Ganguly: 'பொண்ணு வந்துருக்கா... அதனால இந்த பர்த்டே வீட்லதான்' - கங்குலி ஷேரிங்ஸ்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இன்று பிறந்தநாள். இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு சவுரவ் கங்குலி பேட்டியளித்திருக்கிறார். அதில் அவர் பேசியிருக்கும் சில முக்கியமான விஷயங்கள் இங்கே.. தனது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்து பேசியிருக்கும் கங்குலி, 'கடந்த மூன்று மாதங்களாக நிறைய பயணம் மேற்கொண்டுவிட்டேன். அதனால், இந்த பிறந்தநாளை வீட்டில்தான் கொண்டாடப் போகிறேன். என்னுடைய மகள் சனா விடுமுறையில் வந்திருக்கிறாள். ஆகஸ்ட் வரை வீட்டில்தான் இருப்பார். அதனால் முழுக்க முழுக்க வீட்டிலேயேதான் இருக்கப்போகிறேன்.' என்றார். சமீபத்தில் சர்ச்சையான பேர்ஸ்ட்டோவின் ரன் அவுட் குறித்து, 'அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது. க்ரீஸை விட்டு வெளியே வந்ததால்தான் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. விதிமுறைகளின்படி அது சரிதான். ஆனால், பேர்ஸ்ட்டோ ரன் எடுக்கும் எண்ணத்தோடு க்ரீஸை விட்டு வெளியே வந்ததாக தெரியவில்லை. அதனால் ஆஸ்திரேலியா அந்த ரன் அவுட்டை தவிர்த்திருக்கலாம்.' என்றார் கங்குலி. இந்திய அணியின் தேர்வு குறித்தும் இளம் வீரர்கள் குறித்தும் பேசியிருக்கும் கங்குலி, 'யாராக இருந்தாலும் சரி இருப்பதிலேயே சிறந்த வீரர்களைத்தான் அணிக்கு எடுக்க வேண்டும். கோலியும் ரோஹித்தும் டி20 அணியில் இருக்கக்கூடாது என சொல்வதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.கோலிகோலி ஐ.பி.எல் இல் சிறப்பாகவே ஆடியிருக்கிறார். கோலிக்கும் ரோஹித்துக்கும் இன்னுமே டி20 போட்டிகளில் இடமிருக்கிறது என்பதுதான் என்னுடைய கருத்து. அணியில் 15 பேரைதான் எடுக்க முடியும். ப்ளேயிங் லெவனில் 11 பேரைதான் எடுக்க முடியும். அதனால் சில வீரர்கள் விடுபடத்தான் செய்வார்கள். ரிங்கு சிங், ருத்துராஜ் போன்ற வீரர்கள் கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிக்கொண்டே இருக்க வேண்டும். அவர்களுக்கான நேரம் உறுதியாக வரும்.' எனக் கூறியிருக்கிறார். 'உலகக்கோப்பையில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்பதை கணிப்பது கொஞ்சம் கடினம்தான். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இந்த மூன்று அணிகளுக்கும் நல்ல வாய்ப்பிருக்கிறது. நியூசிலாந்தை இதுபோன்ற பெரிய தொடர்களில் குறைத்து மதிப்பிடவே முடியாது. பாகிஸ்தானும் அரையிறுதிக்கு வர வாய்ப்பிருக்கிறது.WorldCupபாகிஸ்தான் அரையிறுதிக்கு வரும் பட்சத்தில் எங்களுடைய ஈடன்கார்டனில் வைத்து இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தால் சிறப்பாக இருக்கும்.' என தனது கணிப்பையும் கங்குலி வெளிப்படுத்தியிருக்கிறார்.
http://dlvr.it/SrvM6J

Post a Comment

0 Comments