
“எனக்கு விளையாட பிட்னஸ் இல்லையென ஒருவரும் சொல்லிவிடக்கூடாது” என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து. இதுவரை 3 போட்டியில் விளையாடிய சென்னை அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். இந்தப் போட்டியில் ரன் அவுட்டில் இருந்து தப்பிக்க தோனி டைவ் அடித்து க்ரீஸை எட்டினார். இதுதொடர்பான போட்டோ நேற்று வைரல் ஆனது. கடந்த சீசனை காட்டிலும் தோனி உடல் ரீதியாக மிகவும் உற்சாகமாக களத்தில் செயல்பட்டு வருகிறார்.
போட்டிக்கு பிறகு பேசிய தோனி, “நான் எப்படி விளையாடுவேன் என்பதை 24 வயதிலும் கியாரண்டி கொடுக்க முடியாது. 40 வயதிலும் கொடுக்க முடியாது. ஆனால், என்னை பார்த்து இவர் விளையாட பிட்னஸ் இல்லை என யாரும் சொல்லிவிடக் கூடாது. வயசு ஆக ஆக பிட்னஸ் ஆக இருப்பது மிகவும் சிரமமான விஷயம். இளம் வீரர்கள் இருப்பது போல் என்னுடைய பிட்னஸை வைத்துக் கொள்வேன். அவர்கள் போல் வேகமாக ஓடுவது மிகவும் சவாலான ஒன்று” என்று கூறினார்.

"When you're playing, you don't want anyone to say he's unfit" @msdhoni on being asked upon his fitness ??#VIVOIPL #CSKvRR pic.twitter.com/AraxlOEsQ0
— IndianPremierLeague (@IPL) April 19, 2021
இருப்பினும் இது 21 மாதங்கள் தாமதமாக அடித்த டைவ் என்று சில ரசிகர்கள் தோனியை விமர்சித்தும் வருகிறார்கள். அதாவது நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் முக்கியமான இறுதிக்கட்டத்தில் தோனி நூலிழையில் ரன் ஆனார். அன்று தோனியின் ரன் அவுட் இந்திய அணியின் ரசிகர்களை கலங்க வைத்துவிட்டது. அன்று அவர் டைவ் அடித்து இருந்தால் நிச்சயம் ரன் அவுட்டில் இருந்து தப்பித்து இருப்பார். ஆனாலும் அது எதிர்பாராத விதமாக நேராக ஸ்டம்பிப்பில் அடிக்கப்பட்டதால் அவர் அவுட் ஆனார்.

டூப்ளசிஸ், மொயின் அலி அதிரடி:
ஐபிஎல் தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே தலா 2 போட்டிகளில் ஆடி தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இருந்தன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி விளையாடும் 200ஆவது போட்டி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆட்டம் ஆரம்பித்தது. சென்னை அணி சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் ஐபிஎல்லில் முதல் வெற்றியை ஈட்டிய நிலையில் அதே ஏப்ரல் 19ஆம் தேதி மீண்டும் களமிறங்கியது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசியது. சென்னை அணி தொடக்க வீரர் ருதுராஜ் தடுமாற்றத்துடன் ஆடத் தொடங்கி 10 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். எனினும் டூப்ளஸ்ஸியும் மொயின் அலியும் அதிரடியாக ஆடி ரன் கணக்கை உயர்த்தினர். டூ ப்ளஸ்ஸி 17 பந்தில் 33 ரன்னும் மொயின் அலி 20 பந்தில் 26 ரன்னும் எடுத்தனர். ரெய்னா 18 ரன்னும் அம்பத்தி ராயுடு 27 ரன்னும் எடுத்து வெளியேறினர். கேப்டன் தோனி சற்றே நிதானமாக ஆடி 17 பந்தில் 18 ரன் எடுத்து வெளியேறினார்.
மத்திய ஓவர்களில் ரன் குவிப்பில் தொய்வு ஏற்பட்டாலும் இறுதிக்கட்டத்தில் சாம் கரனும் டுவைன் பிரவோவும் மின்னல் வேகத்தில் ரன் குவித்து தங்கள் அணி சவாலான இலக்கை குவிக்க உதவினர். சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சேதன் சக்காரியா 3 விக்கெட்டும் கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பந்துவீச்சில் அசத்திய மொயின் அலி, ஜடேஜா, சாம் கர்ரன்:
அடுத்து 189 ரன் என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய ராஜஸ்தானை ஆரம்பத்தில் இருந்தே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் சென்னை வீரர்கள். தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடினாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. கேப்டன் சஞ்சு சாம்சன் ஒரே ஒரு ரன் எடுத்த நிலையில் சாம் கரன் பந்தில் வீழ்ந்தார். பட்லர் மட்டும் நிலைத்து ஆடி 35 பந்தில் 49 ரன் எடுத்து வெளியேறினார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 143 ரன் மட்டுமே எடுத்து 45 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

3 ஓவரில் 7 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியதுடன் பேட்டிங்கில் 26 ரன்னும் எடுத்த மொயின் அலி ஆட்ட நாயகன் ஆனார். புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறிய சென்னை அணி ரன் ரேட்டில் பிளஸ் 1.194 என்ற எண்ணிக்கையுடன் வலிமையான நிலையை எட்டியுள்ளது. சென்னை அணி அடுத்து நாளை கொல்கத்தா அணியை சந்திக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3v5iFgY
via IFTTT
0 Comments
Thanks for reading