Ashes 2023: `இங்கிலாந்தின் பலமே பலவீனமான கதை!' ஆஸ்திரேலியா 2-0 முன்னிலை பெற்றது எப்படி?

தற்காப்பு கலையில் உணர்ந்துகொள்ள வேண்டிய முதல் நுணுக்கமே, எப்போது தாக்க வேண்டும், எப்போது தடுக்க வேண்டும் என்பதுதான். டெஸ்ட் களத்தின் அடித்தளமும் அதுவே. இந்த சித்தாந்தத்தை மனதில் ஏற்றிக் கொள்ளாததால் ஆஷஸ் தொடரில் மீண்டும் ஒரு தோல்வியின் பலிபீடத்தில் தனது தலையை வைத்துள்ளது இங்கிலாந்து. கையில் எடுக்கும் ஆயுதமே ஒருவர் பயணிக்கும் பாதையையும் இறுதி செய்யும். கடந்த ஆஷஸ் தொடர் தோல்விக்குப்பின் தன்னை மீட்டெடுக்கும் ஆயுதமாக டெஸ்ட் களத்தில் BazBall என்று தனக்கான புதிய தந்திரோபாயத்தை வடிவமைத்தது இங்கிலாந்து. அத்தத்துவத்தின் பின்விளைவுகளின் பின்னல்கள்தான் தற்சமயம் அவர்களை அலைக்கழிக்கிறது. 2/0 என டெஸ்ட் தொடரில் பின்னடைவை சந்தித்திருப்பது அதுவும் சொந்த மண்ணிலேயே நேர்ந்திருப்பது சற்றே நெருடலுடன் கூடிய வலியே! Baz Ball டெம்ப்ளேட் மொத்தமும் தவறெனக் கொள்ள முடியாதென்றாலும் அதில் துணிந்து எடுக்கப்படும் சில ரிஸ்குகளே சமயத்தில் சரிவிற்கான சாரம் அமைக்கின்றன.Stokes பொதுவாகவே விசிட்டிங் பேட்ஸ்மேன்களுக்கு இங்கிலாந்துக் களங்கள் போட்டியின் தொடக்க ஓவர்களில் மட்டுமல்ல தொடர் முழுவதுமே சவால் விடும். புதுப்பந்து தனது கூர்மையை இருபுறமும் ஸ்விங் ஆகி சரிபார்க்கும். அவ்வப்போது குறுக்கிடும் மழையும் கவனத்தைக் குலைக்கும். இவை எல்லாமே பௌலர்களுக்கு வலுசேர்க்கும். இதனை தங்களுக்கு சாதகமாக்கியே இங்கிலாந்து பலசமயம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஆனால் இப்போட்டியிலோ இங்கிலாந்தின் முதல்நாள் பௌலிங்கோ கொஞ்சமும் அச்சுறுத்தல்களின்றி அமைதி ஒப்பந்தமிட்டது. பச்சைக்கம்பளம் அவர்களை பௌலிங்கைத் தேர்ந்தெடுக்க வைத்திருந்தாலும் அந்தத் தேர்வுக்கு நியாயம் கற்பிப்பதாக பௌலர்கள் மிளிரவில்லை. முதல் நாளில் 15 ஓவர்களை மூன்று ஸ்பெல்களாக துல்லியமாக ஆண்டர்சன் வீசினார்தான் இருப்பினும் விக்கெட்டிற்கான வழிமுறையை பந்துகள் கண்டறியவில்லை. அப்படியான வாய்ப்புகளைத் தாங்கிய பந்துகளும்கூட கேட்ச் டிராப்களால் வழிதவறின. ரூட் கவாஜாவின் கேட்சினையும், போப் வார்னரின் கேட்சினையும் தவறவிட்டு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 73 ரன்களிலால் கட்டமைக்கப்பட அனுமதித்தனர். இதன் நீட்சியாகவே முதல் நாள் மொத்தமும் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியது. 500-ஐ முதல் இன்னிங்க்ஸில் எட்டலாம் என்ற பயங்காட்ட டெஸ்ட் களத்திற்கே உரிய ஆச்சரியக்கூறாக இரண்டாவது நாளின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து மீண்டெழுந்தது. 