தோனி என்ற நாயகனை உருவாக்கிய போட்டி: பாகிஸ்தானை பந்தாடிய 'தல'

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் தலைச்சிறந்த கேப்டனாக இருந்தவர் தோனி. அவரின் சாதனைகள் ஏற்கெனவே நமக்கு தெரிந்ததுதான். அதைப்பற்றி சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், இன்று மகேந்திர சிங் தோனிக்கு பிறந்ததினம். ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டு வழக்கம்போல அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

உண்மையிலேயே ரசிகர்களுக்கு ஒரு நட்சத்திரம் பிறந்ததினம் ஏப்ரல் 5, 2005-ஆம் ஆண்டுதான். அன்றைய தினத்தில்தான் இந்த ஒப்பற்ற கிரிக்கெட் வீரர் தன்னுடைய திறமையை முழுமையாக இந்த உலகத்துக்கு நிரூபித்தார். அந்தப் போட்டியை சற்றே பின்னோக்கி அசைப்போடுவோம். ஆம் பாகிஸ்தானுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் ஏப்ரல் 5, 2005-ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அன்றைய நாளுக்கு பின்பு அனைத்து ஊடகங்களும் தோனியை புகழ்ந்து கொண்டிருந்தன.

image

இந்தப் போட்டிக்கு முன்பாக இந்தியாவுக்காக தோனி 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அன்றைய போட்டிக்கு முன்பு வரை அவரின் அதிகபட்ச ரன் 12 மட்டுமே. தோனி தான் பங்கேற்ற முதல் போட்டியில் துரதிர்ஷ்டவசமாக ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆகியிருந்தார். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் அப்போது நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி பேட்டிங் செய்ய தீர்மானித்து, சேவாக்கும், சச்சினும் களமிறங்கினர். இந்தப் போட்டியில் சச்சின் 4-ஆவது ஓவரில் அவுட்டானார். அடுத்து ராகுல் டிராவிட் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நேரத்தில், கழுத்து வரை தொங்கும் முடியுடன் ஒரு வீரர் களமிறக்கப்பட்டார். அவர்தான் மகேந்திர சிங் தோனி. இந்தப் போட்டிக்கு முன்பு வரை தோனி 7-ஆவது வீரராகவே பேட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தார்.

image

தோனியை மூன்றாவது வீரராக களமிறக்கும் திட்டத்தை திடீரென கையில் எடுத்தார் கங்குலி. கங்குலியின் அந்த முடிவுதான் தோனியின் வாழ்கையை மாற்றியது. ஆம், அந்தப் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடினார் தோனி. அந்தப் போட்டியில் 148 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார் தோனி. அதன் பின்பு நடந்தது எல்லாம் வரலாறு.

இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் அப்ரிதி, சோயப் மாலிக், சமி, ரசாக் என அனைத்து வீரர்களின் பந்துவீச்சை துவைத்து எடுத்தார். தோனியின் இந்த அதிரடி ஆட்டத்தை பாகிஸ்தான் வீரர்கள் எதிர்பார்க்காததால் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்றனர். இறுதியில் இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 298 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.

image

தோனி ஏன் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார் என்பதற்கு சவுரவ் கங்குலி அளித்த பதில் "தோனி ஒரு ஆக்ரோஷமான வீரர் என்று எனக்கு தெரியும். அவரின் இளமையையும் வேகத்தையும் பயன்படுத்த நினைத்தேன். அதனால்தான் அவரை டிராவிட்டுக்கு முன்னதாக களமிறக்கினேன்" என்றார் அவர். இதேபோல இலங்கைக்கு எதிரான போட்டியிலும் தோனி மூன்றாவது வீரராக களமிறக்கப்பட்டு 183 ரன்களை குவித்தார்.

2005 ஆம் ஆண்டில் தோனி தன்னுடைய முதல் சதத்தை அடிக்கும்போது அவரின் வயது 23. இப்போதும் அதே வேகத்துடன் விளையாடுகிறார். இந்த சதத்துக்கு பின் பல்வேறு சாதனைகளை படைத்துவிட்டார், அடுத்து என்ன என்று கேட்டாலும் புன்னகையைதான் பதிலாக தருவார் தோனி. இன்று ஜூலை 7-ஆம் தேதி தன்னுடைய 40 ஆவது வயதை பூர்த்தி செய்கிறார் தோனி. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் அவரின் அடுத்த அவதாரத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது ! நாமும் காத்திருப்போம்...

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jQInU6
via IFTTT

Post a Comment

0 Comments