Yashasvi Jaiswal: முதல் போட்டியிலேயே சதம், ஆட்டநாயகன் விருது; சாதித்துக் காட்டிய ஜெய்ஸ்வாலின் கதை!

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் - இப்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் உச்சரித்துக் கொண்டிருக்கும் பெயர். ஐ.பி.எல்லின் போதே தன் அதிரடியால் அனைவருக்கும் அறிமுகம் ஆனாலும் வெஸ்ட் இண்டீஸ் உடனான இந்தச் சதத்தின் மூலம் இந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் இந்த 21 வயது இளைஞன். ஸ்போர்ட்ஸ் பயோபிக் டெம்ப்ளேட்டில் 'அண்டர்டாக்' கதைக்கு அப்படியே பொருந்திப் போகக்கூடிய வாழ்க்கைதான் ஜெய்ஸ்வாலுடையது. எளிய மனிதர்கள் மிகப்பெரும் உயரத்தை அடையும்போது நாமே அந்த இடத்தை அடைந்ததைப் போல மகிழ்ச்சி கிட்டும். நடராஜன், சிராஜ், ஜெய்ஸ்வால், ரிங்கு சிங்க் போன்றோரை அவ்வளவு பேர் கொண்டாடக் காரணமும் அதுதான். மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் சொல்வதுபோல பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூர், கொல்கத்தா போன்ற பெருநகரங்களிலிருந்தே வந்துள்ளனர். உத்தரப்பிரதேச கிராமத்தில் எளியக் குடும்பத்தில் பிறந்த ஜெய்ஸ்வால் தனது கிரிக்கெட் கனவுக்காக மும்பைக்குக் குடிபெயர்கிறார். அங்கு ஒரு பால் கடையில் வேலைபார்த்துக் கொண்டே கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்கிறார். பிறகு கிரிக்கெட் பயிற்சியால் வேலையைச் சரிவர கவனிக்க முடியாமல் போகவே வேலையை விட்டு நிறுத்தப்படுகிறார். அதனால் மைதானத்திலே தங்கிப் பயிற்சிபெறுகிறார். அப்படியே அவர் வாழ்க்கை சென்று கொண்டிருக்க, சில வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட் அகாடமி நடத்திவரும் ஜ்வாலா சிங்க்கின் பார்வை இவர்மீது விழ, இவரை அரவணைத்துத் தங்க இடம் கொடுத்து பயிற்சி கொடுக்கிறார். அங்கிருந்துதான் ஜெய்ஸ்வாலின் சரித்திரம் தொடங்குகிறது.Yashasvi Jaiswal ஜெய்ஸ்வால் முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்தது 2015-ம் ஆண்டு. கில்ஸ் ஷீல்ட்டில் ஒரு போட்டியில் ஆட்டமிழக்காமல் 319 ரன்கள் குவித்து, பந்துவீச்சிலும் 13 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அதன்பிறகு இவர் கிரிக்கெட் வாழ்வில் ஏறுமுகம் தான், மும்பை U-16, ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே தொடர், துலீப் கோப்பை, இந்திய U-19 ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை என அடுத்தடுத்து விளையாடினார். இதில் U-19 உலகக்கோப்பை (2020) மற்றும் U-19 ஆசியக் கோப்பையில் (2018) இந்திய அணிக்காக அதிக ரன் அதிக ரன் எடுத்தவரும் இவரே. U-19 2020 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். விஜய் ஹசாரேவில் ஜார்க்கண்ட்க்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்து அனைவரது பார்வையையும் தன் மீது விழச் செய்தார். விஜய் ஹசாரே மற்றும் ரஞ்சி கோப்பையில் சீரான ஆட்டத்தின் மூலம் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார். தொடக்கத்தில் ஐம்பது, அறுபது, எழுபது என ரன்களைக் குவித்து வந்தவர், அதை நூறாக கன்வெர்ட் செய்ய முடியவில்லை.