வெஸ்ட் இண்டீஸ் இந்த ஆண்டு உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் தோற்று வெளியேறியுள்ளது. வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமில்லாது அனைத்து அணி வீரர்களும் இந்த வீழ்ச்சிக்கு வருந்துகின்றனர். ஒரு காலத்தில் இந்த அணிக்கெதிராக ஒரு போட்டியை வெல்வது என்பதே பெரிய விசயமாக பார்க்கப்பட்டது. ஒரு சமயத்தில் இந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்களைப் பார்த்து எதிரணி பேட்ஸ்மேன்கள் பயந்தனர் என்றால், மற்றொரு சமயத்தில் அணியின் பதினொரு பேரும் பவர்ஹிட்டர்களாக இருப்பதைப் பார்த்து எதிரணி பந்துவீச்சாளர்கள் பயந்தனர். ஆனால், அப்படிப்பட்ட அணியின் இப்போதைய நிலை கவலைக்குரியதாக மாறியிருக்கிறது
இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் “நான் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியை நேசிக்கிறேன், அவர்கள் கிரிக்கெட் உலகில் நம்பர் 1 அணியாக வருவார்கள்” என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, கரீபியன் தீவுகளில் உள்ள பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்டு பிறகு விடுதலை பெற்ற 15 தீவுகளில் உள்ள வீரர்களின் தொகுப்பே ஆகும். அவர்கள் வெவ்வேறு நாடுகளின் கூட்டமைப்பு என்பதால் தொடக்கத்தில் வீரர்கள் ஒரு அணியாக சேர்ந்து விளையாடியதே பெரிதாக சோபிக்கவில்லை. பிறகு கிளைவ் லாய்டு தலைமையில்தான் வெஸ்ட் இண்டீஸ் ஒரு அணியாக ஒருங்கிணைந்து கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ஒருநாள் உலகக்கோப்பையை இருமுறையும் (1975,1979), இருபது ஓவர் உலகக்கோப்பையை இருமுறையும் (2012,2016), சாம்பியன்ஸ் கோப்பையை ஒருமுறையும் (2004) அந்த அணி கைப்பற்றியுள்ளது. தங்களை அடக்கி ஒடுக்கிய பிரிட்டிஷுக்கு நான் உன்னைவிட எந்தவிதத்திலும் தாழ்ந்தவன் இல்லை என வெஸ்ட் இண்டீஸ் தீவுகளின் மக்கள் முதலில் உணர்த்தியது கிரிக்கெட்டின் வழியே. மைக்கேல் ஹோல்டிங் இப்படி கூறியிருப்பார்மைக்கேல் ஹோல்டிங்“அவர்கள்(இங்கிலாந்து) கிரிக்கெட்டை எங்களுக்கு அறிமுகப்படுத்தினர்கள், நாங்கள் அதில் அவர்களைவிட சிறந்து விளங்குகிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்பினோம்.”
முன்னர் இங்கிலாந்துடன் இவர்கள் தோற்றால், இங்கிலாந்தில் வெள்ளை முதலாளிகளிடம் வேலை செய்யும் கருப்பின மக்கள் அடுத்தநாள் அசிங்கப்படுத்தப்படுவர். இதுபோல களத்திற்கு வெளியே நடப்பதையும் மனதில் வைத்தே இவர்கள் விளையாட வேண்டி வரும். இது குறித்து சி.எல்.ஆர். ஜேம்ஸ் “வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் ஒரு அரசியல் ஆயுதம், ஒரு கலைவடிவம் அல்லது அரசியல் ஊர்வலத்திற்கு முக்கியமான இடம் இந்த விளையாட்டிற்க்கும் உள்ளது.” சமீபத்தில் ப்ளாக் லிவ்ஸ் மேட்டர்ஸ் (Black lives matters) கிரிக்கெட் உலகிலும் எதிரொலிக்க வைத்ததற்கும், விவாதமானதற்க்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கும், முன்னாள் வீரரான மைக்கேல் ஹோல்டிங்கிற்க்கும் மிகப்பெரிய பங்குண்டு என்பதையும் நாம் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். கிளைவ் லாய்டு
1970க்கு முன்னர் வரை பெரிதாக ஜொலிக்காத வெஸ்ட் இண்டீஸ் அணி, அதன்பிறகு தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொண்டு அடுத்த இருபது வருடத்திற்கு கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தியது. கிளைவ் லாய்டு கேப்டனாக இருந்த பதினொரு ஆண்டுகள் (1974-1985) வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் பொற்காலம் எனலாம். இவரது தலைமையில் தான் வெஸ்ட் இண்டீஸ் இரண்டு ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர்களை வென்றது, தொடர்ச்சியாக 27 டெஸ்ட் போட்டிகளில் தோற்காமால் கிரிக்கெட் உலகை கட்டி ஆண்டது.1980-1990 வரை நடந்த 14 டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோற்கவே இல்லை. கிளைவ் லாய்டு தான் அத்தனை தீவு வீரர்களையும் ஒருங்கிணைத்து, கிரிக்கெட் உலகில் வெஸ்ட் இண்டீஸை பலம் பொருந்திய அணியாக மாற்றினார். விவியன் ரிச்சர்ட்ஸ், மெல்கம் மார்ஷல், ஆண்டி ராபர்ட்ஸ், கோலின் கிராப்ட் ,மைக்கேல் ஹோல்டிங் மற்றும் ஜோயல் கார்னர் ஆகியோர் இந்த காலகட்டத்தில் சிறப்பாக விளையாடினர். விவியன் ரிச்சர்ட்ஸ் என்றதும் ஹெல்மட் இல்லாமல் கூலாக பபுள்கம்மை மென்று கொண்டு பந்துகளை பறக்கவிடுவார் என 1983 படத்தில் காட்டப்படும், விராட் கோலி தொடங்கி அனைத்து கிரிக்கெட் வீரர்களும் அவரை பற்றி பேசுவதை கேட்டிருக்கலாம் அந்தளவு சிறந்த வீரரவர்.
அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களும் சிறந்து விளங்கினர். ஆண்டி ராபர்ட்ஸ், கோலின் கிராப்ட் ,மைக்கேல் ஹோல்டிங் மற்றும் ஜோயல் கார்னர் ஆகியோரை பார்த்து பேட்ஸ்மேன்கள் அஞ்சி நடுங்கினர், சாவை சட்டைப்பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான் என்பதைப் போல இவர்கள் வீசும் பாடி லைன் பவுன்சர்களை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் திணறினர். இந்த காலத்தில் தான் இவர்கள் பிட்னஸுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினர். Andy Roberts, Michael Holding, Colin Croft, Joel Garner
அதற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் ஆதிக்கம் மெல்ல மெல்ல சரிந்தது. ஒருநாள் போட்டிகளிலும் பெரிதளவு சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் 20 ஓவர் போட்டியை தனதாக்கி கொண்டனர். அங்கு உயரனமானவர்கள் அதிகம் உள்ளதால் இயல்பிலேயே நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் வந்தனர். அதேபோல அவர்கள் அணியில் பதினொரு பேருமே நல்ல ஹிட்டர்களாக, சிக்ஸ் ஹிட்டிங் திறனோடு நல்ல பேட்டிங் டெப்த் அவர்களிடம் இருந்தது. இதனை வைத்து அவர்கள் இரண்டு 20 ஓவர் உலகக்கோப்பைகளை வென்றனர். ஆனால், இவை மட்டுமே அவர்கள் இழந்த அந்த பழைய ஆதிக்கத்தை மீட்டெடுக்க போதுமானதாக இல்லை.வெஸ்ட் இண்டீஸ் அணி
பௌலர்களுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காதது, ஸ்டிரைக் ரொட்டேஷனில் பெரிதாக கவனம் செலுத்தாது வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களின் ஆவரேஜ் வருடவருடம் தொடர்ந்து சரிந்தவண்ணம் உள்ளது, மற்ற நாடுகளை போல் நல்ல உள்ளூர் தொடர்கள் இல்லாதது, கரீபியன் மக்களிடையே கால்பந்து மற்றும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிரிக்கெட்டில் ஆர்வம் குறைந்தது போன்ற பல காரணங்கள் வெஸ்ட் இண்டீஸின் வீழ்ச்சிக்கு காரணமாக சொல்லப்படுகிறது. சரியான மைதானங்களும் கிரிக்கெட் அகாடெமிகளும் இல்லாதது, முறையற்ற சம்பள முறை என வெஸ்ட இண்டீஸ் கிரிக்கெட் அசோசியேஷன் பக்கமும் எக்கச்சக்க கோளாறுகள் இருந்தது. கிளைவ் லாய்ட் காலம்தொட்டே இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது. அவர்கள் நல்ல சம்பளமில்லாமல் ஆஸ்திரேலியாவில் கேரி பெக்கர் நடத்திய உலக கிரிக்கெட் தொடர் விளையாட சென்றனர். இதனாலேயே நிறைய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சர்வதேச போட்டிகளை விட லீக் போட்டிகளுக்கு அதிகம் விளையாட செல்கின்றனர். வெஸ்ட் இண்டீஸின் பல முன்னணி வீரர்கள் இந்த பிரச்சனைகளை சுட்டிக்காட்டியும் அசோசியேசன் அதை சரிசெய்த பாடில்லை. எந்தவொரு பிரச்சினையை சரிசெய்வதற்கும் முக்கியமான விஷயம் பிரச்சினை இருப்பதை முதலில் ஒத்துக்கொண்டு, அதனை சரிசெய்வதை நோக்கி நமது நகர்வு இருப்பதே ஆகும்.West Indies
இந்தளவு வீழ்ச்சிக்கு பிறகு இந்த அடிப்படை பிரச்சனைகளை சரிசெய்வதில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்த பிறகு அடுத்து அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு மீண்டெழுவது மட்டுமே. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி விரைவில் மீண்டெழும் என நம்புவோம்.
- அறிவுச் செல்வன்
http://dlvr.it/SrfQZk
0 Comments
Thanks for reading