ஆஸ்திரேலியாவின் பெவிலியனில் கேமரூன் க்ரீன் தனது டீ சர்ட்டுக்குள் தலையை புதைத்துக்கொண்டு பதைபதைப்பின் உச்சத்தில் இருக்கிறார். களத்திற்குள் பென் ஸ்டோக்ஸ் ஒவ்வொரு பந்துக்கும் முன்பாக பௌலரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி விதவிதமாக ஃபீல்டர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்.
கூடியிருக்கும் ரசிகர்கள் நகத்தைக் கடித்தபடி வழுக்கி விழாத குறைக்கு இருக்கையின் நுனியில் அமர்ந்திருக்கின்றனர். இப்படியான காட்சிகளை டி20 போட்டிகளில் காண்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால், இவற்றையெல்லாம் ஒரு டெஸ்ட் போட்டியில் காண்பது நிச்சயமாக ஆச்சர்யம்தான்.கம்மின்ஸ் - பென் ஸ்டோக்ஸ்
எட்பஸ்டனில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதிய ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் கடைசி நாளில்தான் இப்படியான விறுவிறு காட்சிகள்தான் நடந்தேறின. ஒரு டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் இத்தனை பரபரப்பாக செல்லுமென யாரும் எதிர்பார்த்திருக்கவே இல்லை. கிரிக்கெட் உலகின் தலைசிறந்த இரு அணிகள், குறிப்பாக பகைமைக்கென்றே பெயர்போன இரு அணிகள் மோதிக்கொண்டால் அந்த ஆட்டம் எப்படியான விருந்தாக அமைய வேண்டும் என்பதற்கான உதாரணம்தான் நடந்து முடிந்திருக்கும் அந்தப் போட்டி.
இங்கிலாந்து இந்தப் போட்டியில் தோற்றிருக்கிறது. ஆனால், அவர்களை பொறுத்தவரைக்கும் இதை வருந்தக்கூடிய ஒரு தோல்வியாகவே பார்க்கமாட்டார்கள். ஏனெனில், மெக்கல்லம் பயிற்சியாளராக தலைமையேற்ற பிறகு அந்த அணி டெஸ்ட் போட்டிகளை அணுகும் முறையே மாறியிருக்கிறது. முழுக்க முழுக்க அட்டாக்கிங் மனநிலையோடு ஒரு டி20 போட்டியை எப்படி அணுகுவார்களோ அப்படித்தான் டெஸ்ட் போட்டிகளையும் அணுகுகிறார்கள். வீழ்ச்சியின் அடிவாரத்தில் உழன்று கொண்டிருந்த இங்கிலாந்து அணிக்கு இந்த 'BazBall' பாணிதான் புத்துயிர் கொடுத்தது. மெக்கல்லமின் வருகைக்குப் பிறகு இங்கிலாந்து அணி இந்த பாணியில் ஆடியதில் தொட்டதெல்லாம் ஹிட்தான். இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணி. இன்னமும் பாரம்பரிய முறையில் எஃகு கோட்டையாக நின்று ஆட்டத்தை அணுகும் அணி. இரு எதிர் முனைகளில் நிற்கும் அணிகள் மோதிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை அறியத்தான் இந்த டெஸ்ட்டின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது.இங்கிலாந்து அணி தாங்கள் எதிர்கொண்ட முதல் பந்திலிருந்தே தங்களின் 'BazBall' மோடை ஆன் செய்திருந்தது. கடந்த ஆஷஸ் இங்கிலாந்துக்கு ஒரு கொடுங்கனவு. ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே ஸ்டம்புகள் சிதற ஒரு பேரழிவுக்கான முன்னோட்டத்துடன்தான் அந்தத் தொடரை தொடங்கியது இங்கிலாந்து.
