இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பதவியேற்றிருக்கிறார் ரமேஷ் பொவார். மீண்டும்! கடந்த இரண்டரை ஆண்டுகள் பணியாற்றிவந்த டபுள்யு.வி.ராமன் தேர்வு செய்யப்படாதது, பயிற்சியாளர் தேர்வின்போது தனக்கு எதிராக பொய் பிரசாரம் நடந்திருப்பதாக பிசிசிஐ தலைவர் கங்குலி, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் டிராவிட் இருவருக்கும் அவர் கடிதம் எழுப்பியிருப்பது இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
2018-ம் ஆண்டின் இறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பதவியேற்றார் முன்னாள் தமிழக வீரர் டபுள்யு.வி.ராமன். அவரது பயிற்சியின்கீழ் 17 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி, 10 போட்டிகளில் வென்றது. 28 டி-20 போட்டிகளில் பதினைந்தில் வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி-20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி வரை முன்னேறியது இந்தியா.
உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டது மட்டுமல்லாமல், அணியின் அணுகுமுறையிலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. 16 வயதேயான ஷெஃபாலி வர்மா, ரிச்சா கோஷ் போன்றவர்களோடு, ஹர்லீன் தியோல், சிம்ரன் பஹதுர் எனப் பல இளம் வீராங்கனைகள் இந்திய அணிக்கு அறிமுகமானார்கள். நல்ல முன்னேற்றங்கள் இருந்தாலும் டபுள்யு.வி.ராமன் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. சமீபத்திய நேர்முகத் தேர்வில் அவர் பங்கேற்றிருந்தும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. ராமன் பதவியேற்பதற்கு முன் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பொவார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய பயிற்சியாளருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்த டபுள்யு.வி.ராமன், அடுத்த சில தினங்களில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலிக்கும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட்டுக்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், "என் பயிற்சி முறைகள் சிறப்பாக இல்லாததால் நான் அந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்படாமல் இருந்தால் பரவாயில்லை. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், வேறு ஏதேனும் காரணங்களால் நான் நிராகரிக்கப்பட்டிருக்கலாம் என்பதை நினைக்கும்போது சற்று கவலையாக இருக்கிறது. குறிப்பாக, அணியின் நலனுக்குப் பதிலாகத் தங்களின் சொந்த நலன்களைப் பிரதானப்படுத்துபவர்களின் குற்றச்சாட்டுகளால் அது நடந்திருக்கலாம் என்பது இன்னும் வேதனையளிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
So, to wind up this @BCCIWomen episode, I would like to inform my friends in the media that I have no inclination to talk about women's cricket as my tenure has ended.. So, I solicit your cooperation, friends..— WV Raman (@wvraman) May 14, 2021
இந்த விஷயம் வெளியானதில் இருந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குள் இருக்கும் பிரச்னைகள் மீண்டும் பரவலாகப் பேசப்படத் தொடங்கியிருக்கிறது. இந்திய மகளிர் அணியில் ஸ்டார் கலாசாரம் பெருகிவருவது கடந்த சில ஆண்டுகளாகவே பல பிரச்னைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. கடந்த 2018 டி-20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரமேஷ் பொவார் - மித்தாலி ராஜ் இடையிலான கருத்து வேறுபாடு பெரும்பூகம்பமாக வெடித்தது. அப்போது, "ஓப்பனராக களமிறக்காவிட்டால் மித்தாலி ராஜ் ஓய்வு பெற்றுவிடுவதாக மிரட்டினார்" என்று தெரிவித்தார் ரமேஷ் பொவார்.
அந்த பிரச்னை வெடித்த பிறகுதான், ரமேஷ் பொவாரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இதுவொன்றும் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிதல்ல. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இது நான்காவது முறையாக அரங்கேறியிருக்கிறது. பொவாருக்கு முன்பு பயிற்சியாளர்களாக இருந்த பூர்ணிமா ராவ், துஷார் அரோத் ஆகியோரும் சீனியர் வீராங்கனைகள் குற்றம்சாட்டியதாலேயே மாற்றப்பட்டனர். WV Raman
இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து முன்னாள் பயிற்சியாளர் பூர்ணிமா ராவும் தன் கருதுகளைப் பகிர்ந்திருக்கிறார். "டபுள்யு.வி.ராமன் சீக்கிரம் பயிற்சியாளர் பதவியிலிருந்து வெளியேறுவார் என்பது எனக்குத் தெரியும்" என்று சொல்லியிருக்கும் அவர், யாரும் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் ரமேஷ் பொவாரும் சீக்கிரம் வெளியேறக்கூடும் என்று சொல்லியிருக்கிறார். "நான் பயிற்சியாளர் ஆனபோது வீராங்கனைகள் ஒவ்வொருவரும் ஒற்றுமையானவர்களாக, அப்பாவிகளாக, அற்புதமானவர்களாகவே இருந்தார்கள். ஆனால், சில வெற்றிகள், பிசிசிஐ ஒப்பந்தம், பிக்பேஷ் வாய்ப்பு, மீடியா வெளிச்சம், சோஷியல் மீடியா வளர்ச்சி, கேப்டன்சி சர்ச்சை எல்லாம் சூழ்நிலையை மாற்றிவிட்டது. அவர்களால் வெற்றியையும், பணத்தையும் கையாள முடியவில்லை" என்று கூறியிருக்கிறார் பூர்ணிமா ராவ்.
"அணிக்குள் டீம் கலாசாரம்" இல்லை என்று டபுள்யு.வி.ராமன் சொல்லியிருப்பது உண்மை என்று நன்றாகவே புரிகிறது. மகளிர் கிரிக்கெட் இங்கு பிரபலமாக நிச்சயம் ஸ்டார்கள் உருவாகவேண்டும். கொண்டாடப்படவேண்டும். ஆனால், அதுவே ஸ்டார் கலாசாரமாக மாறினால் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துவிடும். இதோ, பயிற்சியாளர் மாற்றம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இது இன்னும் தொடரக்கூடாது என்பதற்காகத்தான் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மெயில் அனுப்பியதாகத் தெரிவித்திருக்கிறார் டபுள்யு.வி.ராமன். அடுத்த தலைமுறை கிரிக்கெட்டர்களின் எதிர்காலத்துக்கு NCA தான் பொறுப்பென்பதால் அவர்ளுக்கு அதன் முக்கியத்துவத்தை தெரியப்படுத்தும்பொருட்டு ராகுல் டிராவிட்டுக்கும் சேர்த்து அனுப்பியிருக்கிறார்.
Thanks Azzu..Mighty generous of you.. https://t.co/CDWSZd2K0g— WV Raman (@wvraman) May 17, 2021
ராமன் இந்த மெயில்கள் பற்றிப் பேசிய பிறகு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவரோடு பர்சனலாக உரையாடியிருக்கிறார். இந்திய முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் இவருக்கு ஆதரவாக ட்வீட் செய்திருக்கிறார். ''ராமன் போன்ற ஒரு சிறந்த பயிற்சியாளரை ஹைதராபாத் போன்ற ஒரு அணி உபயோகப்படுத்திக்கொள்ளவேண்டும்'' என்றும் பதிவிட்டிருக்கிறார். இதற்கு முன் தமிழ்நாடு மற்றும் பெங்கால் அணிகளுக்குப் பயிற்சியாளராக இருந்திருக்கிறார் ராமன்.
http://dlvr.it/Rzw0zV

0 Comments
Thanks for reading