பிறகு வாசிம் ஜாபரின் பேட்டிங்கைக் காண்கிறார். அவர் தொடர்ந்து ரொட்டேட் செய்து அவசரப்படாமல் பொறுமையாக லூஸ் பால்களை மட்டும் பவுண்டரிக்கு அடித்து விளையாடுவது இவருக்குப் பிடிபடுகிறது. அந்தப் போட்டி முடிந்த பிறகு வாசிம் ஜாபரும் எந்த மாதிரி ஷாட்கள் விளையாடுவது, எந்த நேரத்தில் பௌலர்களை அடித்து விளையாடுவது என ஜெய்ஸ்வாலுக்கு அறிவுரை வழங்குகிறார். ஜெய்ஸ்வால் இதுவரை முதல்தர போட்டிகளில் 9 சதமும், List-A போட்டிகளில் 7 சதமும் குவித்துள்ளார். Yashasvi Jaiswal அவர் தொடர்ந்து நன்றாக விளையாடியதன் விளைவாக ஐ.பி.எல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். ஆனால் தொடக்கத்தில் அங்கு அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை, உள்ளூர் போட்டியில் விளையாடியது போதுமானதாக இல்லை. அதன் பிறகுத் தனது பிட்னெஸ் மற்றும் ஸ்கில்ஸில் கவனம் செலுத்தி மெல்ல மெருகேற்றிக் கொண்டார். அதன் விளைவாக 2023 ஐ.பி.எல்லில் 625 ரன்கள் குவித்தார், இதில் மும்பை அணிக்கு எதிரான சதமும், கொல்கத்தா அணிக்கு எதிராக 13 பந்துகளில் அடித்த அதிவேக அரைசதமும் அடங்கும். இதன்மூலம் ஒரு ஐ.பி.எல் சீசனில் அதிக ரன் குவித்த Uncapped வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.இவரது அதிவேக அரைசதத்தைப் பார்த்த கோலி ”என்னவொரு திறமையாளர் ஜெய்ஸ்வால், நான் சமீபத்தில் பார்த்த மிகச்சிறந்த பேட்டிங் இதுவே” எனப் புகழாரம் சூட்டியிருந்தார். இவரது இந்த இன்னிங்க்ஸ் சேவாக்கை நினைவுபடுத்துவதாக ரெய்னா குறிப்பிட்டிருந்தார். ஜெய்ஸ்வால் என்னதான் அதிரடியாக விளையாடினாலும் அவரது ஷாட்டில் நல்ல கட்டுப்பாடு இருக்கும். அவர் உயரமாக இருப்பதால் பிட்ச் ஆப் தி பால் (pitch of the ball) செல்வது எளிதாக இருக்கும். அவர் இடதுகை பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு தற்போது டாப் ஆர்டரில் ஆட நல்ல இடதுகை பேட்ஸ்மேன் இல்லை. அதுமட்டுமில்லாமல் இவர் அனைத்து பார்மேட்டும் நன்றாக விளையாடுவார் என்பது கூடுதல் சிறப்பு. இவர் தொடர்ந்து தன் தவறுகளைச் சரிசெய்வதிலும், தனது பேட்டிங்கை மெருகேற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசி இரண்டு முதல்தர உள்ளூர் தொடர்களில் 12 போட்டிகளில் 83.35 ஆவரேஜோடு 1667 ரன்கள் குவித்துள்ளதால் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார் ஜெய்ஸ்வால். எதிர்கால இந்திய டெஸ்ட் அணியில் தன் இடத்தை தக்கவைக்க இந்த வாய்ப்பு நல்வாய்ப்பாக அமைந்தது.Yashasvi Jaiswal இந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக தனது முதல் போட்டியில் களமிறங்கிய ஜெய்ஸ்வால், நன்றாக விளையாடி தனது முதல் சதத்தைப் பதிவு செய்து 350 பந்துகளுக்கு 143 ரன்கள் எடுத்திருக்கிறார். முதல் போட்டியிலே ஓவர்சீஸில் சதமடித்த முதல் இந்தியத் தொடக்க வீரர் மற்றும் முதல் போட்டியில் சதமடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். எளியவர்களுக்கு வாய்ப்பு என்னும் கதவு அவ்வளவு எளிதில் திறப்பதில்லை. தனது விடாமுயற்சி, கற்றல் மற்றும் தொடர்ச்சியான சிறந்த ஆட்டத்தால் அந்தக் கதவை அடித்து நொறுக்கியிருக்கிறார் ஜெய்ஸ்வால்.இதேபோல் வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி இந்திய அணியில் நீடித்த இடம் பிடிக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரது ஆசையாகவும் உள்ளது. அந்த ஆசையை ஜெய்ஸ்வால் நிச்சயம் நிறைவேற்றுவார்.
http://dlvr.it/SsDG2Y

Post a Comment

0 Comments