முதல் போட்டியே கடைசி பந்துவரை த்ரில் - வெற்றிக் கணக்கை தொடங்கிய பெங்களூர் அணி!

கிரிக்கெட் உலகின் பிரம்மாண்ட டி20 லீக் தொடர்களில் ஒன்று ஐபிஎல். இந்த லீக்கின் பதினான்காவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்திருந்தார். 

அதனால் மும்பை அணி முதலில் பேட் செய்தது. கேப்டன் ரோகித் ஷர்மாவும், கிறிஸ் லின்னும் இன்னிங்ஸை ஓப்பன் செய்திருந்தனர். 

லின்னுக்கு மும்பை அணியில் இதுதான் முதல் போட்டி. இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்காவது ஓவரின் கடைசி பந்தில் ஏற்பட்ட குழப்பத்தினால் ரோகித் ஷர்மா ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் ரன் சேர்க்கும் மொத்த பாரத்தையும் தனது தோளில் சுமந்து கொண்டு பொறுப்புடன் விளையாடினார் லின். அவருக்கு ஒத்தாசையாக சூரியகுமார் யாதவ் விளையாடினார். இருவரும் இணைந்து 42 பந்துகளில் 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். ஜேமிசன் வேகத்தில் சூரியகுமார் யாதவ் விக்கெட்டை இழக்க அந்த கூட்டணி முடிவுக்கு வந்தது. 

அடுத்த சில பந்துகளில் கிரீஸில் செட்டாகி இருந்த லின்னும் 35 பந்துகளில் 49 ரன்களை குவித்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கி ஆட்டம் இழந்தார். 

மிடில் ஆர்டரில் மும்பை அணி பவர் ஹிட்டர்களான ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட் மற்றும் குர்ணால் பாண்ட்யா என மூன்று அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை கொண்டிருப்பதால் எப்படியும் 180 ரன்களுக்கு மேல் டார்கெட் செட் செய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டத்தின் கடைசி ஐந்து ஓவர்களில் அதிகளவில் ரன்களை குவிப்பது மும்பை அணியின் வழக்கம். ஆனால் பெங்களூர் அணியின் ஹர்ஷல் பட்டேல் அற்புதமாக பந்துவீசி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். 

முதல் இன்னிங்ஸின் பதினோராவது ஓவரை வீசிய அவர் ஹர்திக் பாண்ட்யாவை LBW முறையில் வீழ்த்தி இருந்தார். தொடர்ந்து பதினெட்டாவது ஓவரில் இஷான் கிஷனை வீழ்த்தி இருந்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் குர்ணால், இரண்டாவது பந்தில் பொல்லார்ட் விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை அவர் இழந்திருந்தாலும் அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஜேன்சென் விக்கெட்டை அவர் வீழ்த்தி இருந்தார். அதேபோல் அந்த ஓவரின் கடைசி பந்தில் ராகுல் சாஹர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். நான்கு ஓவர்கள் வீசி 27 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார் ஹர்ஷல் பட்டேல். அதில் 12 டாட் பந்துகள் அடங்கும். அவரது அற்புதமான பவுலிங்கினால் மும்பை அணி இருபது ஓவர் முடிவில் 159 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. 

160 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய பெங்களூர் அணிக்கு கேப்டன் விராட் கோலியும், வாஷிங்டன் சுந்தரும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இது பரிசோதனை முயற்சியிலான ஓப்பனிங் இணைதான் என்றாலும் பெரிதும் அந்த அணிக்கு கைகொடுக்கவில்லை. அதனால் பெங்களூர் அணி 36 ரன்கள் குவித்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்ததாக வந்த ராஜாத் பட்டிதாரும் 8 ரன்களில் அவுட்டானார். அதனால் களத்திற்கு வந்தார் கிரிக்கெட் உலகின் பிக் ஷோவான மேக்ஸ்வெல். 

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 14.25 கோடி ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்திருந்தது பெங்களூர் அணி. தனக்கான ஏல தொகை வீண்போகாது என நம்பிக்கை கொடுக்கும் வகையில் விளையாடினார் மேக்ஸ்வெல். ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். அவருக்கு கேப்டன் கோலியும் கம்பெனி கொடுத்திருந்தார். இருவரும் 52 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். 

வெற்றி பெங்களூர் பக்கம் நகர்ந்து கொண்டிருக்க பும்ராவை பந்து வீச செய்திருந்தார் அந்த அணியின் கேப்டன் ரோகித். 

அதற்கு பலன் கொடுக்கும் வகையில் கோலியின் விக்கெட்டை LBW முறையில் கைப்பற்றி இருந்தார். செட்டாகி இருந்த மேக்ஸ்வெல்லும் ஜென்சன் வீசிய பதினைந்தாவது ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டை இழந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஷபாஸ் அகமதும் விக்கெட்டை இழக்க ரன் ரேட் ஓவருக்கு பத்து ரன்களுக்கு மேல் எகிறி இருந்தது. 

தொடர்ந்து வந்த கிறிஸ்டியனும் பெவிலியன் திரும்ப வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தது பெங்களூர். அந்த அணிக்கு களத்தில் இருந்த ஒரே நம்பிக்கை டிவில்லியர்ஸ். அதனை அவர் வீண் போக செய்யவில்லை. சிக்ஸரும், பவுண்டரிகளுமான விளாசினார். கிட்டதட்ட ஆட்டத்தை வெற்றியின் விளிம்பு வரை கொண்டுசென்றுவிட்டார்.

இருப்பினும் கடைசி ஓவரின் நான்காவது பந்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார். குர்ணால் பாண்ட்யா அடித்த அற்புதமான த்ரோவில் அவர் அவுட்டானார். 27 பந்துகளில் 48 ரன்களை அவர் குவித்திருந்தார். 

கடைசி இரண்டு பந்துகளில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. சீராஜ் ஒரு ரன் எடுக்க, வெற்றிக்கான அந்த ஒரு ரன்னை ஹர்ஷல் பட்டேல் எடுத்தார். இறுதியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது பெங்களூர் அணி. 

2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய கோப்பையை வென்ற 5 ஆண்டுகளிலும் மும்பை அணி தன்னுடைய முதல் போட்டியில் தோல்வியைத் தான் சந்தித்தது. அதேபோல், நடப்பு ஐபிஎல் சீசனிலும் தன்னுடைய முதல் போட்டியில் மும்பை அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், மும்பை அணி கோப்பையை வெல்லுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபோல், நம்பிக்கையுடன் தொடரை தொடங்கியுள்ள பெங்களூர் அணி கோப்பையை இந்த முறையாவது கைப்பற்றுமா என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- எல்லுச்சாமி கார்த்திக்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3fUkcSA
via IFTTT

Post a Comment

0 Comments