இந்திய ஆண்கள் அணிக்கான தேர்வுக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கரை நியமித்திருக்கிறது பிசிசிஐ. இந்த ஆண்டின் இறுதியில் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் வைத்து நடக்கவிருக்கும் சூழலில் இந்திய கிரிக்கெட்டில் நடந்திருக்கும் முக்கியமான மாற்றம் இது.
உலகக்கோப்பைக்கான இந்திய அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவே தேர்வு செய்யவிருக்கிறது. இப்படியான சூழலில் அகர்கர் முன் இருக்கும் சவால்கள் என்னவென்பதை கொஞ்சம் விரிவாக அலசுவோம்.
45 வயதை எட்டியிருக்கும் அஜித் அகர்கர், இந்திய அணியில் ஒரு காலத்தில் மிக முக்கியமான வீரராக இருந்தவர். மிதவேகம் வீசக்கூடிய பந்துவீச்சாளராக மட்டுமல்லாமல் பேட்டிங்கிலுமே குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்தவர். கூடுதல் சுவாரஸ்யம் என்னவெனில், அகர்கர் இன்று வரைக்கும் ரசிகர்களால் நினைவில் வைக்கப்பட்டிருப்பதற்கு பேட்டிங்கில் அவர் ஆடிய சில முரட்டுத்தனமான இன்னிங்ஸ்களே காரணமாகும். ஒருநாள் போட்டி ஒன்றில் ஜிம்பாப்வேக்கு எதிராக 21 பந்துகளில் அடித்த அதிவேக அரைசதம் ஆகட்டும், டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸில் வைத்து அடித்த சதம் ஆகட்டும், இப்படியான இன்னிங்ஸ்களால்தான் அகர்கர் இன்றைக்கும் நம் நினைவில் இருக்கிறார்.Ajit Agarkar26 டெஸ்ட் போட்டிகளிலும் 191 ஒருநாள் போட்டிகளிலும் 4 டி20 போட்டிகளிலும் ஆடியிருக்கும் அகர்கர் 2007 வரை இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பிடித்துக் கொண்டிருந்தார்.
2007க்குப் பிறகு இளம் வீரரான தோனியின் கையில் அணி வந்தவுடன், அவர் தனக்கான அடுத்தக்கட்ட அணியை உருவாக்கத் தொடங்கினார். அதில் அகர்கருக்கு இடமில்லாமல் போனது. ஆனாலும், தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் ஆடிக்கொண்டுதான் இருந்தார். மும்பை அணிக்கு கேப்டனாகி ரஞ்சி கோப்பையையும் வென்று கொடுத்தார். 2013-14 வாக்கில் அத்தனை விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு, தொலைக்காட்சி வர்ணனை, சில அணிகளில் பயிற்சியாளர் பொறுப்பு என பவுண்டரிக்கு வெளியே பல வேலைகளையும் செய்து கொண்டிருந்தார். இடையில் மும்பை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகவும் இருந்தார். அப்போதுதான் சில அதிரடியான முடிவுகளையும் எடுத்தார்.Ajit Agarkarஃபார்ம் அவுட் ஆகி திணறி வந்த சூர்யகுமாரை அணியிலிருந்தே வெளியேற்றினார். இப்படியான நடவடிக்கைகளால் அகர்கர் ஒரு கறாரான அதிரடியான தலைவராக அறியப்பட்டார்.
