2011-ம் ஆண்டே ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டாலும் இப்போதுவரை அந்த அணி சார்ந்த சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. 2011-ம் ஆண்டு அந்த அணிக்காக ஆடியதற்கான ஊதியத்தின் ஒரு பகுதி இன்னும் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ்.
கடந்த ஆண்டு நடந்த மகளிர் டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது இந்திய அணி. ஆஸ்திரேலியாவுடனான இறுதிப் போட்டியில் தோற்ற ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான அணிக்கு ஐந்து லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாகக் கிடைத்தது. ஆனால், அந்தப் பரிசுத்தொகை வீராங்கனைகளுக்கு இந்த வாரம் வரை சென்றடையவே இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. அதைத்தொடர்ந்து அவர்களுக்கு அந்தத் தொகை நேற்று சென்றடைந்தது.
இந்தச் செய்தியை ஊடகங்கள் பகிர, அதில் ஒரு பதிவில், "10 ஆண்டுகளுக்கு முன் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு ஆடியதற்கு இன்னும் 35 சதவிகித ஊதியம் கொடுக்கப்படவில்லை. அந்தத் தொகையை பிசிசிஐ கண்டுபிடித்துக்கொடுக்குமா" என்று பதிவிட்டிருந்தார் அந்த அணிக்காக விளையாடிய முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிராட் ஹாட்ஜ்.
Players are still owed 35% of their money earned from ten years ago from the @IPL representing Kochi tuskers. Any chance @BCCI could locate that money?— Brad Hodge (@bradhodge007) May 24, 2021
8 அணிகளோடு தொடங்கிய ஐபிஎல் தொடரை விரிவுபடுத்த திட்டமிட்ட பிசிசிஐ 2010-ம் ஆண்டு இரண்டு புதிய அணிகள் கலந்துகொள்ளும் என்று அறிவித்தது. அதற்கான ஏலத்தில் புனே அணியை சஹாரா நிறுவனமும், கொச்சி அணியை ரெண்டேவூ ஸ்போர்ட்ஸ் குழுமமும் (1,533 கோடி ரூபாய்க்கு) வாங்கின. வி.வி.எஸ்.லக்ஷ்மண், பிரெண்டன் மெக்கல்லம், ரவீந்திர ஜடேஜா, ஶ்ரீசாந்த், ஜெயவர்தனே போன்ற வீரர்கள் அந்த அணிக்கு வாங்கப்பட்டார்கள். 10 அணிகள் பங்கேற்ற அந்தத் தொடரில் எட்டாவது இடம் பெற்றது அந்த அணி. ஆனால், அதுவே அவர்களின் கடைசி தொடராக அமைந்தது.
தொடருக்கு முன்பு வங்கிக்குச் செலுத்தவேண்டிய 10 சதவிகித வங்கி உத்திரவாத தொகையை செலுத்தத் தவறியதால், ஐபிஎல் தொடரிலிருந்து பிசிசிஐ நிர்வாகத்தில் வெளியேற்றப்பட்டது அந்த அணி. அந்த அணியின் பல்வேறு இணை உரிமையாளர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டின் காரணமாக அந்தத் தொகை செலுத்தப்படாமல் போனதாகக் கூறப்பட்டது. பலமுறை ஞாபகப்படுத்தியும் தொகை கட்டப்படாததால் அந்த முடிவை எடுத்ததாக அறிவித்தது பிசிசிஐ. கொச்சி அணியின் உரிமையாளர்கள் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல, நஷ்ட ஈடாக அந்த அணிக்கு 550 கோடி ரூபாய் கொடுக்கவேண்டுமென்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக மீண்டும் தங்களை ஐபிஎல் தொடருக்குள் இணைக்கச் சொல்லி அந்த அணி முயற்சி செய்ய, பிசிசிஐ நிர்வாகம் அதற்கு வளைந்துகொடுக்கவில்லை. Kochi Tuskers
சொல்லப்போனால், அந்த அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாகவே பல சிக்கல்கள் எழுந்தன. முதலில் 'இண்டி கமாண்டோஸ்' என்று பெயர்வைக்க நினைத்தது நிர்வாகம். கேரளாவில் கேளிக்கை வரி அதிகம் என்பதால், அணியை அஹமதாபாத்துக்கு மாற்றிவிடலாம் என்றுகூட யோசித்தார்கள். ஶ்ரீசாந்தை அணியில் எடுத்த ஆகவேண்டும் என்று சோஷியல் மீடியாவில் பிரசாரம் செய்த சேட்டன்கள், இதற்கு பொறுத்திருப்பார்களா?! அவர்கள் பொங்கி எழ, ஒருவழியாக வரியும் குறைக்கப்பட, கொச்சி அணியாகவே தொடர்ந்தது. பெயரும் மாற்றப்பட்டது.
ஆரம்பத்திலேயே ஓனர்களுக்கு இடையில் சிக்கல் நீடிக்க, அதை சரிசெய்வதற்கு 30 நாள் அவகாசம் கொடுத்தது பிசிசிஐ. அதுமட்டுமல்லாமல், அந்த அணியின் உரிமையாளர்கள் விவரத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்காகவும் ஒரு பிரச்னை எழுந்தது. இப்படி இந்த அணிக்குள் பஞ்சாயத்துகள் எழாமல் இருக்கவே இல்லை. இப்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு புதிய பிரச்னை எழுந்துள்ளது.
பிராட் ஹாட்ஜின் இந்த ட்வீட் நிச்சயம் சில விவாதங்களை எழுப்பும். பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்றபோது, "டொமஸ்டிக் கிரிக்கெட்டர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம்" என்று கூறினார். ஜெய் ஷா தலைமை தாங்கும் நிர்வாகத்தில் இதுவரை தான் நினைத்ததை செயல்படுத்தினாரா என்பது கேள்விக்குறிதான்.
ஒரு உலகக் கோப்பையில் ரன்னர் அப் ஆனவர்களுக்கே ஒரு வருடம் கழித்துத்தான் பரிசுத்தொகை சென்றிருக்கிறது. பிராட் ஹாட்ஜ் விஷயத்தில் இதுவரை அவர் எதுவும் செய்திருக்க முடியாது என்றாலும், இதற்கு மேல் ஏதாவது செய்யவேண்டும். ஏனெனில், கொச்சி டஸ்கர்ஸ் அணியிலும் பல இந்திய வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள். பாலச்சந்திர அகில், ஞானேஷ்வர ராவ் போன்றவர்கள் அதன்பின் எந்த ஐபிஎல் அணிக்கும் விளையாடவில்லை. அதனால், அவர்களுக்கு அந்த ஊதியம் நிச்சயம் பெரிய விஷயமாக இருக்கும். பண விஷயத்தில் கறாராக இருந்து ஒரே ஆண்டில் அந்த அணியை வெளியேற்றிய பிசிசிஐ இப்போது என்ன செய்யப்போகிறது?!
http://dlvr.it/S0TGvW

0 Comments
Thanks for reading