சேப்பாக்கத்தில் தங்களது கடைசி லீக் போட்டியை வெற்றிகரமாக முடித்திருக்கிறது சென்னை அணி. போட்டியின் மீது அத்தனை எதிர்பார்ப்புகள் இருந்தது.
தோனியின் கடைசிப் போட்டியாக இருக்கும் என்கிற அனுமானம் ஒரு பக்கம் ப்ளே ஆப்ஸ் செல்ல வேண்டுமெனில் வென்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் ஒரு பக்கம் என எத்தனையோ எதிர்பார்ப்புகள்.ஒருவழியாக ரசிகர்கள் பயந்த இரண்டு விஷயங்களுமே நடக்கவில்லை. சென்னை அணியும் தோல்வியை தவிர்த்திருக்கிறது. தோனியும் ஓய்வை அறிவிக்கவில்லை.
இந்தப் போட்டியிலும் டாஸ் ருத்துராஜூக்கு ஆதரவாக இல்லை. சாம்சன் தான் டாஸை வென்றார். முதல் பேட்டிங்கை தேர்வு செய்தார். மாலை நேர ஆட்டம் என்பதால் டாஸெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றார் ருத்துராஜ். அவரிடம் ஒரு தெளிவு இருந்தது. நீண்ட நாள் கோரிக்கைக்குப் பிறகு ரஹானேவை பென்ச்சில் வைத்தார். பரிசோதனை முயற்சிக்கெல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு தானே ஓப்பனிங் இறங்கப்போவதாகவும் அறிவித்தார்.
ராஜஸ்தான் பேட்டிங்கைத் தொடங்கியது. ராஜஸ்தான் அணி மனதளவிலேயே இந்த பிட்ச் ஒரு கடினமான பிட்ச் என்ற பிரமிப்போடு பேட்டிங் ஆட வந்ததை போல இருந்தது. அந்த அணியின் சார்பில் டோனோவன் பெரேரா நேற்று பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்திருந்தார். பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்கிற கருத்தைதான் அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதே மனநிலையில்தான் இன்று பட்லரும் ஜெய்ஸ்வாலும் பேட்டிங் ஆட வந்தார்கள் போல. மஹீஸ் தீக்சனாவும் துஷார் தேஷ் பாண்டேவும் பவர்ப்ளேயில் பெரும்பாலான ஓவர்களை வீசியிருந்தனர். பெரிதாக பவுண்டரிகளை குறி வைத்து பெரிய ஷாட்களை இந்த கூட்டணியால் ஆட முடியவே இல்லை. கனெக்ட் செய்ய முடியாமல் தடுமாறினார்கள்.
நிறைய டாட்கள் ஆடினார். பவர்ப்ளே 36 பந்துகளில் 17 பந்துகள் டாட் ஆடியிருந்தனர். 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சரை மட்டுமே அடித்திருந்தனர். பவர்ப்ளேக்குள் 42 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர். சுமாரான பேட்டிங். பட்லரின் ஸ்ட்ரைக் ரேட் 100 க்கு கீழ் சென்றுகொண்டிருந்தது. இந்த சமயத்தில்தான் சிமர்ஜித் சிங்கின் கையில் பந்து சென்றது. வேகத்தை கூட்டியும் குறைத்தும் வித்தை காட்டினார். ஜெய்ஸ்வாலுக்கு குரு நல்ல ஷார்ட் பந்தை வீசி அரைகுறையாக வீசி ருத்துராஜிடம் கேட்ச் ஆக வைத்தார். ரன்ரேட் அழுத்தம் ஏறிக்கொண்டிருந்த சமயத்தில் பட்லரை பைன் லெகில் ஸ்கூப் ஆட வைத்து கேட்ச் ஆக்கினார். இதன்பிறகு சாம்சனும் ரியான் பராக்கும் கூட்டணி சேர்ந்தனர். நல்ல கூட்டணி. இந்த சீசனில் சில மிகச்சிறப்பான பார்ட்னர்ஷிப்களை அமைத்திருக்கின்றனர்.
