இந்திய கிரிக்கெட்டின் ஒப்பற்ற வீரர். பல வெற்றிக்கோப்பைகளை இந்தியாவுக்காக வென்றுகொடுத்த கேப்டன் தோனிக்கு இன்று 42 வது பிறந்தநாள்.
கிரிக்கெட் சார்ந்து தோனி குறித்த தகவல்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு அத்துப்படியான விஷயம். ஆனால், அதை கடந்தும் தோனி குறித்த பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. தோனியே பகிர்ந்துகொண்ட அந்த தகவல்கள் இதோ!
`டீ’ லவ்வர் தோனி!
ஒரு நேர்காணலில் 'உங்களுக்கு ரொம்பவே பிடித்தமான, எங்கு சென்றாலும் உங்களால் தவிர்க்கவே முடியாத விஷயம் என்ன?' என்ற கேள்வி தோனியிடம் கேட்கப்படும். அதற்கு ஒரே வார்த்தையில் 'டீ' என தோனி பதிலளிப்பார். குலோப் ஜாமூன், ஜிலேபி என எதாவது ஸ்வீட்டைக் கொடுத்தால்கூட என்னால் எளிதில் வேண்டாம் என சொல்லிவிட முடியும். ஆனால், யாராவது டீ குடிக்கிறீர்களா எனக் கேட்டால் என்னால் தவிர்க்கவே முடியாது.Dhoni
ப்ராக்டீஸூக்கு முன்பாக, ப்ராக்டீஸ் முடிந்த பிறகு, ஜிம்மில் என எங்கு டீ கொடுத்தாலும் குடித்துவிடுவேன். அதிகமாக சர்க்கரை சேர்த்து குடிப்பது கொஞ்சம் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தும். ஆனாலும், டீ யைத் தவிர்க்கவே முடியவில்லை என பேசியிருப்பார். சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபடும் போதுமே தோனி விரும்பி டீ குடிக்கும் வீடியோக்கள் அதிகமாக இணையதளத்தில் ஷேர் ஆகியிருக்கிறது.
தோனியும் ஆன்மீகமும்!
தோனி தனது கையில் பகவத்கீதையை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்த ஒரு போட்டோ சமீபத்தில் இணையதளங்களில் வைரலானது. தோனி, நிஜமாகவே ஒரு ஆன்மீகவாதிதான். உலகக்கோப்பையை வென்றால் திருப்பதிக்கு முடி காணிக்கை கொடுப்பதாக தோனி வேண்டியிருந்தார்.Dhoniவேண்டுதலை நிறைவேற்றும் வகையில், ஏப்ரல் 2, 2011 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற சமயத்தில் சில மணி நேரத்திலேயே தனது முடியை திருப்பதிக்குக் காணிக்கையாகக் கொடுத்திருந்தார். ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகாலை 2:45 மணிக்கு மொட்டையடித்துக் கொண்ட தோனியின் முடி மட்டும் தனியாக திருப்பதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு தோனியின் வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது.Dhoni
மேலும், ராஞ்சியின் தியோரில் உள்ள ஒரு துர்கா கோயிலுமே தோனியின் மனதுக்கு நெருக்கமான கோயில்தான். ஒவ்வொரு பெரிய தொடரை ஆடுவதற்கு முன்பும் தோனி இந்த துர்கா கோயிலுக்கு சென்று பூஜைகளை செய்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
தோனியும் கோலிவுட்டும்!
தோனிக்கும் சென்னைக்குமான பந்தத்தை விளக்க வேண்டிய தேவை இல்லை. அதேமாதிரிதான் தோனிக்கும் கோலிவுட்டுக்குமான பந்தமும் கூட. எல்லோரையும் போல தோனிக்குமே நடிகர் ரஜினிகாந்த்தின் மீது பெரிய ஈர்ப்பு உண்டு. ரஜினிகாந்த் கபாலி படத்தில் கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்திருக்கும் போஸை ஒரு நிகழ்ச்சியில் தோனி அப்படியே ரீ கிரியேட் செய்திருப்பார். மேலும், Dhoniரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்திந்து தனது பயோபிக் படத்திற்காக வாழ்த்தும் பெற்றிருந்தார்.
ரஜினிக்கு அடுத்து தோனியின் ஃபேவ்ரட் சூர்யாதான். சூர்யா நடித்த சிங்கம் படம் தனக்கு ரொம்பவே பிடிக்கும் என தோனி பல மேடைகளில் பேசியிருக்கிறார். சென்னையில் நடந்த 'MS Dhoni' படத்தின் நிகழ்ச்சியில் தோனியுடன் சூர்யாவின் குழந்தைகளான தேவும் தியாவும் பங்கேற்றிருந்தனர். அவர்களிடமே தன்னுடைய ஃபேவ்ரட் ஆக்டர் சூர்யாதான் என தோனி கூறியிருந்தார்.Dhoni
இவர்களுக்கு அடுத்தப்படியாக விஜய்யுடனுமே தோனிக்கு நல்ல நட்பு உண்டு. 2008 இல் சிஎஸ்கே அறிமுகமான போது அதன் விளம்பர தூதராக இருந்தவர் விஜய்தான். அப்போதிருந்தே இருவருக்கும் பரிச்சயம் உண்டு. சமீபத்தில் பீஸ்ட் படப்பிடிப்பு நடந்த ஸ்டூடியோவிலேயே தோனியின் விளம்பரப் படத்திற்கான படப்பிடிப்பும் நடக்க இருவரும் கேரவனில் சந்தித்து உரையாடிக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் செம வைரல். இதையெல்லாம் தொடர்ந்துதான் புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 'LGM' என ஹரீஷ் கல்யாண் நடிப்பில் முதல் படத்தையே கோலிவுட்டில் எடுத்து முடித்திருக்கிறார் தோனி.
