KKRvMI: `ஏமாற்றிய ரோஹித்; கலக்கிய கம்பீர்!' உள்ளே நுழைந்த கொல்கத்தா; மீண்டும் தோற்ற மும்பை!

கம்பீரின் வருகைக்குப் பின் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் வெற்றி நடையாக இந்தாண்டு பிளே ஆஃப்பிற்கு செல்லும் முதல் அணியாக ஜொலித்துள்ளது கேகேஆர்.

மழை அச்சுறுத்தலால் போட்டியே நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால் கைவிடப்படுமளவு குறுக்கிடாமல் மழை போட்டி நடத்த வழிவிட, தடைக்குப் பிறகு இருபுறமும் 16 ஓவர்களைக் கொண்ட போட்டி என்று முடிவு செய்யப்பட்டு ஆட்டம் தொடங்கியது. இரண்டு நாளாக மழை பெய்து மைதானம் மூடப்பட்டு இருந்ததால் டாஸ் ஜெயித்த பாண்டியா எவ்வித தயக்கமும் இல்லாமல் பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார். பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கும் எண்ணமே எங்களிடம் இல்லை என்று இந்தப் போட்டியிலும் அவரைத் தொடர வைத்தனர்.

இப்போட்டியை வென்றால் பிளே ஆஃப்பிற்கு முதல் அணியாகத் தகுதி பெறலாம் என்ற வாய்ப்பு இருந்ததால் கேகேஆர் எப்படியேனும் இப்போட்டியை வென்று பதற்றமே இல்லாமல் மீதமிருக்கும் இரு போட்டிகளில் ஆடலாம் என்ற எண்ணத்தோடே ஆட வந்தது. எதிர்பார்க்கப்பட்டது போலவே மைதானம் பௌலிங்கிற்கு ஒத்துழைக்க கேகேஆர் பேட்ஸ்மேன்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்தத் தொடர் முழுவதும் ஓப்பனிங்கில் அதிரடி காட்டிவரும் சால்ட் மற்றும் நரைன் ஜோடியின் வாணவேடிக்கையைக் காண ரசிகர்கள் ஆயத்தமாக, சொற்ப ரன்களில் உடைந்த பார்ட்னர்ஷிப்பும், வெளியேறிய இரு ஓப்பனர்களும் எதிர்பார்ப்புடன் போட்டியைக் காண வந்திருந்த கொல்கத்தா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்தனர்.

துசாரா வீசிய முதல் ஓவரிலயே சால்ட் ஆட்டமிழக்க இரண்டாவது ஓவர் முதல் பந்தில் நரைனை பும்ரா காலி செய்தார், அதுவும் எப்படி அவரை ஆடவே விடாமல் பந்து வெளியே போகிறது என்று வேடிக்கை பார்க்க வைத்து ஏர் ஸ்விங்கில் ஸ்டம்ப்பைத் தகர்த்தார். ஸ்ரேயாஸை அக்ராஸ் ஆடச் செய்து லெக் ஸ்டம்ப்பைத் தகர்க்கச் செய்தார் புதுமுக வீரர் காம்போஜ். 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்துவிட அணியை வெங்கடேஷும் காயத்தில் இருந்து திரும்பிய நித்தீஷ் ராணாவும்தான் மீட்டெடுத்தனர். மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக என்றாலே எப்போதும் சிறப்பாக ஆடும் வெங்கடேஷ் இந்தப் போட்டியிலும் ஜொலிக்கத் தவறவில்லை, 200 ஸ்ட்ரைக்ரேட்டில், 21 பந்தில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சலுக்கான அடித்தளம் அருமையாக அமைக்கப்பட்டிருந்தது, 8-வது ஓவரில் இறங்கி, 16-வது ஓவர் வரை ஆடினால் பெரிய ஸ்கோர் வந்துவிடும் என்று நினைக்கையில் சாவ்லா 117kmph வேகத்தில் பந்து வீச, அதில் சிக்ஸர் அடிக்க முயன்று ரசலும் பெவிலியன் திரும்பினார். ராணாவும் ரசலுக்கு முன்பாகவே நடையைக் கட்டியிருக்க ஓரளவு டீசெண்ட் ஸ்கோர் எடுத்துத் தரக்கூடிய பொறுப்பு ரிங்கு சிங் மற்றும் ரமணதீப் சிங்கிடம் வந்து சேர்ந்தது. அவர்களும் இறுதி நேரத்தில் தங்களின் பினிஷிங் டச்சை சரியாகக் கொடுக்க ஸ்கோர் 157 ரன்கள் என வந்து நின்றிருந்தது.

16 ஓவரில் 158 ரன்கள் என்ற இலக்கை எட்ட வேண்டும் என்று பேட்டிங் ஆடத் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தனது பவர்பிளே ஆட்டத்தை சிறப்பாகவே முடிந்திருந்தது. இஷான் கிஷன் தனது அதிரடியைக் கட்டவிழ்க்க, 5 ஓவரில் 59 ரன்களை விக்கெட் இழப்பின்றி மும்பை எடுத்திருந்தது. மீதமிருக்கும் 11 ஓவர்களில் 99 ரன்களை எடுப்பது அத்தனை ஒன்றும் கடினமான காரியம் இல்லை என்பதால் மும்பை அணி அதனையும் துரிதமாக எட்டி வெற்றி பெற்று விடும் என்பது தான் அனைவரின் அனுமானமாக இருந்தது. ஆனால் பவர்பிளேவிற்குப் பிறகு ஆட்டம் கேகேஆர் பக்கம் மாறத் தொடங்கியது.

