Rajasthan Royals: `அயர்ச்சியான அணுகுமுறை; சொதப்பும் வீரர்கள்!' - ராஜஸ்தான் ஏன் இப்படி தோற்கிறது?

`எங்களின் தோல்வியை முதலில் நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். நான்கு போட்டிகளைத் தொடர்ந்து தோற்றுவிட்டோம். ட்ரெஸ்ஸிங் ரூமில் உட்காந்து நாங்கள் எங்கே தவறவிடுகிறோம் என யோசிக்க வேண்டும். எங்கள் அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு போராட வேண்டும்.' என வேதனையில் குமுறியிருக்கிறார் சஞ்சு சாம்சன்.Rajasthan

அவர்களுக்கு கொஞ்சம் வித்தியாசமான சூழ்நிலை இது. புள்ளிப்பட்டியலில் கொல்கத்தாவுக்குப் பிறகு அந்த Q மார்க்கை வாங்கி ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெற்று விட்டது. ஆனாலும் அவர்களால் அதைக் கொண்டாட முடியவில்லை. தொடர்ச்சியாக 4 தோல்விகள். புயல் வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அதளபாதாளத்தில் விழுந்திருக்கிறார்கள். என்னதான் காரணம்? அந்த அணிக்கு என்னதான் நடந்தது?

ராஜஸ்தான் அணியின் வழக்கமான பாணிதான் இது. முன்பு சாம்சனுக்கு ஒரு பாணி உண்டு. ஒரு சீசனை மிகச்சிறப்பாக தொடங்குவார். இரண்டு மூன்று போட்டிகளில் வெளுத்துவிடுவார். பெரிய ஸ்கோர் அடிப்பார். அந்த 3 போட்டிகளை கடந்த பிறகு ஒன்றுமே செய்யமாட்டார். முழுவதுமே சொதப்பல்தான். அவரிடம் ஒரு சீரான செயல்பாட்டை பார்க்கவே முடியாது. இப்போது அதை சரி செய்துகொண்டார். ஆனால், அந்த வியாதி இப்போது அணிக்குத் தொற்றிக்கொண்டது போல.

முதல் பாதி முழுவதும் பிரமாதப்படுத்தினார்கள். முதல் 9 போட்டிகளில் 8 போட்டிகளை வென்றிருந்தார்கள். புள்ளிப்பட்டியலில் மேற்பகுதியில் மட்டுமே இருந்து வந்தனர். திடீரென சறுக்கிவிட்டனர். காரணம், சாம்சனின் பேச்சிலேயே இருக்கிறது. ராஜஸ்தான் அணியில் மேட்ச் வின்னர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எதாவது சிக்கல் ஏற்பட்டால் உள்ளே இறங்கி ஒரே ஆளாக போட்டியை மாற்றிவிடுவார்கள். ஒருவர் சொதப்பினாலும் இன்னொருவர் அடித்துவிடுவார். பட்லர் சதமடித்து போட்டியை வெல்லவைப்பார். இன்னொரு இக்கட்டான கட்டத்தில் சாம்சன் நின்று பொறுப்பாக கேப்டன்ஸ் இன்னிங்ஸை ஆடி வெல்ல வைப்பார். ரியான் பராக் பல போட்டிகளில் சிறப்பாக ஆடியிருக்கிறார். சந்தீப் சர்மா ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசி வெல்ல வைப்பார். ஒரு போட்டியில் சஹால் வெல்ல வைப்பார். இதுதான் அவர்களின் நிலைமையாக இருந்தது. இப்போது அப்படி யாரும் ஆடவில்லை என்பதே பிரச்சனை. Buttler

தோற்றுப்போயிருக்கும் 4 போட்டிகளிலுமே ஒப்பனிங் கூட்டணி மட்டமாகத்தான் ஆடியிருக்கிறது. இந்த 4 போட்டிகளிலும் ஓப்பனிங் கூட்டணி ஒரு முறை கூட அரைசதத்தைத் தாண்டவில்லை. சொல்லப்போனால் இந்த சீசன் முழுவதுமே யாஷஸ்வியும் பட்லரும் சுமாரான ஓப்பனிங் கூட்டணியாகத்தான் இருந்தனர். இப்போது பட்லரும் இல்லை. அவருக்குப் பதில் கேட்மோர் என்கிற வீரரை இறக்கியிருக்கிறார்கள். திறமைசாலிதான். நிறைய லீக் போட்டிகளில் ஆடியவர். அனுபவமிக்கவர். டி20 க்கு ஏற்றவர். ஆனாலும், ப்ளே ஆப்ஸ் நெருக்கத்தில் அவரை இறக்கிவிட்டு உடனடியாக டச்சுக்கு வர சொல்வதில் நியாயமே இல்லை. ஜெய்ஸ்வாலும் பார்மில் இல்லை. இந்த 4 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் அரைசதம் அடித்திருக்கிறார். மற்ற போட்டிகளிலெல்லாம் கடுமையாக சொதப்பியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக அந்த பேட்டிங் யூனிட்டிடமே ஒரு இன்டண்ட் இல்லாததைப் போல தெரிகிறது.

