டேபிளின் அடியில் இருந்த குஜராத் பலங்கொண்டு தாக்கியதில் பலத்த சேதாரத்தை சி.எஸ்.கே சந்தித்து இருக்கிறது. ஆம், வென்றே ஆக வேண்டிய கட்டத்தில் சி.எஸ்.கே சொதப்பியிருக்கிறது. குஜராத்துக்கு எதிராக மோசமாகத் தோற்றிருக்கிறது.GT v CSK
டிராவிஸ் ஹெட் - அபிஷேக் ஷர்மா போல மிஷின் கன்களாக பந்துகளைச் சிதற விடுவது சுப்மன் கில் - சாய் சுதர்சனின் பாணியல்ல. கிளாசிக்கல் கிரிக்கெட்டிலேயே ஊறிப் போனவர்கள். கில்லின் டி20 அணுகுமுறை குறித்த கேள்விகளை எழ வைத்ததும், சாய் சுதர்சனின் இன்னிங்ஸ்களில் அச்சுறுத்தும் ஸ்ட்ரைக்ரேட் என்பதே பெரும்பாலும் இல்லாமல் போனதற்கும் இதுவே காரணம். நடைமுறைக்கு சாத்தியமே இல்லாததாகக் கருதுபவற்றை சூழலின் நெருக்கடி வெளியே கொண்டு வந்து விடும். குஜராத்தின் இன்னிங்ஸில் நடந்ததும் அதுதான்.
முஸ்தாஃபிஜுர், பதிரனா, தீபக் சஹார் என பௌலிங் யூனிட்டின் பெரும்பாதி காணாமல் போன பரிதாப நிலைதான் சி.எஸ்.கே-விற்கு, களச் சூழல் மொத்தமாக பேட்ஸ்மேன்களோடு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதுதான், பௌலர்களை சரியாக சுழற்சி முறையில் பயன்படுத்தாமல் ருத்துராஜ் கெய்க்வாட்டும் கேப்டன்ஷியில் பின்தங்கினார்தான், எனினும் இவை மட்டுமே இந்த இருவரின் இணையற்ற இன்னிங்ஸிற்குக் காரணமல்ல.
ஒரு சில நல்ல பந்துகள் கூட இவர்களிடம் மரண அடி வாங்கியதைப் பார்க்க முடிந்தது. இந்த சீசனில் தங்களது வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டமாக மட்டுமல்ல, கடந்த சீசன் இறுதிப் போட்டியில் இதே களத்தில் நடந்ததற்கான பழி வாங்கும் நடவடிக்கையாகவே ஒவ்வொரு தாக்குதலும் இருந்தது.
டெத் ஓவர்களில் அல்ல, மிடில் ஓவர்களிலேயே யார்க்கர்கள், கட்டர்கள் என சி.எஸ்.கே பௌலர்கள் விக்கெட் வீழ்த்துவதற்கான அஸ்திரங்களைப் பயன்படுத்திப் பார்த்தார்கள். ஆனால் பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போவதாகச் சொல்லப்படும் கப்பல்கள் போல அடித்த மாத்திரத்தில் மறைந்த பந்துகள் பவுண்டரி லைனுக்கு அப்பால்தான் கண்டெடுக்கப்பட்டன. குஜராத் அடித்த 231 ரன்களில், 138 ரன்கள் பவுண்டரி மற்றும் சிக்ஸரிலேயே வந்திருந்தன. அதாவது 60 சதவிகிதம் ரன்கள் பெரிய ஷாட்களிலேயே வந்திருந்தன. GT v CSK
ஐபிஎல்லின் 100-வது சதத்தினை அடித்த கில்லிற்கு இது ஐபிஎல்லில் நான்காவது மற்றும் அஹமதாபாத்தில் மூன்றாவது சதம். அந்தக் களத்தில் கடந்த சீசனில் ரன்வேட்டை ஆடியிருந்த கில், இத்தொடரில் சற்றே திணறியிருந்தார். ஆனால் இப்போட்டியிலோ சந்தித்த முதல் பந்திலிருந்தே `சதம்' என்ற தலைப்பில் எழுதப்பட்டதாகவே அவரது இன்னிங்ஸ் இருந்தது. ஐபிஎல் வரலாற்றின் நூற்றி ஒன்றாவது சதத்தை அடித்த சாய் சுதர்சனோ பவர்பிளேவுக்குள் கில்லின் அதிரடியைப் பார்த்து வியந்து கொண்டு மட்டுமே இருந்தார். 29 பந்துகளில் கூட 39 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் அந்தக் கட்டத்திற்குப் பிறகு கில்லின் பேட்டுக்குச் சமமாக சாய் சுதர்சனுடையதும் கர்ஜிக்கத் தொடங்கியது. ஸ்பின் பந்துகளைப் பந்தாடுவதுதான் பொதுவாக அவரது பலம். ஆனால் இப்போட்டியிலோ அதற்கு சமமாக வேகப்பந்துவீச்சுக்கு எதிராகவும் அவரது ஆதிக்கம் தொடர்ந்தது.