ட்ரெண்ட்டி ஹேர் ஸ்டைல்!
தோனி ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்ததற்கு அவரின் ஆட்டத்தை தாண்டி அவரின் ஹேர் ஸ்டைலுக்கும் முக்கிய பங்குண்டு. கிரிக்கெட்டில் அறிமுகமானது தொடங்கி 2007-08 வரைக்குமே நீண்ட தலை முடியோடு காட்சியளித்தார். தோனியின் இந்த ஹேர் ஸ்டைல் பலருக்குமே பிடித்தமானதாக இருந்தது. Dhoniபாகிஸ்தானின் முன்னாள் அதிபரான பர்வேஸ் முஷரஃபே, 'தோனி...நீங்கள் என்னுடைய அறிவுரையை ஏற்றுக்கொள்வீர்கள் எனில் சொல்கிறேன், நீங்கள் தயவு செய்து ஹேர்கட் செய்துவிடாதீர்கள்.' என பேசியிருப்பார்.Dhoni
2013 ஐ.பி.எல் இன் போது தலையின் இரு பக்கமும் முழுமையாக ஷேவ் செய்து நடுவில் மட்டும் முடியை வைத்து 'மொஹாக்' என்ற புதிய ஹேர்ஸ்டைலோடு வந்தார் தோனி. 2020 சீசனில் முடியை ரொம்பவே கட்டையாக சம்மர் கட் போல வெட்டிக் கொண்டு காட்சியளித்தார். அதுவுமே தோனிக்கு ஸ்டைலாகத்தான் இருந்தது. இப்படி அடிக்கடி தனக்கு பிடித்த மாதிரி புது ஹேர்ஸ்டைலை வைத்து அதை ஒரு ட்ரெண்டாக மாற்றிவிடுவார் தோனி.தோனி
ரைடர் தோனி!
புதிது புதிதாக பைக்குகளை வாங்கி அதை ஒரு கலெக்சனாக மாற்றுவதில் தோனிக்கு கொள்ளைப் ப்ரியம் உண்டு. ராஞ்சியில் இருக்கும் அவரது வீட்டில் இப்படியாக நூற்றுக்கணக்கான பைக்குகளை தோனி நிறுத்தி வைத்திருக்கிறார். நேரம் கிடைக்கும்போது தனக்குப் பிடித்தமான பைக்கை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றுவதுதான் தோனிக்கான டைம்பாஸ். ஐ.பி.எல் ஆட வரும்போது சென்னையின் தெருக்களில் கூட இரவு நேரங்களில் தோனி பைக்கில் சுற்றித் திரிந்திருக்கிறாராம்.
தொட்டாலே ஹிட்டு!
சமீபத்தில் விமான பயணத்தின் போது தோனி கேண்டி க்ரஷ் கேம் ஆடுவதைப் போல ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலானது. அடுத்த 3 மணி நேரத்தில் கேண்டி க்ரஷ் கேமை 30 லட்சம் பேர் டவுண்லோடு செய்திருந்தனர். தோனி தொட்டாலே ஹிட் என்பதற்கு இதுதான் சாட்சி.Dhoni
இப்படித்தான் 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி வின்னிங் ஷாட்டாக சிக்சர் அடித்த பேட் ஏலத்தில் விடப்பட்டது. அந்த பேட் 83 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. உலகிலேயே அதிக தொகைக்கு விற்கப்பட்ட பேட் அதுதான்.
R.K Global Shares எனும் நிறுவனம் அந்த பேட்டை வாங்கியது. இதன் மூலம் கிடைத்த பணத்தை தனது மனைவியின் அறக்கட்டளை சார்ந்த பணிகளுக்கு வழங்கினார் தோனி.
பெட் லவ்வர்!
தோனிக்கு நாய்கள் வளர்ப்பதிலும் ஆர்வம் உண்டு. ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் வளர்க்கும் சாரா & ஷாம் என்ற நாய்களோடு அவரும் ஷிவாவும் ஜாலியாக விளையாடும் வீடியோ பல முறை இணையத்தில் வைரலாகியிருக்கிறது.Dhoni'என்னுடைய வீட்டில் சில நாய்களை வளர்க்கிறேன். நான் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும் எவ்வளவு தோல்வியை சந்தித்தாலும் நான் வீட்டிற்கு செல்லும் போது அவை என் மீது ஒரே மாதிரியான அன்பைத்தான் வெளிக்காட்டுகின்றன'
என தன்னுடைய செல்லப்பிராணிகள் குறித்து நெகிழ்ச்சியாகவும் தோனி பேசியிருக்கிறார்
http://dlvr.it/SrsMGb
0 Comments
Thanks for reading