IPL 2024: ஊருக்குக் கிளம்பிய இங்கிலாந்து வீரர்கள், சிக்கலில் அணிகள்; எப்படிச் சமாளிப்பார்கள்?

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சொன்னதைப் போலவே உலகக்கோப்பைக்குச் சில வாரங்களுக்கு முன்பாகவே தங்கள் அணியின் வீரர்களை ஊருக்குத் திரும்ப வைத்திருக்கிறது.

ஜாஸ் பட்லர் இங்கிலாந்துக்குக் கிளம்பும் வீடியோவை வெளியிட்டு ராஜஸ்தான் நிர்வாகம் வாழ்த்து கூறி வழியனுப்பியிருக்கிறது. பெங்களூருவிலிருந்து வில் ஜாக்ஸூம் ரீஸ் டாப்ளேவும் கூட கிளம்பிவிட்டனர். இது ஒரு நல்ல அனுபவம் என கூறிவிட்டு லிவிங்ஸ்டனும் டாடா காட்டியிருக்கிறார். மே 18-ம் தேதி பெங்களூருவிலிருந்து அப்படியே மொயீன் அலியும் கிளம்பக்கூடும். இந்த எல்லா வீரர்களுமே அவரவர் அணிகளுக்கு மிக முக்கியமானவர்கள். அவர்களை இழக்கும் அணிகள் அவர்களின் இடத்தை எப்படி நிரப்பி சமாளிக்கப்போகின்றன?

ராஜஸ்தான் ராயல்ஸ்:

இங்கிலாந்து வீரர்கள் தங்கள் நாட்டிற்குக் கிளம்புவதில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகப் போவது ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள்தான். ராஜஸ்தான் அணிக்கு இன்னமும் 2 லீக் போட்டிகள் மிச்சமிருக்கின்றன. இதுவரை 8 போட்டிகளில் வென்றிருக்கிறார்கள். எப்படியும் பிளே-ஆஃப்ஸூக்குச் சென்றுவிடுவார்கள். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படியிருக்க இந்த மாதிரியான முக்கியமான கட்டத்தில் பட்லர் இல்லை என்பது அணிக்குப் பெரும் பின்னடைவுதான். பட்லர் இந்த சீசனில் அவ்வளவு சீராக, சிறப்பாக ஒன்றும் ஆடிவிடவில்லை.11 போட்டிகளில் 359 ரன்களை அடித்திருக்கிறார். இதில் 2 சதங்களும் அடக்கம். அவற்றை கழித்துவிட்டு பார்த்தால் மற்ற போட்டிகளில் சுமார்தான். ஆனாலும் பட்லர் முக்கியமானவர். இக்கட்டான பெரிய போட்டிகளில் பட்லர் மாதிரியான ஒரு வீரரால் தனி ஆளாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆட முடியும்.ஜோஸ் பட்லர்

அவர் பார்மில் இருக்கிறாரா இல்லை என்பதெல்லாம் கவலை இல்லை. அவர் அணியில் இருந்தாலே போதும். பெரிய போட்டிகளில் நிச்சயமாகப் பலனளித்திருப்பார். அவர் இல்லை எனும்போது அவரை அப்படியே ரீப்ளேஸ் செய்யும் வகையில் ராஜஸ்தானிடம் வீரர்களும் இல்லை. பட்லர் இந்த சீசனில் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டும் ஆடவில்லை. அந்தப் போட்டியில் தனுஷ் கோட்டியான் என்கிற வீரரைப் பயன்படுத்தி பார்த்தார்கள். பெரிதாகச் சோபிக்கவில்லை. ஆனாலும் மீண்டும் அவரிடமே செல்ல வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிய குனால் சிங் ரத்தோர் என்கிற வீரர் இருக்கிறார். இங்கிலாந்தின் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிய டாம் ஹாக்லர் எனும் வீரர் இருக்கிறார். ஆனால், பிளே ஆஃப்ஸ் செல்லும்போது மூவரையுமே அவ்வளவு பெரிய போட்டியில் நம்பி இறக்க முடியுமா என்கிற ஐயம் நிச்சயமாக இருக்கும். யாஷஸ்வி வேறு சரியான டச்சில் இல்லை. இதனால் சாம்சன் தானே பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஓப்பனிங் வந்து இறங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ராஜஸ்தானுக்குப் பிறகு அதிக பாதிப்பு பெங்களூருவுக்குதான். வில் ஜாக்ஸூம் ரீஸ் டாப்ளேவும் கிளம்பிவிட்டார்கள். வில் ஜாக்ஸ் பெங்களூருவுக்கு வேகத்தை கூட்டி புது உத்வேகத்தை கொடுத்தார். எக்ஸ்பிரஸ் வேகத்தில் சதமெல்லாம் அடித்தார். 8 போட்டிகளில் 230 ரன்கள்தான் அடித்திருக்கிறார். ஆனால் ஸ்ட்ரைக் ரேட் 175. கண் இமைக்கும் நேரத்தில் பட்டாசாக வெடித்து போட்டியை தலைகீழாக மாற்றும் வல்லமை உடையவர்.Jacks