ஓவருக்கு 10 ரன்கள், விழாத விக்கெட்டுகள் இவை எல்லாம் குஜராத்தின் ஸ்கோரை 250-ஐ தாண்ட வைத்திருக்க வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்தியது தாக்கூரின் அற்புத ஸ்பெல்தான். துஷார் தவிர மற்றவர்களின் எக்கானமி எல்லாம் 10-ஐ தாண்டியிருக்க தாக்கூரோ வெறும் 6.2 எக்கானமியோடு முடித்திருந்தார். முதல் ஓவரில் கொடுத்த இரு பவுண்டரிகளுக்குப் பின் வீசிய மீதம் மூன்று ஓவர்களில் ஒரு பவுண்டரியைக் கூட தாக்கூர் தரவில்லை. இறுதி 5 ஓவர்களில் வெறும் 41 ரன்களை மட்டுமே கொடுத்து சிறப்பாகக் கட்டுப்படுத்தி இருந்தனர். GT v CSK
1, 1, 0 என பைனரி இலக்கத்தில் மட்டுமே ரன்கள் அடிப்போம் என அடம்பிடித்த டாப் ஆர்டர், அதிலும் பேக் டு பேக் பந்துகளில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்த ஓப்பனர்கள், பொறுப்பேயின்றி ரன் கணக்கைத் தொடங்காமலே ஆட்டமிழந்த கேப்டன் என ஆட்டம் தொடங்கிய மூன்றாவது ஓவருக்குள்ளேயே போட்டியை ஏறக்குறைய முடித்துக் கொண்டது சி.எஸ்.கே. உண்மையில் அதற்குப் பிறகு வீசப்பட்ட ஓவர்கள் எல்லாம் சம்பிரதாயத்துக்காகவும், ஒரு கௌரவமான ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே தோற்றுக் கொள்வதற்காகவும் மட்டுமே வீசப்பட்டன என்பதே உண்மை.
200+ ஸ்கோர்களைத் துரத்துவது ஒரு கலை, நடப்புத் தொடரில் பல அணிகளும் தேர்ச்சி பெற்றிருக்கும் கலை. சி.எஸ் கே-விற்கு இத்தொடரில் இந்தப் போட்டிக்கு முன்பாக அதற்கான வாய்ப்பு வரவில்லை. இத்தொடரில் நான்கு முறை முதலில் பேட்டிங் செய்த சந்தர்ப்பங்களில் சி.எஸ்.கே 200 ரன்களை கடந்திருந்தது. ஆனால் இப்போட்டிக்கு முன்பாக அவர்கள் வெற்றிகரமாக சேஸ் செய்து வென்றிருந்த அதிகபட்ச ஸ்கோரே ஆர்.சி.பி-க்கு எதிராக முதல் போட்டியில் இலக்காக வைக்கப்பட்ட 174 ரன்களைத்தான்.GT v CSK
டெல்லி நிர்ணயித்த 192 ரன் இலக்கையே சி.எஸ்.கே-வால் எட்ட முடியாமல்தான் போனது. ஆக, முன்பாக சேஸ் செய்த மூன்றில் இரண்டை வென்றிருந்தாலும் அவை எல்லாம் குறைந்த ஸ்கோர்களே. அதுவே சி.எஸ்.கே-வின் மனதில் ஒரு மலைப்பினையும் பலவீனத்தையும் கொண்டு வந்துவிட்டதோ என்னவோ 232 என்ற இலக்கை அடைய ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்ற திட்டமிடல் இல்லாமலே வந்திருந்தனர்.
