ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இந்த உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.இந்தியா முழுவதும் மொத்தமாக 10 மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருப்பதாக ஐ.சி.சி அறிவித்திருக்கிறது. இந்நிலையில் மற்ற மைதானங்களோடு ஒப்பிடுகையில் ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானம் புறக்கணிப்படுகிறதா எனும் கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.ICC World Cup 2023 Fixtures
தரம்சாலா, டெல்லி, லக்னோ, புனே, அகமதாபாத், மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா எனப் பத்து மைதானங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த 10 மைதானங்களில் ஹைதராபாத்தைத் தவிர மற்ற 9 மைதானங்களிலும் தலா 5 போட்டிகள் நடைபெறவிருக்கிறது. ஆனால்,ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் வெறும் 3 போட்டிகள் மட்டுமே நடைபெறவிருக்கின்றன. அந்த மூன்றில் இந்தியா ஆடும் ஒரு போட்டி கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.ICC World Cup 2023
பாகிஸ்தானும் குவாலிஃபையர் 1 மூலம் வரும் அணியும் மோதும் ஒரு போட்டி, நியூசிலாந்தும் குவாலிஃபையர் 1 மூலம் வரும் அணியும் மோதும் ஒரு போட்டி, பாகிஸ்தானும் குவாலிஃபையர் 2 மூலம் வரும் அணியும் மோதும் ஒரு போட்டி என மொத்தமாக மூன்று போட்டிகள் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. மூன்றில் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி ஆடும். மேலும், மூன்று போட்டிகளிலுமே தகுதிச்சுற்று மூலம் தேர்வாகி வரும் அணிகளே ஆடவிருக்கின்றன. இந்தப் போட்டிகள் வழக்கமாக சுவாரஸ்யம் குறைவான போட்டிகளாக, பெரிதாக ஈர்ப்புத்தன்மை இல்லாத போட்டிகளாகவே இருக்கும். அத்திப்பூத்தாற் போல எப்போதாவதுதான் தகுதிச்சுற்றிலிருந்து வரும் அணிகள் ஆடும் போட்டி சுவாரஸ்யத்தோடு உயிர்ப்புமிக்கதாக இருக்கும்.
இந்திய அணியின் முதல் போட்டியே சென்னையில்தான் நடக்கவிருக்கிறது. ஆடும் 12 அணிகளில் 8 அணிகள் தரம்சாலாவில் நடக்கும் போட்டிகளில் ஆடவிருக்கின்றன. மும்பையிலும் கொல்கத்தாவிலும் அரையிறுதி போட்டிகள் நடக்கவிருக்கின்றன. குறைந்தபட்சமாக எல்லா மைதானங்களுக்கும் இந்தியா ஆடும் ஒரு போட்டியாவது கிடைத்திருக்கிறது. ஹைதராபாத்துக்கு மட்டுமே இருப்பதிலேயே குறைந்த எண்ணிக்கையில், அதுவும் குறைந்த எதிர்பார்ப்புடைய போட்டிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.Rajiv Gandhi Stadiumஇவையெல்லாம்தான் தற்போது ராஜீவ் காந்தி மைதானம் மட்டும் புறக்கணிப்படுகிறதா எனும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.
