Mumbai Indians : பும்ராவுக்கு ஓய்வு கிடையாது; மும்பை அணி செய்வது நியாயம்தானா?

ஜூன் 2 ஆம் தேதி உலகக்கோப்பைத் தொடர் தொடங்கவிருக்கிறது. அனைத்து அணிகளும் அதைப் பிரதானமாகக் கொண்டு தயாராகி வருகின்றனர். இந்திய வீரர்களும் ஐ.பி.எல் ஐ முடித்த கையோடு உலகக்கோப்பைக்குப் பயணப்படுவர்.

ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. என்னவெனில், வீரர்கள் தொடர்ச்சியாக போட்டிகளில் ஆடிக்கொண்டிருக்கும்போது அவர்கள் காயமடைவதற்கோ அல்லது ஒருவித அயர்ச்சியான மனநிலைக்கு செல்லவோ வாய்ப்பிருக்கிறது. அப்படி நடக்கும்பட்சத்தில் அது உலகக்கோப்பையில் இந்திய அணிக்குதான் பாதிப்பாக அமையும்.பும்ராகுறிப்பாக, ஏற்கெனவே அதிக முறை காயமடைந்து காயமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ள வீரர்களும் ஐ.பி.எல் இல் இன்னமும் ஆடி வருகின்றனர். அவர்கள் விஷயத்தில்தான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். உதாரணம், பும்ரா.

மும்பை இந்தியன்ஸ் அணி 99.99 சதவிகிதம் ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்துவிட்டது. ஆனால், இன்னமும் பும்ராவுக்கு ஓய்வே கொடுக்காமல் அத்தனை போட்டிகளிலும் ஆட வைத்துக் கொண்டிருக்கிறது. இதுதான் இப்போது பெரிய பிரச்னை. மும்பை அணி செய்வது நியாயமா?

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், சிராஜ், பும்ரா என மூன்றே மூன்று முழுநேர வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ரிசர்வ் பட்டியலில் கலீல் அஹமதுவும் ஆவேஷ் கானும் இருக்கிறார்கள். இந்த 5 பேரில் சந்தேகமே இல்லாமல் பும்ரா மட்டும்தான் முழுமையான ஃபார்மில் இருக்கிறார். மற்ற யாருமே மெச்சிக்கொள்ளும் அளவுக்கு பார்மில் இல்லை. ஒரு போட்டியில் சிறப்பாக வீசுகிறார்கள். அடுத்த போட்டியிலேயே கோட்டைவிடுகிறார்கள். ஆக, உலகக்கோப்பையில் பும்ராதான் இந்தியாவின் மிகப்பெரிய நம்பிக்கை. ஒவ்வொரு போட்டியிலும் அவர் வீசப்போகும் 4 ஓவர்கள்தான் இந்தியாவின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கப் போகிறது.

அப்படியிருக்க அவருக்கு சரியான இளைப்பாறலைக் கொடுத்து துடிப்பாக வைத்திருக்க வேண்டியது பிசிசிஐ யின் கடமை. அதுதான் இங்கே நடக்காமல் இருக்கிறது.

மும்பை அணி ஆடியிருக்கும் 12 போட்டிகளிலும் பும்ரா ஆடியிருக்கிறார். போட்டிக்கு 4 ஓவர்கள் எனில் 48 ஓவர்கள். பும்ரா 47.5 ஓவர்களை வீசியிருக்கிறார். பும்ராவிடம் முழுமையாக வேலை வாங்கியிருக்கிறது மும்பை அணி. 18 விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்திருக்கிறார். பர்ப்பிள் கேப்பும் அவரிடம்தான் இருக்கிறது. பும்ரா சிறப்பாகச் செயல்பட்டாலும் மும்பை அணி சிறப்பாக செயல்படவில்லை. ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்துவிட்டது. ஆனால், இன்னமும் அவர்களுக்கு பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கும் எண்ணமே இல்லை.