ஃபீல்டிங் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி ரஹானே உள்ளிட்ட டாப் ஆர்டர் பவர்பிளேயில் விக்கெட் விடாமல் 12 ரன்ரேட்டில் ரன்களைக் கொண்டு வந்து, மிடில் ஆர்டரின் மேல் அழுத்தத்தை ஏற்றாமல் சென்றிருந்தாலே பின்வரிசை கைவரிசை காட்டியிருக்கும். ரஹானே - ஃபீல்டிங்கிற்காக மட்டுமே இம்முறை சி.எஸ்.கே தன் வசம் வைத்திருந்த வீரராகி விட்டார். 19 என்னும் அவரது ஆவரேஜ்தான் இத்தொடரில் 200 ரன்களைக் கடந்த பேட்ஸ்மேன் ஒருவரின் மோசமான சராசரி. மிட்செல் - மொயின் அலி கொண்டு வந்த ரன்களால் மட்டுமே சி.எஸ்.கே 200-ஐ நெருங்கும் ஸ்கோரையாவது அடித்திருந்தது.
மிடில் ஓவர்களில் மட்டுமே சற்றே தடுமாறிய குஜராத் பவர்பிளேயிலும், டெத் ஓவர்களிலும் அசாத்தியமாக பந்து வீசியிருந்தது. குறிப்பாக கடைசி ஆறு ஓவர்களில் மோகித் வீசிய மூன்று ஓவர்கள்தான் கேம் சேஞ்சிங் தருணமானது. 25 ரன்களை மட்டுமே அந்த ஓவர்களில் கொடுத்திருந்தார். அதுதான் சி.எஸ்.கே-வை இலக்கை நெருங்க விடாமல் செய்தது.
உண்மையில் தாக்கூர், தேஷ்பாண்டேவுக்கு துணையாக இன்னமும் ஒருவர் கட்டுக்கோப்பாக பந்து வீசியிருந்தாலோ அல்லது மிட்செல், மொய்ன் அலிக்குச் சமமான பொறுப்போடு இன்னமும் ஓரிரு பேட்ஸ்மேன்கள் ஆடியிருந்தாலோ வெற்றி கிட்டியிருக்கா விட்டாலும் ரன்ரேட் கணக்கிலாவது இந்த அளவிலான சேதாரம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். GT v CSK
சி.எஸ்.கே-வின் தோல்வி ஏபிடி குறிப்பிட்டிருந்ததைப் போல் ஆர்.சி.பி உள்ளிட்ட சில அணிகளுக்கு ஆறுதல் அளித்திருக்கும். அதேநேரத்தில் குஜராத்தின் ப்ளே ஆஃப் வாய்ப்பும் முடிந்து விடாமல் தொடரின் சுவாரஸ்யத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
புள்ளிப் பட்டியலில் இடமாற்றம் இல்லை என்றாலும் சி.எஸ்.கே விழித்துக் கொள்வதற்கான அலாரத்தை சத்தமாக ஒலிக்க விட்டுள்ளது இந்த தோல்வி.
http://dlvr.it/T6k90p

0 Comments
Thanks for reading