ப்ளே ஆப்ஸ் ரேஸில் இன்னொரு மிக முக்கியமான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. டெல்லி, லக்னோ என மோதிய இரண்டு அணிகளுமே ப்ளே ஆப்ஸ் வாய்ப்பில் நீடித்து வந்த அணிகள். அந்த இரு அணிகளும் நேரடியாக மோதிக்கொண்டதால் இந்தப் போட்டியின் மீது நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. டெல்லி அணி இந்தப் போட்டியை வென்றிருக்கிறது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் கொஞ்சம் தெளிவு கிடைத்திருக்கிறது. சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கான ப்ளே ஆப்ஸ் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
டெல்லி அணியே இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்திருந்தது. டெல்லி அருண் ஜெட்லி மைதானம் இன்னொரு சின்னச்சாமி மைதானம். இங்கேயும் தொடர்ச்சியாக பெரிய ஸ்கோர்களைத்தான் பார்த்து கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் நேற்றையப் போட்டியும் பெரிய ஸ்கோராகவும் சுவாரஸ்யமாக சென்ற ஆட்டமாகவுமே இருந்தது. எப்போதுமே பட்டாசாக வெடிக்கும் மெக்கர்க் இந்த போட்டியில் டக் அவுட். வேகப்பந்து வீச்சாளர் அர்ஷத் அவரின் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்தார். மெக்கர்க் நின்று என்ன செய்திருப்பாரோ அதை அபிஷேக் பொரேல் செய்து கொடுத்தார். பவுண்டரியையும் சிக்சர்களையும் மட்டுமே குறிவைத்து தாண்டவம் ஆடினார். பாரபட்சமே பார்க்காமல் அத்தனை பௌலர்களையும் வெளுத்தெடுத்தார். அபிஷேக் பொரேலும் இந்த சீசனில் ரொம்பவே நன்றாக அதிரடியாகத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார். ஆனால், இன்னொரு முனையில் மெக்கர்க் சூறாவளியாக சுழன்றடித்து கொண்டிருந்ததால் அபிஷேக் பொரேலின் மேல் கொஞ்சம் குறைவாகவே கவனம் இருந்தது. ஆனால் நேற்றைய போட்டியில் மெக்கர்க் டக் அவுட் ஆனதால் பவர்ப்ளேயில் அதிரடியாக மொமண்டம் கொடுக்க வேண்டிய பொறுப்பு மொத்தத்தையும் பொரேலே ஏற்றுக்கொண்டு கலக்கினார்.
இந்திய அணியில் இடதுகை பேட்டர்கள் ரொம்பவே குறைவாக இருக்கிறார்கள். பொரேல், சாய் சுதர்சன் போன்றோர் இளம் வீரர்களாக இடதுகை பேட்டர்களாக கலக்குவது புது நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. பொரேல் அடித்த வேகத்திற்கு டெல்லி அணி 250 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொரேல் 58 ரன்களில் நவீன் உல் ஹக்கின் பந்தில் அவுட் ஆனார். டெல்லி அணியின் வேகம் இத்துடன் குறைந்தது. மிடில் ஒவர்களில் வேகம் குறைந்து ஒரு கட்டத்தில் 200 ரன்களை கடப்பார்களா என்பதே சந்தேகமாக இருந்தது. ஆனால், கடைசியில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் காப்பாற்றிவிட்டார். அபிஷேக் பொரேல் பவர்ப்ளேயில் செய்ததை ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் டெத் ஓவர்களில் செய்துவிட்டார். தன் பங்குக்கு ஒரு காட்டு காட்டிவிட்டார். பவுண்டரியும் சிக்சர்களுமாக பறக்கவிட்டார். ஸ்கோர் 200 ஐ தாண்டியது. ஸ்டப்ஸூம் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் அரைசதத்தை கடந்தார். டெல்லி அணி 208 ரன்களை சேர்த்தது.
லக்னோ 209 ரன்களை எடுக்க வேண்டும். பெரிய டார்கெட்தான். இந்த மைதானத்தில் அதை எடுக்கவும் முடியும். ஆனாலும் லக்னோ சொதப்பியது. பவர்ப்ளேக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் கே.எல்.ராகுல் அரைகுறையாக ஷாட் ஆடி இஷாந்த் சர்மா வீசிய முதல் ஓவரிலேயே அவுட் ஆகினார். டீகாக், ஸ்டாய்னிஸ், தீபக் ஹீடா என நான்கு முக்கியமான வீரர்களும் அவுட். இந்த 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகளை இஷாந்த் சர்மாவே வீழ்த்தினார். இந்த 3 விக்கெட்டுகளுக்காகதான் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. லக்னோவின் தோல்வி உறுதியாகிக் கொண்டிருந்த சமயத்தில் பூரன் அதிரடியாக ஆடி ஒரு அரைசதத்தை அடித்தார்.
லக்னோ ஆறுதல் வெற்றியை நோக்கி நகர்வதை போல தெரிந்தது. இந்த சமயத்தில்தான் பௌலர் அர்ஷத் திடீரென விஸ்வரூபமெடுத்து வெளுத்தெடுத்தார். கடைசிக்கட்டத்தில் வேகவேகமாக அரைசதம் அடித்து போட்டியை நெருக்கமாக கொண்டு வந்தார். இதனால் லக்னோ போராடி தோல்வி என்கிற நிலைக்கு முன்னேறியது 19 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
டெல்லியின் வெற்றியால் சென்னை அணிக்கான ப்ளே ஆப்ஸ் வாய்ப்பு ரொம்பவே பிரகாசமாகியிருக்கிறது. பெங்களூர் அணியின் ரன்ரேட் நன்றாகவும் இருப்பதால் அவர்களுக்குமே நல்ல வாய்ப்பு இருக்கிறது. டெல்லிக்கும் லக்னோவுக்கும் ரன்ரேட் பிரச்சனையாக இருப்பதால் அவர்கள் ஏறக்குறைய தொடரைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.
http://dlvr.it/T6vXBP

0 Comments
Thanks for reading