நேற்றைய போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பொலார்ட் வந்திருந்தார். அவரிடம் பும்ராவுக்கு ஓய்வளிப்பதைப் பற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, 'இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் பொறுப்பு எனக்கு இல்லை. ஆனாலும் சொல்கிறேன். நாம் ரொம்பவே தூரமாக உள்ள விஷயங்களுக்காக யோசித்தால் நம்முடைய செயல்பாடுகள்தான் பாதிக்கப்படும்.எல்லாருமே இங்கே முழுமையாக ஐ.பி.எல் ஐ ஆடத்தான் வந்திருக்கிறோம். இன்னும் 2 போட்டிகள் எங்களுக்கு இருக்கிறது. அதெல்லாம் முடிந்தபிறகு இதைப் பற்றி யோசிக்கலாம். உலகக்கோப்பையில் இருக்கும் வீரர்களுக்கு நான்கைந்து போட்டிகளுக்கு ஓய்வளித்திருந்தோம் எனில் நீங்கள் எங்களை வேறுவிதமாக கேட்பீர்கள். உங்களுக்கு உலகக்கோப்பைதான் முக்கியமா ஐ.பி.எல் முக்கியம் இல்லையா என்பீர்கள்.

மே 17 ஆம் தேதியோடு எல்லாம் முடிந்துவிடும் என நினைக்கிறேன். அதன்பிறகு வீரர்கள் நிறைய ஓய்வெடுத்துவிட்டு உலகக்கோப்பைக்குச் செல்லலாம்.' என விரிவாகவே பதில் கூறியிருந்தார்.

ஆக, மும்பை அணி பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கும் திட்டத்திலேயே இல்லை என்பது தெரிகிறது. பும்ரா காயமடைவதற்கு அத்தனை வாய்ப்புகளும் உடைய வீரர். ஏற்கனவே பலமுறை காயமடைந்திருக்கிறார். 2019 இல் ஆரம்பித்து முதுகில் ஏற்பட்ட காயத்திற்காக இடையில் பல தொடர்களைத் தவறவிட்டிருக்கிறார். குறிப்பாக 2022 இடையில் தொடங்கி 2023 உலகக்கோப்பை ஒன்றிரண்டு மாதங்கள் முன்பு வரை ஓராண்டு முழுமையாக கிரிக்கெட் ஆடாமலே இருந்தார். கடந்த ஐ.பி.எல் சீசனையும் தவறவிட்டிருந்தார். உடல்ரீதியாக காயங்களை எதிர்கொள்வதைத் தாண்டி மனரீதியாகவும் அயர்ச்சியடையகட கூடியவர் பும்ரா.2021 இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த உலகக்கோப்பைக்கு ஐ.பி.எல் ஐ முடித்த கையோடுதான் இந்தியா சென்றது. அரையிறுதிக்குக் கூட செல்லாமல் தர்ம அடி வாங்கி வெளியேறியது. அந்தத் தொடர் முடிந்த போதே பலரும் வீரர்களின் பணிச்சுமை பற்றி அதிகமாக பேசினர்.

ஐ.பி.எல் மாதிரி ஒரு பெரிய தொடரை ஆடிவிட்டு உடனே உலகக்கோப்பைக்கு வருவது வீரர்களுக்கு மனரீதியாக அயர்ச்சியைக் கொடுக்கும் என விமர்சனம் எழுந்தது. அந்த சமயத்தில் பும்ரா மட்டும்தான் தான் மனரீதியாக அயர்ச்சியாக இருப்பதாக வெளிப்படையாக முன் வந்து பேசினார். மும்பை அணிக்காக பும்ரா 47.5 ஓவர்களை வீசியிருக்கிறார். முழுமையாக ஆடியிருக்கிறார். இதைத் தாண்டி அந்த அணிக்காக அவர் மனரீதியாகவும் அழுத்தங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டிய சூழலில் இருந்தார். அவர் மட்டும்தான் விக்கெட் எடுக்கிறார் என்பதால் அவர் மீதுதான் அத்தனை பொறுப்பும் இருந்தது. அத்தனை அழுத்தமும் இருந்தது.இங்கே இப்படி உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உச்சக்கட்ட உழைப்பைக் கொடுத்துவிட்டு உலகக்கோப்பையிலும் அவர் அதையே செய்ய வேண்டும் என நினைப்பது அநியாயம். அதற்காகத்தான் அவருக்கு ஓய்வு வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.Bumrah

ஆனால், மும்பை அணி அப்படியொரு ஐடியாவில் இருப்பதாகவே தெரியவில்லை. இத்தனைக்கும் உலகக்கோப்பை அணியின் கேப்டனும் துணை கேப்டனும் அதே அணியில்தான் இருக்கிறார்கள். இந்திய அணியின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

பும்ரா மும்பை அணிக்கு நன்றாக ஆடுவதைவிட இந்திய அணிக்கு நன்றாக ஆடுவதுதான் முக்கியம்.


http://dlvr.it/T6X1DY

Post a Comment

0 Comments