ஆனால், இங்கே பேட் கம்மின்ஸ் வீசிய முதல் பந்திலேயே சக் க்ராலி பவுண்டரியுடன்தான் முதல் நாள் ஆட்டத்தை தொடங்கியிருந்தார். முதல் நாளில் எதிர்கொண்ட 78 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி 393 ரன்களை சேர்த்திருந்தது, ரன்ரேட் 5.03. ஏறக்குறைய ஒருநாள் போட்டியைப் போன்றுதான் இங்கிலாந்து அணி ஆடியிருந்தது. டெஸ்ட் போட்டிகளில் ரன்ரேட்டை பற்றிப் பேச வைத்ததே இங்கிலாந்து அணியின் பாணிக்குக் கிடைத்த பெரிய வெற்றி இதைவிட பெரிய விஷயம், அன்றைய நாளில் செய்யப்பட்ட டிக்ளேர் முடிவு.ரூட்ரூட் 118 ரன்களில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த சமயத்திலேயே ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்தார். இந்த டிக்ளேர் முடிவு இப்போது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
இதைப் பற்றி பிற்பகுதியில் பேசலாம். முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் உத்வேகம் கொடுக்கும் வகையில் ஆடியது உஸ்மான் கவாஜாதான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆஸிக்கு எப்போது தேவை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தான் எதிர்கொண்ட புறக்கணிப்புகளுக்கெல்லாம் சேர்த்து வைத்து பதிலடி கொடுக்கும் வகையில் கவாஜா சன்னதம் ஆடி தீர்த்துவிடுவார். எட்பஸ்டனிலும் கவாஜா அப்படி ஒரு ஆட்டத்தைதான் ஆடியிருந்தார். இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் முழுமையையுமே 78 ஓவர்களில் முடித்துவிட்டது. ஆனால், இங்கே கவாஜா மட்டுமே ஏறக்குறைய 54 ஓவர்களை எதிர்கொண்டிருந்தார்.கவாஜாஅனுபவத்தின் உச்சியில் நிற்கும் இரண்டு வீரியமிக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இரண்டு புதிய பந்துகளில் சர்வைவ் ஆகியிருந்தார். ராபின்சனின் துடிப்பான நகர்த்தல்களில் தப்பித்திருந்தார். ஸ்டோக்ஸின் சமயோஜிதங்கள் சிக்காமல் நழுவியிருந்தார். இதுமட்டுமல்லாமல் எல்லாருக்கும் எதிராகவும் எதிர்த் தாக்குதலும் நடத்தினார். இவற்றின் பலனாக வந்ததுதான் அந்த 141 ரன்கள்.கவாஜாவின் ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி ஏறக்குறைய இங்கிலாந்தை நெருங்கிவிட்டது. 7 ரன்கள் முன்னிலையோடு களமிறங்கிய இங்கிலாந்து இரண்டாம் இன்னிங்ஸிலும் அதே அட்டாக்கிங் ஆட்டத்தைதான் ஆடியது.