சூழல்களைப் புரிந்துகொள்கிறேன் என நினைத்து ஓவராக சிந்தித்து தவறுகளைச் செய்கிறார்கள். சென்னையில் 140 க்கு நெருக்கமான ஸ்கோரைத்தான் அடித்திருந்தார்கள். பிட்ச் மெதுவாக இருக்கும். பந்து நன்றாக திரும்பும். ஸ்லோயர் ஒன்கள் எடுபடும். இந்த விஷயங்களைத்தான் ராஜஸ்தான் அணி மனதில் ஓட்டிக்கொண்டே இருந்தது. இவற்றை சமாளித்தால் சிறப்பாக ஆடிவிடலாம் என நினைத்து ஒரு தற்காப்பு மனநிலையிலேயே ஆடியிருப்பார்கள். இதுதான் பிரச்சனை. 8 போட்டிகளை வென்று ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெற்றுவிட்ட ஒரு அணியிடம் இருக்க வேண்டிய இலகுவான தன்மையும் வெளிக்காட்ட வேண்டிய சுதந்திரமும் அவர்களிடம் இல்லாததைப் போல இருக்கிறது.

பேட்டிங்கை போலவே பௌலிங்கும் பிரச்சனைதான். கடந்த இரண்டு போட்டிகளாக 140 க்கு நெருக்கமான ஸ்கோர்களைத்தான் ராஜஸ்தான் அணி எடுத்திருக்கிறது. அந்த ஸ்கோர்களை டிபண்ட் செய்ய வேண்டுமெனில் பவர்ப்ளேயில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். அதையும் ராஜஸ்தான் பௌலர்கள் செய்ய தவறுகின்றனர். சென்னைக்கு எதிரான போட்டியில் மொத்தமாகவே பவர்ப்ளேயில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும்தான் வீழ்த்தியிருக்கிறார்கள். ட்ரெண்ட் போல்டும் சரி சந்தீப் சர்மாவும் சரி பவர்ப்ளேயில் நிறைய விக்கெட்டுகளை எடுக்கத் தவறியிருந்தனர். 140 ஐ சேஸ் செய்கிற அணிகள் பவர்ப்ளேயில் சௌகரியமாக ஆடிவிட்டால் அதன்பிறகு எந்த பிரச்னையுமில்லாமல் சேஸ் செய்துவிடுவார்கள். பஞ்சாபுக்கு எதிராக பவர்ப்ளேயில் நன்றாக வீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். போட்டி கையில் இருக்கும்போது மிடில் ஓவர்களில் கடுமையாக சொதப்பினார்கள்.

ராஜஸ்தான் ப்ளே ஆப்ஸூக்கு செல்வது உறுதி. ஆனால், அவர்கள் முதல் பாதியில் ஆடிய ஆட்டத்திற்கு முதல் இரண்டு இடங்களைப் பிடித்து சௌகரியமாக ப்ளே ஆப்ஸூக்குள் செல்ல வேண்டும். அப்படியில்லாமல் மூன்று அல்லது நான்காவது இடத்தைப் பிடித்து ப்ளே ஆப்ஸூக்குள் சென்றால் அதுவே பெரிய தோல்விதான். மேலும் ப்ளே ஆப்ஸூக்குள் தோல்வி முகத்தோடு செல்லும் அங்கேயும் ஒருவித அயர்ச்சியே ஏற்படும். 'ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனை தொடங்கிய விதத்தை எண்ணி ஆச்சர்யப்பட்டேன். அவர்கள் அணியில் பலவீனமே இல்லாதது போல இருந்தது. ஆனால், திடீரென எல்லாவற்றையும் இழந்தது போல நிற்கிறார்கள். பஞ்சாபுக்கு எதிரான போட்டியிலெல்லாம் ராஜஸ்தான் அணியின் எந்தவொரு வீரரும் போராடத் தயாராக இல்லை.' என ஷேன் வாட்சன் கூறியிருக்கிறார்.Shane Watson

ராஜஸ்தான் அணி திறமையான வீரர்களை உள்ளடக்கிய அணியாக இருக்கிறது. ஏறக்குறைய எல்லா பாக்ஸ்களையும் டிக் அடித்திருக்கும் அணி. ஆனால், அவர்களின் அணுகுமுறை பிரச்னையாக இருக்கிறது. தைரியமாக அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடும்பட்சத்தில் ராஜஸ்தான் அணி நிச்சயமாக சரிவிலிருந்து மீள முடியும்.

ராஜஸ்தான் அணியின் செய்ய வேண்டியது என்ன? உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!


http://dlvr.it/T6z28R

Post a Comment

0 Comments