ஐபிஎல் தொடரின் 14வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெல்லப்போவது சென்னை அணியா? அல்லது டெல்லி அணியா? என்பதை அலசுவோம்.
அமீரகத்தில் நடந்த கடந்த சீசனில் முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது தோனி தலைமையிலான சென்னை அணி. ஆனால் டெல்லி அணி இறுதி போட்டி வரை முன்னேறி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இம்முறை அந்த தவறுகளை எல்லாம் திருத்திக் கொண்டு கோப்பையை வெல்ல இரண்டு அணிகளும் போட்டா போட்டி போடும். அதனால் முதல் போட்டியிலிருந்தே வெற்றி கணக்கை தொடங்க திட்டம் போட்டிருக்கலாம். முதல் வெற்றி முற்றிலும் வெற்றி என வெத்தாக சொல்லிவிடவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை அணியை பொறுத்தவரை ‘தல’ தோனி கேப்டனாக அணியை வழிநடத்துகிறார். அவருடன் ‘சின்ன தல’ ரெய்னா இந்த சீசனில் விளையாடுகிறார். அவர்களுடன் நாராயண் ஜகதீசன், ரவீந்திர ஜடேஜா, டு பிளேசிஸ், பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், சாம் கரண், ஆசிப், சாய் கிஷோர், மிட்சல் சான்ட்னர், லுங்கி இங்கிடி, ருதுராஜ் கெய்க்வாட், கிருஷ்ணப்பா கவுதம், புஜாரா, மொயின் அலி, பகத் வர்மா, ராபின் உத்தப்பா, ஹரி நிஷாந்த், ராயுடு, கரண் ஷர்மா, இம்ரான் தாஹிர் மற்றும் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் (Jason Behrendorff) விளையாடுகின்றனர்.
இதில் கிருஷ்ணப்பா கவுதம், புஜாரா, மொயின் அலி, ராபின் உத்தப்பா, ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், ஹரி நிஷாந்த், பகத் வர்மா மாதிரியான வீரர்கள் எல்லாம் முதல் முறையாக சென்னை அணிக்காக விளையாட உள்ளனர்.
கடந்த சீசனில் 14 லீக் போட்டிகளில் மொத்தம் ஆறில் மட்டுமே சென்னை வெற்றியை பதிவு செய்திருந்தது. அதில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இரண்டிலும் சென்னை தோல்வியை சந்தித்து இருந்தது. அது அமீரக ஆடுகளத்தில் நடந்தவை என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது. ஐபிஎல் இந்தியாவுக்கு திரும்பி உள்ளதால் சென்னையும் வெற்றி பாதைக்கு திரும்பும் என நம்புவோம்.
சென்னை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்க வாய்ப்புகள் உள்ளன. டாப் ஆர்டர் வரிசையில் ரெய்னா, ராயுடு, டு பிளேஸிஸ் நம்பிக்கை கொடுக்கிறார்கள். ஜடேஜா, பிராவோ, சாம் கரண் மற்றும் தோனி பினிஷிங்கை கவனித்து கொள்வார்கள். கிருஷ்ணப்பா கவுதம், தாஹிர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சில் கைகொடுக்கலாம். அவர்களுக்கு உறுதுணையாக ஆல் ரவுண்டர்கள் ஜடேஜா, பிராவோ, சாம் கரண் பந்து வீசலாம். இப்படி அனைத்தும் சென்னை அணிக்கு சாதகமாக கூடி வந்தால் நிச்சயம் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்யும்.
டெல்லி கேபிடல்ஸ்
மறுபக்கம் டெல்லி அணியை பார்த்தால் காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தொடரிலிருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் கேப்டன் பொறுப்பை கவனிக்க உள்ளார். அவருக்கு அனுபவ வீரர்கள் அஷ்வின், ரகானே மற்றும் தவான் அணியில் இருப்பது பக்க பலம்.
2019 சீசனில் புது பெயருடன் டெல்லி அணி பட்டையை கிளப்பி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். 2019 சீசனில் பிளே ஆப், 2020 சீசனில் ரன்னர் அப் என படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகிறது டெல்லி அணி. அதனால் இந்த முறை இறுதி படியான கோப்பையை வெல்ல வேண்டும் என களத்தில் நின்று போராடும் டெல்லி அணி.
அணியை பொறுத்தவரை அனுபவமும், இளமையும் இரண்டர கலந்த அணியாக உள்ளது டெல்லி. ரிஷப் பந்த் (கேப்டன்), ரகானே, அமித் மிஷ்ரா, நார்ட்ஜே, ஆவேஷ் கான், கிறிஸ் வோக்ஸ், இஷாந்த் ஷர்மா, ரபாடா, லலித் யாதவ், ஸ்டாய்னிஸ், பிரவீன் தூபே, பிருத்வி ஷா, அஷ்வின், தவான், ஹெட்மெயர், ஸ்டீவ் ஸ்மித், உமேஷ் யாதவ், ரிபால் பட்டேல், விஷ்ணு வினோத், மெரிவாளா, மணிமாறன் சித்தார்த், டாம் கரண், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இதில் பந்த், தவான், அஷ்வின் மாதிரியான முக்கிய வீரர்கள் டெல்லி அணியின் துருப்பு சீட்டாக விளங்குகிறார்கள்.
பேட்டிங்கில் தவான், ரிஷப் பந்த், ஸ்மித், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ரகானே மாதிரியான வீரர்கள் டெல்லி அணியின் நம்பிக்கை. பந்து வீச்சில் அந்த அணி செம ஸ்ட்ராங். அஷ்வின், அமித் மிஸ்ரா, நார்ட்ஜே, ரபாடா மாதிரியானவர்கள் பந்துவீச்சில் அசத்துவார்கள். அதற்கு அவர்களது அனுபவம் கைகொடுக்கும்.
இருப்பினும் அக்சர் பட்டேலுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று, ராபாடா மற்றும் நார்ட்ஜே தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்தாலும் தற்போதைக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனால் அவர்கள் சென்னை அணிக்காக போட்டியில் விளையாடுவது சிரமம்.
சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதும் முதல் போட்டி மும்பையில் நடைபெறுகிறது. இந்த ஆடுகளத்தில் இரண்டாவதாக பேட் செய்யும் அணிகளுக்கு தான் பெரும்பாலும் வெற்றி வாய்ப்பு இருக்கும். அதனால் டாஸ் வெல்லும் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்யவே முயற்சிப்பார்கள் என தெரிகிறது. பேட்டிங்கிற்கு ஏதுவான ஆடுகளம் என்பதால் பெரிய ஸ்கோர் போர்டில் இருக்கலாம். இருந்தாலும் வெற்றி வாய்ப்பை பொறுத்தவரை 50 : 50 என்று தான் சொல்ல வேண்டியுள்ளது.
- எல்லுச்சாமி கார்த்திக்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3g1cqpY
via IFTTT
0 Comments
Thanks for reading