சென்னைக்கு எதிராக மே 18-ம் தேதி ஒரு Do or Die போட்டியில் பெங்களூரு ஆடவிருக்கிறது. அந்தப் போட்டியில் வில் ஜாக்ஸ் நல்ல பலனைக் கொடுத்திருப்பார். அவர் இல்லை எனும்போது முதல் சில போட்டிகளில் அவர் இல்லாமல் எப்படி அணியை எடுத்தார்களோ அப்படியே எடுக்கக்கூடும். விராட் கோலியின் தலை மீது கொஞ்சம் கூடுதல் சுமை ஏற்றப்பட்டதை போல இருக்கும். ரீஸ் டாப்ளேவும் இல்லை. அது பெரிய இழப்பும் இல்லை. இந்த சீசன் முழுக்க 4 போட்டிகளில்தான் ஆடியிருக்கிறார். கடைசியாக பெங்களூரு வென்றிருக்கும் 5 போட்டிகளிலுமே அவர் இல்லை. ஆக, அது ஒரு பெரிய இழப்பே கிடையாது.

பஞ்சாப் கிங்ஸ்:

பஞ்சாப் அணி பிளே ஆஃப்ஸூக்குச் செல்லும் வாய்ப்பு இருந்திருக்கும்பட்சத்தில் அவர்களுக்குப் பலத்த அடி விழுந்திருக்கும். லிவிங்ஸ்டன் காயத்தைக் காரணம் காட்டி இப்போதே கிளம்பிவிட்டார். பேர்ஸ்ட்டோவும் சாம் கரனும் இந்த வார இறுதியில் கிளம்பிவிடுவார்கள். பிளேஆஃப் சென்றிருந்தால் பெரிய பிரச்னையாகியிருக்கும். இப்போது ஒன்றும் இல்லை. இன்னும் 2 லீக் போட்டிகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன. லிவிங்ஸ்டன் இந்த சீசனில் பார்மிலேயே இல்லை. காயத்தால் வேறு அவதிப்பட்டு வந்தார். அவரிடமிருந்து பெரிய பங்களிப்பும் வரவில்லை. ஆக, அவர் இல்லாததும் பெரிய இழப்பெல்லாம் இல்லை. Livingstone & Jitesh

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கொல்கத்தா அணியில் பில் சால்ட் இந்த வாரத்தோடு கிளம்புவார். கொல்கத்தா அணி பிளேஆஃப்ஸை ஏற்கெனவே உறுதி செய்துவிட்டது. முதல் இரண்டு இடங்களுக்குள்ளும் முடிக்கப் போகிறது.பில் சால்ட் 12 போட்டிகளில் 435 ரன்களை 182 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். அபாரமான ஆட்டம். கூடவே நரைனும் பட்டையைக் கிளப்புவதால் இது ஒரு அபாய கூட்டணியாக இருந்தது. பில் சால்ட்டை அப்படியே ரீப்ளேஸ் செய்ய முடியாது என்றாலும் கொல்கத்தா அணியால் சமாளித்துவிட முடியும்.Phil Salt

ஆப்கன் வீரர் குர்பாஸ் வந்திருக்கிறார், அவரை மேலே ஆட வைக்கலாம். விக்கெட் கீப்பிங் பணியையும் பார்த்துக் கொள்வார். கே.எஸ்.பரத்தும் அணியில் இருக்கிறார். அவரையும் கூட பயன்படுத்தலாம். ஆனால், இவர்களெல்லாம் சால்ட் அளவுக்கு அதிரடி நெடி கிளப்புவார்களா என்பது சந்தேகம். ஒருவேளை அதிரடிக்காக வெங்கடேஷ் ஐயரை ஓப்பனராக்கிவிட்டு இடையில் வேறு யாரையாவது வைத்து கூட சமாளிக்க முற்படலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

சென்னை அணியின் முக்கியமான வீரர் மொயீன் அலி. 2021 சீசனில் சென்னை சாம்பியனாக மிக முக்கிய காரணமாக இருந்தவர். அவர் இந்த வாரத்தோடு இங்கிலாந்து கிளம்பப்போகிறார். தகுதிச்சுற்று - 2 போட்டியும் இறுதிப்போட்டியும் சென்னையில் நடைபெறவிருப்பதால் மொயீன் அலி முக்கியமான வீரராக இருந்திருக்கக்கூடும். ஆனால், இங்கேதான் சென்னை அணி செய்த ஒரு தவறு அவர்களுக்குக் கைக்கொடுக்கப்போகிறது. இந்த சீசனில் சென்னை அணி மொயீன் அலியை சரியாகவே பயன்படுத்தவில்லை. Moeen

பல போட்டிகளில் பேட்டிங்கும் கொடுக்காமல் பௌலிங்கும் கொடுக்காமல் பெரிதாகப் பயன்படுத்தாமலே அணியில் வைத்திருந்தார்கள். பயன்படுத்திய போட்டிகளிலும் அவரின் திறனுக்கேற்ற வகையில் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. ஆக, அவர் இல்லை எனும்போது அது சென்னை அணியை பெரிதாகப் பாதிக்கவெல்லாம் செய்யாது என்பதே நிதர்சனம்.


http://dlvr.it/T6rXmp

Post a Comment

0 Comments