ஜோ ரூட் தான் எதிர்கொண்ட முதல் 7 பந்துகளில் மட்டும் 3 ரிவர்ஸ் ஸ்கூப்களை ஆடியிருந்தார். ஜோ ரூட் மாதிரியான மரபார்ந்த பேட்ஸ்மேன் இப்படி ஆடியதிலிருந்தே இங்கிலாந்து அணி எப்படியான மனநிலையில் இருந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும். ரூட், ஸ்டோக்ஸ், ப்ரூக்ஸ் ஆகியோரின் கணிசமான பங்களிப்பால் இங்கிலாந்து அணி 273 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியாவிற்கு 281 ரன்கள் டார்கெட். இனிதான் க்ளைமாக்ஸ்!ashes
கடைசி நாளிலும் இங்கிலாந்துக்குக் கவாஜாதான் வில்லனாக வந்து நின்றார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தபோதும் இன்னொரு முனையில் நின்று நிதானமாக அணியை முன்நகர்த்தி கொண்டு சென்று கொண்டே இருந்தார். 197 பந்துகளில் 65 ரன்களை எடுத்திருந்த நிலையில் கவாஜாவை ஒரு கட்டரில் வீழ்த்தி வெளியே அனுப்பினார் ஸ்டோக்ஸ். இதன்பிறகுதான் ஆட்டம் இன்னும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.'இங்கிலாந்து அணி களத்திற்குள் 15-16 ஃபீல்டர்கள் இருப்பதை போல உணர வைக்கிறார்கள். அடிக்க வேண்டிய 72 ரன்களை 172 ரன்களைப் போல காட்டி மிரட்சியடைய வைக்கிறார்கள்.' என ஹர்ஷா போக்லே ஒரு ட்வீட் செய்திருந்தார்.Ashes
இது நிதர்சனமான வார்த்தைகள். பேட்டிங், பௌலிங் மட்டுமின்றி ஃபீல்டிங்கிலும் இங்கிலாந்து புது வீரியத்தோடுதான் செயல்பட்டது. கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்த செட் செய்யப்பட்ட 'Brumbrella' ஃபீல்ட் செட்டப்பைப் பற்றி அனைவரும் புளங்காகிதம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். லயனும் கம்மின்ஸூம் சேஸ் செய்து கொண்டிருக்கையில் அவர்களுக்குமே ஃபீல்ட் செட்டப்பில் இப்படியான பல வித்தைகளையும் ஸ்டோக்ஸ் நிகழ்த்தியிருந்தார். அத்தனை ஃபீல்டர்களையும் லயனுக்குப் பின்னால் பவுண்டரி லைனில் நிற்க வைத்து வம்படியாக ஷார்ட் பால்களை வீசி கேட்ச் ஆக வைக்க நினைத்தார். ஆனால், துரதிஷ்டவசமாக அது கை கூடவில்லை. இப்படியாக ஒவ்வொரு ஓவரிலும் ஸ்டோக்ஸ் எதையோ முயன்று கொண்டே இருந்தார். ரூட்டின் ஓவரை அட்டாக் செய்யாமல் விட்டாக் பெரிய பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் ரூட்டின் ஓவரில் பெரிய ஷாட்களை அடித்து போட்டியை தங்கள் பக்கமாக நகர்த்திக் கொண்டு வந்தார் ஆஸி கேப்டன் கம்மின்ஸ். இறுதியில் ஒருவழியாக 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸில் ரூட்டை வைத்துக் கொண்டு டிக்ளேர் செய்ததுதான் தவறு என இங்கிலாந்து மீது விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் முன்னெடுத்துச் செல்ல விரும்பும் பாணியே அதுதான். எதிர்பாராத அதிரடிகளை நிகழ்த்த வேண்டும். எப்போதுமே வெற்றியை நோக்கியதாக மட்டுமே நகர்வுகள் இருக்கவேண்டும். இப்படியான பாணியில் தோல்விகள் வரலாம். ஆனால், அது உத்வேகத்தை குலைக்கக்கூடிய தோல்வியாக சோர்ந்து போய் மூலையில் அமர வைக்கும் தோல்வியாக இருக்கவே இருக்காது. இதுதான் இங்கிலாந்தின் 'BazBall' பாணி. ஆக, ரூட்டை வைத்துக் கொண்டே டிக்ளேர் செய்ததிலோ அல்லது போட்டியை தோற்றதிலோ இங்கிலாந்துக்கு துளியும் வருத்தம் இருக்காது.Ashesஆஷஸ் தொடரின் முதல் ஆட்டம்தான் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் 4 ஆட்டங்கள் மிச்சமிருக்கிறது. இன்னும் ஒரு மாதத்திற்கு டீ சர்ட்டுக்குள் தலையை புதைத்தும் நகங்களை கடித்தும்தான் கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டும்!
http://dlvr.it/Sr3Fng

0 Comments
Thanks for reading