட்டினார். இப்போது 4 பந்துகளில் 3 ரன்கள் தேவை. ஸ்ட்ரைக்கில் நிக்கோலஸ் பூரன் இருந்தார். நல்ல லெந்த் பால்களாக வீசினால் மூன்று பந்தில் மூன்று சிங்கிள்கள் எடுத்து கூட பஞ்சாப் வென்றிருக்கும். கார்த்திக் தியாகி மீது பெரிதாக யாரும் குறை சொல்ல போவதும் இல்லை. அவ்வளவு நேரம் சொதப்பி விட்டு கடைசி ஓவரில் 4 ரன்களை டிஃபண்ட் செய்யவில்லை என்பதற்காகவா அவரைத் திட்ட போகிறார்கள்? நிச்சயமாக இல்லை. ஆனால், அப்படித் தோல்வியை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பான மனநிலையோடு வீசியிருந்தால் கார்த்திக் தியாகி கூட்டத்தில் ஒருவராகக் கரைந்து போயிருப்பார். அவர் தனித்து தெரிய காரணம் அவர் எடுத்த அந்த ரிஸ்க்! பூரன்முதல் பந்தில் யார்க்கர் மிஸ் ஆனது. மார்க்ரம் எதோ ஒரு நிலையில் அந்தப் பந்தை தவறவிட்டுவிட்டார். ஆனால், இப்போது ஸ்ட்ரைக்கில் இருப்பது பூரன். அவருக்கு அப்படியெல்லாம் லோ ஃபுல் டாஸ் கிடைத்தால் பந்து துபாயிலிருந்து அபுதாபிக்கு பறந்திருக்கும். பனியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. துல்லியமான யார்க்கரை வீசுவது ரொம்பவே கடினமான டாஸ்க் என கமெண்ட்ரியிலும் அழுத்தத்தை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். பரவாயில்லை, சம்பிரதாயத்திற்கு கடைசி ஓவரை வீசிவிட்டு செல்வதற்கு எதோ முயன்று பார்த்து தோற்கலாம் என்ற நிலைக்கு கார்த்திக் வந்து சேர்ந்தார். Also Read: IPL : பாவம் பஞ்சாபியன்ஸ்…யார் சிறப்பாகத் தோற்பது என்பதில் போட்டாபோட்டி...அப்புறம் என்ன நடந்துச்சுனா? மூன்றாவது பந்தை வீச ஓடி வருகிறார். பூரன் பேட்டை வீசத் தயாராக இருந்தார். 140 கி.மீ வேகத்தில் சரியாக கிரீஸுக்கு முன்பாக ஏவுகணையை போல அந்த யார்க்கர் இறங்கியது.தோனியின் கூற்றுப்படியே இந்த யார்க்கரில் வெறித்தனமான வேகம் இருந்தது. துல்லியம் இருந்தது. ரிசல்ட்டும் தோனி சொன்னதை போல பௌலருக்கு சாதகமாகவே அமைந்தது. ஆம், பூரன் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் ஆனார். அடுத்த இரண்டு பந்துகள் ஒயிட் லைனை குறி வைத்து வீசுகிறார். ஒன்றில் தீபக் ஹுடா எட்ஜ்ஜாகி சாம்சனிடம் கேட்ச் ஆனார். கடைசி ஒரே ஒரு பந்து மீதமிருக்கிறது. மூன்று ரன்கள் தேவை. ஸ்ட்ரைக்கில் ஃபேபியன் ஆலன் இருக்கிறார். இவரும் அக்மார்க் கரீபிய பிக் ஹிட்டர். கார்த்திக் தியாகி மீண்டும் முடிவெடுக்க வேண்டிய தருணம் வருகிறது. யார்க்கரா இல்லை குட் லெந்தா? பனியின் தாக்கம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தது. இத்தனை நேரம் சோர்ந்து போயிருந்த ராஜஸ்தான் முகாம் இப்போது கார்த்திக்கிற்காக எழுந்து நின்று கரகோஷம் செய்து கொண்டிருக்கிறது. பனியோடு இந்தக் கரகோஷங்கள் வேறு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கிறது. ஆனாலும், கார்த்திக் தியாகி யார்க்கரை வீச வேண்டும் என்ற முடிவுக்கே வருகிறார். சீறி பாய்ந்து ஓடி வருகிறார். பூரனுக்கு வீசியதை போன்றே 140.5 கி.மீ வேகத்தில் இன்னும் துல்லியமாக இன்னொரு யார்க்கரை இறக்கினார்.