பேட்டிங்கில் செய்யாததை அணிக்காக பௌலிங்கில் நரைன் செய்திருந்தார். அவரது பந்தை இஷான் சிக்ஸர் அடிக்க முயல அது மிட் விக்கெட்டில் ரிங்கு சிங்கிடம் தஞ்சமடைய முதல் விக்கெட் விழுந்தது. இந்த சீசன் முழுவதும் தொடர்ந்து சோபிக்கத் தவறி வந்த ரோஹித் ஷர்மா மீண்டும் ஒருமுறை பந்துகளை வீணடித்து விட்டு ஆட்டமிழந்தார் .

மும்பை அணியின் கேப்டன்சி பிரச்னை பெரிதான காரணத்தால்தான் ரோஹித் சர்மா மோசமாக ஆடுகிறார் என்று சொல்லி அவரது ரசிகர்கள் வேண்டுமெனில் சமாதானங்களைச் சொல்லி சமாளிக்கலாம். அவரது ஃபார்ம் அவுட் கண்கூடாகத் தெரிகிறது என்பதே உண்மை. இருகோடுகள் தத்துவம் போல் இன்னபிற பிரச்னைகளால் இது பெரிதுபடுத்தப்படாமல் மறந்து கடக்கப்படுகிறது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் தலைவலி அல்ல, இதே ஃபார்ம் அடுத்த மாதம் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையிலும் தொடருமேயானால் இந்தியா மற்றும் ஒருமுறை கோப்பையின்றி வெறுங்கையோடு திரும்ப வேண்டிய சூழலை எதிர் கொள்ளும்.

இஷான் மற்றும் ரோஹித் தான் சென்று விட்டார்கள், சூர்யா அணியை மீட்பார் என்று எதிர்பார்த்தால் இந்த சீசன் முழுவதும் மிட் ஒவரில் பிரேக் த்ரூ கொடுக்கும் ரசல் பந்தில் அவரும் ஆட்டமிழக்க அவரை அடுத்து வந்த பாண்டியாவோ எனக்கும் பேட்டிங்கிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல நடையைக் கட்டினார். குஜராத் அணியில் ஆடும் போது எல்லாம் செகண்ட் டவுனில் ஆடி வந்த பாண்டியா ஆங்கரிங் ரோலில் செட் ஆகி அதில் இருந்து மீள முடியாமல் ஃபினிஷிங் ரோலில் இந்த சீசன் முழுவதும் திணறி அணியையும் மொத்தமாக ஃபினிஷ் செய்து விட்டார் என்பதே நிதர்சனம்.

சீட்டுக் கட்டு சரிவது போல் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்து கொண்டே இருந்தது, முதல் 5 ஓவர்களில் 59 ரன்களை எடுத்த அணி அடுத்த 9 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழுந்து வெறும் 58 ரன்களை மட்டும் எடுத்து இருந்தது. இறுதி இரண்டு ஓவர்களில் 41 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலைமையில் 15வது ஓவரில் 19 ரன்களை நமன் தீர் அடித்து சற்றே நம்பிக்கை அளித்தாலும் இறுதி ஓவரில் அடுத்தடுத்து நமன் தீர் மற்றும் திலக் வர்மாவை ஆட்டமிழக்கச் செய்து போட்டியை வென்று கொடுத்து விட்டார் ஹர்சித் ராணா.

18 புள்ளிகளை எடுத்து முதல் அணியாக பிளே ஆப்பிற்குத் தகுதி பெற்றுள்ளது கேகேஆர் அணி. கடந்த சில சீசன்களில் சரியாக செயல்படாத கேகேஆர் காம்பிர் வருகைக்குப் பிறகு புதுப்பொலிவு பெற்றுள்ளது. ஒவ்வொரு நகர்விலும் அதுவே பிரதிபலித்தது. நரைனை மீண்டும் ஓப்பனிங் ஆட வைத்து, பில் சால்ட்டை சரியான நேரத்தில் மாற்று வீரராக எடுத்து மொத்த அணியையும் ஒருங்கிணைந்து ஆடவைத்து பிளே ஆஃப்பிற்குத் தகுதி பெற வைத்துள்ளார் கம்பீர். 2022 மற்றும் 2023-ல் பயிற்சியாளராக லக்னோ அணியை வழிநடத்தி பிளே ஆஃப்பிற்கு அழைத்துச் சென்ற கம்பீர் தொடர்ச்சியாக இம்முறை அதனை கேகேஆரிலும் நிகழ்த்தியிருக்கிறார்.

மும்பை அணியோ ஓடும் கப்பலில் ஓராயிரம் இடங்களில் ஓட்டை என்ற ரீதியில் அணியில் ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்க மற்றும் ஒருமுறை தோல்வியைத் தழுவியுள்ளது.

மும்பையின் தொடர் தோல்விக்குக் காரணமென நீங்கள் நினைக்கும் காரணத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!


http://dlvr.it/T6m1M2

Post a Comment

0 Comments