
இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று சிறப்புமிக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது இந்தியா. தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரி என சொல்லப்படும் இங்கிலாந்து மண்ணில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரை மிஸ் செய்கிறதா இந்திய அணி?
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்!
விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோகித் ஷர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அஷ்வின், உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், கே.எல்.ராகுல் மற்றும் சாஹா (விக்கெட் கீப்பர்). இதில் கே.எல்.ராகுல் மற்றும் சாஹா தங்களது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டி உள்ளது.
ICYMI - A look at #TeamIndia's squad for the inaugural ICC World Test Championship (WTC) final and the five-match Test series against England. ?
— BCCI (@BCCI) May 7, 2021
Standby players: Abhimanyu Easwaran, Prasidh Krishna, Avesh Khan, Arzan Nagwaswalla pic.twitter.com/17J050QVT3
வரும் ஜூன் 2ஆம் தேதியன்று இந்திய அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. செப்டம்பர் மாதத்தில் தான் அணி வீரர்கள் இந்தியாவுக்கு திரும்புவார்கள்.
அணியின் ஆல் ரவுண்டர்கள்
அணியில் இடம் பெற்றுள்ள ஆல் ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஷ்வின் என நான்கு பேரும் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள். இதில் அக்சர் மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு இது தான் முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணம். மறுபக்கம் இந்தியாவின் பிரதான ஆல் ரவுண்டரான ஜடேஜா இங்கிலாந்தில் இதுவரை ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2 அரை சதங்கள் மற்றும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அஷ்வின் ஆறு போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். SENA நாடுகள் என சொல்லப்படும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் உள்ள நாடுகளான தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மொத்தம் 63 விக்கெட்டுகளை தான் அஷ்வின் கைபற்றியுள்ளார். இதில் ஆஸ்திரேலியாவில் தான் 39 விக்கெட்டுகளை அஷ்வின் எடுத்துள்ளார்.

ஒரே ஆப்ஷன் ‘தாக்கூர்’
“ஷர்துல் தாக்கூர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தனது திறனை ஆஸ்திரேலியா தொடரில் அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார். அதனால் அவரை வேகப்பந்து வீச்சாளராக அணியின் தேர்வாளர்கள் பரிசீலிக்க கூடும்” என இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் PTI உடனான உரையாடலில் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில் தாக்கூர் அரைசதம் மற்றும் 7 விக்கெட்டுகளை கைபற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் எப்படி?
இங்கிலாந்து மண்ணில் 1932 முதல் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதுவரை 18 டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் அங்கு விளையாடி உள்ளன. அதில் 1971, 1986 மற்றும் 2007இல் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. ஒரு தொடர் சமனில் முடிந்துள்ளது. 1971 சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சையத் அபித் அலி மீடியம் பேஸ் ஆல் ரவுண்டர். அணியில் இடம் பெற்றிருந்த ஏக்நாத் சோல்கர் சீம் மற்றும் ஸ்பின் என இரண்டு வகையில் பந்து வீசும் திறம்படைத்த ஆல் ரவுண்டர். இவரது பங்களிப்பு இந்திய அணி 1971இல் தொடரை வெல்ல உதவியுள்ளது.
1986இல் இங்கிலாந்து மண்ணில் இந்தியா பெற்ற வெற்றியில் கபில் தேவ், ரோஜர் பின்னி, மொகிந்தர் அமர்நாத் மாதிரியான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் அணியில் இருந்தனர். ஆனால் 2007இல் நடைபெற்ற தொடரில் இந்தியா தொடரை வென்ற போது அணியில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருந்தனர். வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் யாரும் அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றிருந்தார். அந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடி ஒரு அரை சதம் மற்றும் பத்து விக்கெட்டுகளையும் கைபற்றி இருந்தார் அவர். ட்ரெண்ட் பிரிட்ஜ் போட்டியில் 5 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தி இருந்தார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பாண்ட்யா அதிகம் பந்து வீசுவதில்லை. அதனால் இந்த முறை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் விளையாட வில்லை.
இந்த ஆல் ரவுண்டர் சிக்கலை களைய இந்திய அணியின் பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் அவரவர் பணியை சிறப்பாக செய்ய வேண்டி உள்ளது. ரோகித், விராட், ரஹானே, புஜாராவின் அனுபவம் பேட்டிங்கில் இந்திய அணியின் பலம். இளம் வீரர்களான கில் தொடக்க வீரராகவும், பண்ட் லோயர் மிடில் ஆர்டரிலும் விளையாட வாய்ப்புகள் அதிகம். இஷாந்த், பும்ரா, ஷமி பவுலிங்க் டிப்பார்ட்மென்டில் இந்தியாவின் பலம். ஜடேஜா மற்றும் அஷ்வினும் அவர்களது பணியை திறம்பட செய்ய வேண்டி உள்ளது. இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் வேண்டாம் என அணி நிர்வாகம் நினைத்தால் தாக்கூர் விளையாடுவது உறுதி.
India ?? New Zealand
— ICC (@ICC) March 6, 2021
The inaugural ICC World Test Championship finalists!
The wait will be unbearable. #WTC21 | #INDvENG pic.twitter.com/X3KcNrUTJ1
நியூசிலாந்து அணியில் கொலின் டி கிரான்ஹோம் உட்பட சில கணிசமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். இங்கிலாந்து அணியிலும் இந்த சீம் ஆல் ரவுண்டர்களுக்கு பஞ்சம் இல்லை.
-எல்லுச்சாமி கார்த்திக்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ocUr1L
via IFTTT
0 Comments
Thanks for reading