கார்த்திக் தியாகிகண்ணிமைக்கும் நேரத்தில் பந்து ஆலனை கடந்து சென்றது. அவரால் அதை தொடக்கூட முடியவில்லை. அத்தனை வேகம்... அத்தனை துல்லியம். சரியாக ஸ்டம்ப் லைனில் வீசியிருந்தால் ஸ்டம்ப் தெறித்திருக்கும்! கடைசி ஓவரில் ஒரே ஒரு ரன்னை மட்டுமே கொடுத்து ராஜஸ்தான் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார் கார்த்திக் தியாகி. இந்த சீசனின் இரண்டாம் பாதியில் இதுவரை நடைபெற்று முடிந்திருக்கும் மூன்று போட்டிகளையும் ஒரே படத்தின் மூன்று கதைகளாக கற்பனை செய்து கொள்ளுங்கள். சமீபத்தில் வெளியான 'கசடதபற' போல! இந்த மூன்றும் வெவ்வேறு கதைகளை கொண்டவை. வெவ்வேறு மைய கதாபாத்திரங்களை கொண்டவை. ஆனால், இந்த மூன்று கதையையும் இணைக்கும் அதாவது மூன்று மேட்ச்சையும் இணைக்கும் மையப்புள்ளி எதுவென்று தேடிப்பார்த்தால் அது தோனியின் யார்க்கர் தத்துவமே!ருத்துராஜ் கெய்க்வாட்கதை 1: முதல் போட்டி: சென்னை vs மும்பை எப்போதும் யார்க்கர்களை நன்றாக வீசும் ட்ரெண்ட் போல்ட்டும் பும்ராவும் ருத்ராஜுக்கு எதிராகத் துல்லியமாக யார்க்கரை வீச கடுமையாக திணறினார். டெத் ஓவரில் யார்க்கர் வீசுகிறேன் என லோ ஃபுல் டாஸாக வீசி சொதப்பியிருந்தனர். ருத்ராஜ் அடித்திருந்த நான்கு சிக்ஸர்களில் மூன்று சிக்ஸர்கள் பும்ரா மற்றும் போல்ட் யார்க்கராக வீச நினைத்து சொதப்பிய பந்துகளில் வந்தவை. அவர்கள் வீச நினைத்தபடியே 50% டெலிவரிக்களையாவது துல்லியமான யார்க்கராக வீசியிருந்தால் மும்பை அணி அந்தப் போட்டியையே கூட வென்றிருக்கலாம்.ரஸல்கதை 2: இரண்டாவது போட்டி: கொல்கத்தா vs பெங்களூர் கோலி, படிக்கல் அவுட் ஆன பிறகு டீவில்லியர்ஸ் கிரீஸுக்குள் வருகிறார். அதுவரை சுமாரான வேகத்தில் குட் லெந்தில் வீசிக்கொண்டிருந்த ரஸல், டீவில்லியர்ஸுக்கு மட்டும் வேகத்தை கூட்டி காலுக்குள் யார்க்கரை வீசுகிறார். டீவில்லியர்ஸ் முதல் பந்திலேயே ஸ்டம்பைப் பறிகொடுத்து டக் அவுட் ஆனார். டீவில்லியர்ஸ் சந்திக்காத யார்க்கர்களா? ஆனால், அப்படி ஒரு கச்சிதமான யார்க்கரிடம் டீவில்லியர்ஸே செய்வதறியாது தடுமாறித்தான் போயிருந்தார்.கார்த்திக் தியாகிகதை 3: மூன்றாவது போட்டி: ராஜஸ்தான் vs பஞ்சாப் மேலே குறிப்பிட்ட கார்த்திக் தியாகியின் கடைசி ஓவர். இந்த மூன்று கதைகளும், யார்க்கர்களிலும் அது வீசப்பட்ட முறையிலுமே ஒரு புள்ளியில் வந்து இணைகின்றன. வேகப்பந்து வீச்சாளர்களுக்குக் கிடைத்திருக்கும் நிகரற்ற ஆயுதம் யார்க்கர்கள். அது சரியான வேகத்துடனும் துல்லியத்துடனும் வீசப்படும்பட்சத்தில் 360 டிகிரி ஷாட் ஆடும் டீவில்லியர்ஸே தடுமாறி போவார். ஓவருக்கு 4 ரன்களை டிஃபண்ட் செய்ய வேண்டுமென்றாலும் செய்து கொடுக்கும். ஆனால், கன்ட்ரோல் இல்லாமல் தவறாக வீசும்போது 24 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அணியையும் (மும்பை) தோல்வியை நோக்கிக் கொண்டு சென்றுவிடும். ஒரு யார்க்கர் வெல்லும்; ஒரு யார்க்கர் கொல்லும்!
http://dlvr.it/S85Q4m

Post a Comment

0 Comments