PBKS vs RCB: `வேட்டையாடிய விராட் கோலி; ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்த பஞ்சாப்!' - என்ன நடந்தது?

Do or Die சூழல், வென்ற அணிக்கான ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னமும் இருக்கிறது, தோற்கின்ற அணியோ வெளியேற வேண்டுமென்ற நிலை என்பதால் ஆர்சிபி மற்றும் பஞ்சாப்புக்கு இடையிலான இப்போட்டி ஒரு நாக் அவுட் போட்டிக்குரிய நட்சத்திர அந்தஸ்தோடே பார்க்கப்பட்டது. அப்படிப்பட்ட போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு வென்றிருக்கிறது.RCB v SRH

600+ ரன்கள், ஆறாவது அரைசதம், தலையை விட்டு நீங்காத கிரீடமாக ஆரஞ்சுக் கேப் என இந்த சீசன் முழுவதுமே நிலைப்புத்தன்மையான ஆட்டத்திற்கான வரையறை குறித்து சிறுகுறிப்பு வரைந்து கொண்டுள்ளது கோலியின் பேட். இருப்பினும் குறைந்த ஸ்ட்ரைக்ரேட் குறித்த குறைபாடும், துணிந்து ஆடுவதற்குமான தயக்கமும் மட்டும் அவரின் மீது குற்றச்சாட்டுகளாய் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தன. அதனை அடித்துத் திருத்திக் கொள்ளுங்கள் என அழுத்தம் திருத்தமாக சொல்லும்படியான ஒரு ஆட்டத்தை விராட் கோலி ஆடியுள்ளார்.

`Creame Of The Crop' - தனித்துவமுடைய மிகச்சிறந்தவற்றை குறிப்பதற்கான சொற்பதம். இப்போட்டியில் கோலியின் இன்னிங்க்ஸ் இப்படிப்பட்டதாகவே இருந்தது. முதல் 10 ஓவர்களில் 119 ரன்களை அடித்திருந்த ஆர்சிபி அடுத்த 10 ஓவர்களில் 122 ரன்களைக் குவித்தது. இந்த இருபாதியிலும் அவரது தாக்கம் சரிபாதி இருந்தது. பவர்பிளேவுக்குப் பின், ஏன் பட்டிதர் ஆட்டமிழந்த போதும்கூட, அதே உயிர்ப்போடும் வேட்கையோடும் ஆடிய கோலியைப் பார்க்க அத்தனை ரம்மியமாக இருந்தது. லிவிங்ஸ்டோனின் ஓவரில் அடித்த அந்த பேக் டு பேக் பவுண்டரிகள், சாம் கரண் பந்தில் அடித்த அந்த ஸ்லாக் ஸ்வீப், அர்ஸ்தீப்பின் பந்தில் பேக் ஃபுட்டில் பேக்வேர்ட் பாயின்ட்டில் அடித்த அந்த தன்னிகரற்ற சிக்ஸர் என அத்தனையிலும் `கோலி ஸ்பெஷல்' என எழுதி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் அவரது ஃபுட் வொர்க், ரிஸ்டை பயன்படுத்திய விதம், டைமிங் எல்லாமே விண்டேஜ் கோலியின் விஸ்வரூபம் காட்டியது. ஆர்சிபி மட்டுமின்றி மற்ற அணிகளின் ரசிகர்களும் சற்று நேரம் ஐபிஎல்லை மறந்து உலகக்கோப்பையை நோக்கிப் பயணித்து மகிழ வைத்தது என்பதே உண்மை.

இத்தொடரில் முன்னதாக அடித்த சதத்தைவிட இந்த 92 ரன்கள் இன்னிங்ஸ் இண்டென்டின் எல்லா எழுத்துக்களையும் ஒருங்கே உச்சரித்திருந்தது.

பஞ்சாப்பை பொறுத்தவரை பௌலர்களை ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் வைத்து செய்தது போதாதென ஃபீல்டர்களும் தங்களது பங்கிற்கு சோதித்தனர். பௌலர்கள் உண்டாக்கித் தந்த வாய்ப்புகளைக்கூட கேட்ச் டிராப் என்ற பெயரால் கீழே புதைத்தனர். மொத்தம் 5 கேட்ச் டிராப்கள் அதிலும் கோலிக்கு மட்டுமே இரண்டு முறை என்பது 200 ரன்களை ஆர்சிபி அடித்ததற்கான காரணத்தை சுட்டிக் காட்டும். மோசமான ஃபீல்டிங்கால் தான் அற்புதமாக பந்து வீசிய வித்வாத் கவீரப்பா தனது அறிமுகப் போட்டியின் மூன்றாவது பந்திலேயே கோலியின் விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பும் பறிபோனது. SMAT 2022/23-ல் பௌலிங்கில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த அவர் இப்போட்டியிலும் தனது முத்திரையைப் பதிக்க மறக்கவில்லை.

பர்ப்பிள் படேலாக மீண்டும் உருவெடுத்துள்ள ஹர்சல் வழக்கமாக வீரர்கள் தாங்கள் இருந்த பழைய அணியைப் பந்தாடும் அதே ஃபார்முலாவை கடைசி ஓவரில் காட்சிப்படுத்தி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இலக்கு 250-ஐ தொடாமல் பார்த்துக் கொண்டிருந்தார். இத்தொடரில் பஞ்சாப்பின் பக்கம் மிகப்பெரிய பலமாக ஹர்சல் வலம் வந்தார் என்றால் ஆர்சிபிக்கு இரண்டாவது பாதியில் அது பட்டிதர். தொடர்ச்சியாக நம்பத்தகுந்தவராக மாறி மிடில் ஓவர்களில் ஸ்பின் பௌலிங்கை அநாயசமாக சமாளித்து வரும் பட்டிதர் இப்போட்டியில் ஸ்பின், வேகப்பந்துவீச்சு என்று இல்லாமல் எல்லாப் பந்துகளையும் துவம்சம் செய்தார். முதல் 10 ஓவர்களில் துரித ரன்கள் வந்ததற்கும், பின்னால் வந்த வீரர்கள் பயமின்றி ஆடியதற்கும் இவரது ஆட்டம்தான் ஒரு முக்கிய காரணம்.