இந்த உலகக்கோப்பை அட்டவணை மட்டுமல்ல, இதற்கு முன்னதாகவே ராஜீவ் காந்தி மைதானம் சார்ந்து இப்படியான சர்ச்சைகள் இருக்கவே செய்தன. கொரோனாவுக்குப் பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில்தான் அத்தனை அணிகளும் தங்களின் சொந்த மைதானத்தில் 7 போட்டிகளில் ஆடியிருந்தனர். இதனால் ஆடிய அத்தனை அணிகளுக்கும் சொந்தமான மைதானங்களும் திருவிழாக்கோலம் பூண்டிருந்தன. அத்தனை மைதானங்களும் பளபளப்பாகப் புனரமைக்கப்பட்டு புத்துயிரோடு காட்சியளித்தன. ஆனால், அப்போதும் கூட ராஜீவ் காந்தி மைதானம் களையிழந்துதான் காணப்பட்டது.Rajiv Gandhi Stadiumசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜீவ் காந்தி மைதானத்தில் 7 போட்டிகளில் ஆடியிருந்தது. இந்த 7 போட்டிகளின் போதுமே ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் கேலரியின் மேற்கூரை கிழிந்து தொங்கி அலங்கோலமாகத்தான் காட்சியளித்துக் கொண்டிருந்தது.Rajiv Gandhi Stadium
பெரும் வணிகம் சூழ்ந்திருக்கும் ஐ.பி.எல் போட்டியை நடத்தும் ஒரு மைதானம் இப்படிக் காட்சியளித்தது பலருக்கும் அதிர்ச்சியையே கொடுத்தது. ரசிகர்களுமே தங்களின் அதிருப்தியை சமூகவலைதளங்களில் பதிவிட்டு அசோசியனுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 2019 வாக்கில் பலத்த புயல் மழையில் சேதமடைந்திருந்த ராஜீவ் காந்தி மைதானத்தின் மேற்கூரைகள் நான்காண்டுகள் ஆகியும் சீரமைக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது எனும் தகவலையும் பலரும் பகிர்ந்திருந்தனர். ஐ.பி.எல்-ஐ தங்களின் மாபெரும் பெருமிதமாக கருதும் பிசிசிஐ இந்த ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தைக் கண்டும் காணாமலும் விட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சர்தார் வல்லபாய் படேல் ஸ்போர்ட்ஸ் காப்ளெக்ஸில் இருக்கும் மோத்தேரா ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்டு நரேந்திர மோடி ஸ்டேடியம் எனப் பெயர் மாற்றப்பட்ட பிறகு இந்தியாவில் நடைபெறும் முக்கிய விளையாட்டுப் போட்டிகள் அத்தனைக்கும் அந்த ஸ்டேடியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை பார்த்துக் கொண்டே இருக்கிறோம். ICC World Cup 2023 Fixtures: 10 மைதானங்கள், 48 போட்டிகள்; ஐ.சி.சி உலகக்கோப்பை அட்டவணை முழு விவரம்!தேசிய விளையாட்டுப் போட்டிகள் அங்கேதான் நடக்கின்றன. முக்கியமான ஐ.பி.எல் போட்டிகள் நடக்கின்றன. உலகக்கோப்பையின் முதல் போட்டியும் இறுதிப்போட்டியும் அங்கேதான் நடக்கவிருக்கிறது. பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டியும் அங்கேதான் நடக்கவிருக்கிறது. ஒலிம்பிக்ஸ் உட்பட பல வருங்கால திட்டங்களையும் இந்த மைதானத்தை மனதில் வைத்தே தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மைதானத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டு அதே நாட்டில் இருக்கும் இன்னொரு மைதானத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் சமூகவலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.Modi Stadium
விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'ராஜீவ் காந்தி கேல்ரத்னா' விருதை 'தயான்சந்த் கேல் ரத்னா' விருது எனத் தற்போதைய மத்திய அரசாங்கம்தான் பெயரை மாற்றியது. காங்கிரஸைச் சேர்ந்த தலைவரின் பெயரையும் அடையாளத்தையும் இருட்டடிப்பு செய்ய பா.ஜ.க செய்யும் சதி வேலை இதுவென கடும் விமர்சனங்கள் அப்போதே முன்வைக்கப்பட்டன. முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியால் ராஜீவ் காந்தி மைதானம் எனப் பெயரிடப்பட்ட மைதானத்தின் தற்போதைய நிலையையும் அந்த கேல்ரத்னா விருதோடு இணைத்தே பலரும் பார்க்கின்றனர். ராஜீவ் காந்தியின் புகழை இருட்டடிப்பு செய்யும் முயற்சிதான் இதுவும் என விமர்சிக்கப்படுகிறது.ராஜீவ் காந்தி மைதானம் சார்ந்து எழுந்திருக்கும் சர்ச்சைகளுக்கும் கேள்விகளுக்கும் பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷாதான் உரிய விளக்கம் கொடுக்க வேண்டும்!
http://dlvr.it/SrJN1j
0 Comments
Thanks for reading