ஆனால், இன்று அவர்களாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. நான்கைந்து ஓவர்களுக்கு பவுண்டரிக்கே செல்லாமல் ரிஸ்க்கே எடுக்காமெல்லாம் ஆடினார்கள். ஆனாலும் பிரயோஜனமில்லை. 19 பந்துகளில் 15 ரன்களை மட்டுமே எடுத்திருந்த சாம்சனை சிமர்ஜித் சிங்கே வீழ்த்தினார். கடைசி 5 ஓவர்களில் ரியான் பராக்கும் துருவ் ஜூரேலும் மட்டும் 47 ரன்களை சேர்த்திருந்தனர். பவர்ப்ளேயிலும் மிடிலிலும் ஆடிய ஆட்டத்திற்கு இது எவ்வளவோ பரவாயில்லை. ரியான் பராக் 35 பந்துகளில் 47 ரன்களை எடுத்திருந்தார். பவர்ப்ளேயில் சிறப்பாக வீசியபோதும் விக்கெட் எடுக்காத துஷார் கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.ராஜஸ்தான் அணி 44 பந்துகளை டாட் ஆக ஆடியிருந்தது. ஓவராக பார்த்தால் 7.2 ஓவர்கள். மீதமிருந்த 12.4 ஓவர்களில்தான் 141 ரன்களை அடித்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் திட்டமிட்டு டாட் பால்களை குறைத்திருந்தால் 10-20 ரன்களை கூடுதலாக அடித்திருக்கலாம்.
சென்னைக்கு டார்கெட் 142. பார்ப்பதற்கு சுலபமான டார்கெட் போல தெரிந்தாலும் சென்னை அணியும் இந்த டார்கெட்டை கொஞ்சம் பக்குவமாகத்தான் அணுகியது. தொடக்கத்திலிருந்தே கொஞ்சம் ரிஸ்க் எடுக்காமல் ஆட முற்பட்டனர். அப்படியிருந்தும் சீரான இடைவெளிகளில் விக்கெட் விழுந்தது. மண்ணின் மைந்தனான அஷ்வின் பவர்ப்ளேக்குள்ளாகவே பந்தை வாங்கி ரச்சினின் விக்கெட்டை காலி செய்தார். அவரின் சக ஸ்பின்னரான சஹாலும் தன் பங்குக்கு டேரில் மிட்செலை lbw ஆக்கினார். ருத்துராஜ் ஒரு முனையில் நின்று 100 க்கும் கீழான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட மிட்செல்தான் பவுண்டரிகளை குறிவைத்துக் கொண்டிருந்தார். அவரையும் சஹால் காலி செய்தார். மேலே வந்த மொயீன் அலியும் பெரிதாக அடிக்காமல் உருட்டிவிட்டு ஆவேஷ்கானிடம் வீழ்ந்தார்.
ஒருமாதிரியாக போட்டி சரிசமமாக செல்வதைப் போலத் தோன்றியது. இந்த சமயத்தில்தான் துபே அஷ்வினின் ஓவரில் ஒரு காட்டு காட்டினார். இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் பெரிய ஓவராக அந்த ஓவரை ஆக்கி அதே ஓவரில் அவுட்டும் ஆனார். பந்துக்கு பந்தாக தேவைப்படும் ரன்கள் வந்து நின்றது. இதன்பிறகு பிரச்சனையில்லலை என்று நினைத்தால் சென்னை அணி ட்விஸ்ட் கொடுத்துக் கொண்டே இருந்தது. ஸ்டம்பை மறைத்துக் கொண்டு ஓடி பீல்டருக்கு இடையூறாக ஓடி ரன் அவுட்டிலிருந்து தப்பித்த ஜடேஜாவுக்கு அப்பீல் சென்று அவுட் வாங்கிக் கொடுத்தார் சாம்சன். 5 விக்கெட்டுகளை சென்னை இழந்திருந்தது.கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தனர் ரசிகர்கள். ஆனாலும் நெருக்கிப் பிடிக்கும் அளவுக்கு ராஜஸ்தானின் கையில் ரன்கள் இல்லாததால் சென்னை தப்பியது. 4 ஓவர்களுக்கு 21 ரன்கள்தான் தேவைப்பட்டது. ருத்துராஜ் நின்று ஆடி வென்று கொடுத்தார்.
5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இதுதான் கடைசி லீக் போட்டி என்பதால் தோனியுடன் சென்னை அணி வீரர்கள் அனைவரும் ஒன்றாக மைதானத்தை சுற்றிவந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தனர். டாட்களை குறைத்து 160 ரன்களுக்கு மேலாக சென்றிருந்தால் ராஜஸ்தான் அணியால் இன்னுமே நெருக்கமாக இந்தப் போட்டியை கொண்டு சென்றிருக்க முடியும். தவறவிட்டுவிட்டார்கள்
சென்னை அணியின் 13 வது போட்டி இது. வென்றே ஆக வேண்டிய இந்தப் போட்டியை சென்னை அணி சிறப்பாக வென்றுவிட்டது. இதன்மூலம் மொத்தமாக 7 போட்டிகளை வென்றிருக்கிறது. ஒரு வாரம் இடைவெளிவிட்டு பெங்களூரு அணியை சின்னச்சாமி மைதானத்தில் மே 18 ஆம் தேதி எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியையும் சென்னை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறது.
http://dlvr.it/T6mmcW

0 Comments
Thanks for reading