பஞ்சாப் விட்ட ஐந்து கேட்சுகளுக்கும் சமமான ஒரு முக்கிய கேட்சினை ஆர்சிபியின் லாம்ரோர் விட்டிருந்தார். யாஷ் தயால் வீசிய ஸ்லோ பால் ரோஸோவால் அடிக்கப்பட்டு பேக்வேர்ட் பாயிண்டுக்கு விரைய, லாம்ரோர் அதனை பிடிக்கத் தவறினார். இது நடக்கையில் வெறும் 13 ரன்களை மட்டுமே ரோஸோ அடித்திருந்தார். அணியின் ஸ்கோரும் வெறும் 27/1 என்றுதான் இருந்தது. இறுதிமில் அவர் 27 பந்துகளில் 61 ரன்களைக் குவித்து வெளியேறுகையில் 9 ஓவரிலேயே 100 ரன்களை அணி எட்டி வலிமையான இடத்தை நெருங்கியிருந்தது. அரைசதத்தை அவர் அடித்த போது அவரது ஸ்ட்ரைக்ரேட் 243. நரகத்தின் அத்தனை மூலைகளுக்கும் ஆர்சிபியினை இன்பச்சுற்றுலா கூட்டிச் சென்று கொண்டிருந்தார். அவர் களத்தில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் ஆர்சிபி தொடரை விட்டு வெளியேறுவதற்கான கவுண்ட் டவுனை தொடங்கி வைப்பதற்கான பயமே சூழ்ந்திருந்தது. அந்த ஒரே ஒரு கேட்ச் சரியாகப் பிடிக்கப்பட்டிருந்தால் இன்னமும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரன்ரேட்டை ஆர்சிபி கணிசமாகக் கூட்டிக் கொண்டிருக்கும்.

அந்த கேட்ச் டிராப் வாய்ப்புகளை மங்கச் செய்தது என்றால் அதனை மீண்டும் ஒளிமயமாக்கியது ஷசாங்கினை ரன் அவுட் ஆக்கிய கோலியின் அந்த அதிவேகமும், துல்லியமும். பேட்டிங்கிற்காக மட்டும் கோலி அணியில் இல்லை, களத்தில் ஒவ்வொரு கணத்திலும் தனது இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கும் அற்புத ஃபீல்டர் அவர். உண்மையில் அந்த துடிப்புதான் அவரை அணியோடு கட்டிப் போட்டு அவரது ஆற்றலை மற்றவர்களுக்குள்ளும் கடத்துகிறது. ஜான்டி ரோட்ஸின் ஒட்டுமொத்த சாராம்சத்தையும் அந்த மைக்ரோ நொடியில் கோலி காட்டி விட்டார். அந்த தருணத்தில் 18 பந்துகளில் 37 ரன்களோடு ஷசாங்க் வெள்ளம் மடைதிறக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. அந்த ரன் அவுட்தான் போட்டியை ஆர்சிபியின் பக்கம் மாற்றி எழுதியது‌.

பத்தாவது ஓவரின் முடிவில்கூட 114 ரன்களோடு சரியான பாதையிலேயே பஞ்சாப் பயணித்துக் கொண்டிருந்தது. ஆனால் அடுத்த ஏழு ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி 67 ரன்களை மட்டுமே கொடுத்து இறுக்கிப் பிடித்து மிகப் பெரிய வெற்றியை ஆர்சிபி பௌலர்கள் அணிக்காக வென்று கொடுத்திருந்தனர்.

பவர்பிளேயில் ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் அடித்த இரண்டாவது அதிகபட்ச பவர்பிளே ஸ்கோர் (75/2) இதுதான். இருப்பினும் ரோஸோ - பேர்ஸ்டோ பார்ட்னர்ஷிப் உடைக்கப்பட்டது, ஜிதேஷின் மோசமான ஃபார்ம், லிவிங்ஸ்டோனின் ஸ்பின் பலவீனம், ஆர்சிபி பௌலர்களின் சிறப்பான பந்துவீச்சு என பஞ்சாப்பின் தோல்வி பல காரணங்களாலும் எழுதப்பட்டது. இத்தொடரில் பல போட்டிகளை விளிம்பு நிலையில் வெற்றியை பஞ்சாப் பறிகொடுத்தது. ஆனால் இப்போட்டி அந்த வகையில் சேராது. ஆர்சிபி ஆதிக்கம் செலுத்திய கணக்கிலேயே சேரும்.

வரிசையாக தோல்விகளை மட்டுமே சந்தித்து தொடரில் பரிதாபகரமான நிலையில் இருந்த ஆர்சிபி வரிசையாக நான்கு போட்டிகளை வென்றுள்ளதோடு தனது ப்ளே ஆஃப் வாய்ப்பினையும் இன்னமும் உயிர்ப்போடு வைத்துள்ளது‌.

ஆர்சிபியின் நேற்றைய வெற்றிக்கான காரணம் குறித்த உங்கள் கருத்தைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!


http://dlvr.it/T6gkbf

Post a Comment

0 Comments