ஆனால், மும்பையிலிருந்த சில க்ளப்கள், இவர் க்ளப் ஆட்டங்களை காணவே வரவில்லை எனப் புகார் கூறி இவரைப் பதவியிலிருந்து நீக்குமாறு அழுத்தம் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் அகர்கருடன் சேர்ந்து மொத்த தேர்வுக்குழுவுமே பதவி விலகியது. 2020-ம் ஆண்டில் இந்திய அணிக்கான தேர்வுக்குழுத் தலைவருக்கான தேடுதல் தொடங்கிய போது அஜித் அகர்கரும் அப்போது அந்தப் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அப்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன்பிறகு, ஐ.பி.எல்-இல் டெல்லி அணியின் உதவிப் பயிற்சியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில்தான் ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய சேத்தன் சர்மாவுக்குப் பிறகு பிசிசிஐ புதிய தேர்வுக்குழுத் தலைவரைத் தேடியது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காகவே டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் பதவியிலிருந்து அகர்கர் விலகினார். இப்போது தேர்வுக்குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.Ajit Agarkar
தேர்வுக்குழுவின் மீது ஏகப்பட்ட புகார்களும் சர்ச்சைகளும் சூழ்ந்திருக்கும் சமயத்தில் அகர்கர் அந்தப் பதவிக்கு வந்திருக்கிறார். ஆக, தேர்வுக்குழுவுக்கான நம்பகத்தன்மையையும் உறுதியையும் காக்க வேண்டியது அகர்கரின் முதல் கடமை. தேர்வுக்குழு தற்போதைய சூழலை மட்டுமே மனதில் வைத்து யோசிக்காமல் வருங்காலத்தையும் உள்ளடக்கிய ஒரு கனவோடும் கற்பனையோடும் அணியை வடிவமைக்க வேண்டும். சில முந்தைய தேர்வுக்குழுத் தலைவர்கள் செய்யத்தவறிய மிக முக்கியமான அம்சம் இது. ரோஹித் சர்மா, விராட் கோலி உட்பட சில முக்கியமான வீரர்கள் தங்களின் கடைசிக்கட்ட கிரிக்கெட்டை ஆடி வருகின்றனர். அவர்களை மெதுவாக அப்புறப்படுத்த தயாராகிவிட்டு அவர்களுக்கான மாற்று வீரர்களை பற்றி யோசித்தாக வேண்டும். இந்த விஷயத்தில் அகர்கர் சிறப்பாகச் செயல்படுவார் என்கிற நம்பிக்கை ஆரம்பத்திலேயே ஏற்பட்டிருக்கிறது. அகர்கர் தலைவராகப் பொறுப்பேற்று அவர் முதல் முதலாகத் தேர்வு செய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான டி20 அணியிலேயே சில நம்பிக்கைக் கீற்றுகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்களை விடுவித்து ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை உள்ளடக்கிய ஒரு அணியை அறிவித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த 2021, 2022 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி சரியான கலவையுடனே இல்லை. 2021-இல் ஐ.பி.எல்-இல் ஜொலித்த வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அணியை எடுத்து வைத்திருந்தார்கள். 2022-இல் அணியில் சஹால் போன்ற வீரர்கள் இருந்தும் அவரை பயன்படுத்தாமல் விட்டுச் சொதப்பினார்கள். போதிய இடக்கை பேட்டர்களை அணியில் எடுக்காமல் விட்டது என எக்கச்சக்க கோளாறுகளுடன்தான் இந்திய அணியைத் தேர்வு செய்திருந்தனர். அந்த தவற்றையெல்லாம் களையும் பொருட்டு அகர்கர் செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.Ajit Agarkar2019 வரைக்குமே தோனி துடிப்பாக சர்வதேச போட்டிகளில் ஆடி வந்தார். ஆனால், அகர்கர் 2014-15 வாக்கிலேயே தோனியின் ஃபார்மைக் குறிப்பிட்டு அவரை அணியிலிருந்து விலக்கிவிட்டு அடுத்தக்கட்ட வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். வெளியில் விமர்சகராக இருந்து அகர்கர் காட்டிய கறார்த்தனத்தை இப்போது தேர்வுக்குழுவுக்குள்ளும் காண்பிப்பாரா என்பதுதான் அத்தனை பேரின் கேள்வியாகவும் இருக்கிறது.
I will tell you one thing about Ajit Agarkar as selector. He will be diligent and honest. He might have strong opinions but they will come from a position of strength. I think it is a very good move.— Harsha Bhogle (@bhogleharsha) July 4, 2023
என ஹர்ஷா போக்லே நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்."தேர்வுக்குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அகர்கர் பற்றி ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். அவர் கடுமையான முயற்சிகளைச் செய்யக்கூடிய நேர்மையாளராக கட்டாயம் இருப்பார்!"
ஹர்ஷாவின் நம்பிக்கை பலிக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம். என்ன செய்யப்போகிறார் அகர்கர் பொறுத்திருந்து பார்ப்போம்.
http://dlvr.it/Srm44F
0 Comments
Thanks for reading