316/4 என ஆஸ்திரேலியா வலுவாக வலம்வர இங்கிலாந்தோ இறுதி ஏழு விக்கெட்டுகளை அடுத்த 100 ரன்களை எட்டுவதற்குள் வீழ்த்தி ஆர்ப்பரித்தது. ஷார்ட் பால்கள் விஷம் தோய்த்த அம்பாய் முன்னேற அதற்கேற்ப களத்தடுப்புகள் கைகொடுக்க, எல்லா ஃபாஸ்ட் பௌலர்களும் ஒரு விக்கெட்டையேனும் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 416-க்கு ஆல்அவுட் செய்தனர். இதுவரையில் எல்லாம் சரிதான். ஆனால் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில்தான் இங்கிலாந்து தவறிழைத்தது. தலை போகிற அவசரம் போலவும், டி20 ஃபார்மட்டின் கரும்நிழலால் காட்சி மங்கியது போலவும் ஆடினர்.பேட்டிங்கிற்கு ஏற்ற சூழல் நிலவியதால் Baz Ball உயிர்ப்பிக்கப்பட அதிவேகமாக ரன்சேர்க்க முயலுவார்கள் அதன் விளைவாக விக்கெட்டுகளை விடுவார்கள் என ஆஸ்திரேலியா அனுமானிக்க அதை அப்படியே உண்மையாக்கி தலைகீழாகவே குதித்தனர்.Australia கிராஸ் பேட்டில் ஆடுவார்கள் எனக் கணித்து அதற்கேற்ப ஃபீல்ட் செட்டப் செய்ய வேண்டி விரும்பி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனை நிகழ்த்த ஆஸ்திரேலியா பிரயத்தனப்பட வேண்டிய அவசியமே இருக்கவில்லை. ஸ்மித்தின் இன்னிங்க்ஸுக்கு பதிலடியாக டக்கெட்டின் ஆட்டம் மட்டுமே இருந்தது. மற்றவர்களோ தார்ரோட்டில் வெறுங்காலில் நடக்க விட்டதைப்போல் வெளியேறும் அவசரத்தோடே ஆடினர். அதிரடி ரன்குவிப்பை சற்றே ஒத்திப்போட்டு ஆஸ்திரேலியா எடுத்த ரன்களை கடக்கும்வரை பொறுப்போடு பொறுமை காத்திருந்தால் 91 ரன்கள் என்ற லீடினைப் பெற்றிருப்பது ஆஸ்திரேலியாவுக்குக் கடினமானதாக இருந்திருக்கும். தங்களது ஈகோவிற்கு தீனி போட்டுக்கொள்ள முனைந்து கேடயத்தை ஏந்த மறந்த இங்கிலாந்து பெரும் போரினை எதிர்பார்த்து வந்த ஆஸ்திரேலியப்படைக்கு எல்லாவற்றையும் சுலபமாக்கியது. ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை இதற்கு நேர்மாறாக இருந்தது. மரபுசார் டெஸ்ட் வடிவத்தின் மதில் சுவரில் பதற்றமின்றிப் பயணித்தது. முதல் நாள் பேட்டிங்கோ டெஸ்ட் டெம்ப்ளேட்டின் எல்லா எல்லைகளுக்கும் உட்பட்டிருந்தது. நல்ல பந்துகளுக்கு வழிவிட்டு மோசமான பந்துகளைத் தண்டித்தனர். பந்துகள் எட்ஜ் வாங்கக்கூட பேட்ஸ்மேன்கள் பெரிதாக அனுமதிக்கவில்லை. இங்கிலாந்து தவறவிட்டதும் அதன்மேல் ஆஸ்திரேலியா தனது கோட்டைச் சுவரினை எழுப்பியதும் இப்புள்ளியில்தான். இங்கிலாந்தும் லபுசேன் மற்றும் ஸ்மித்துக்கு ரன் எடுப்பதை சுலபமாக்குவது போன்றே பந்துகளை வீசியது. அதனை சரியாகவே இருவரும் பயன்படுத்தி இருந்தனர். Smith முதல் இன்னிங்ஸ் பௌலிங்கிலும் ஆஸ்திரேலியாவிடம் தெளிவான திட்டமிடல் இருந்தது. 188/2 என இருந்த இங்கிலாந்தை ஷார்ட் பால்கள் வியூகம் 325 ரன்களுக்கு சுருட்டியது. இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே கணக்கிட்டால் ஆஸ்திரேலியாவைவிட இங்கிலாந்து 48 ரன்கள் கூடுதலாகவே எடுத்திருந்தது. இருப்பினும் முதல் இன்னிங்ஸில் விழுந்த 91 ரன்கள் பள்ளத்தைத்தான் இங்கிலாந்தால் நிரப்பவே முடியவில்லை. அவர்கள் தள்ளாடியதும் அங்கேதான். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் பவுன்சர் பிளான் மிகப்பெரிய அளவில் கை கொடுக்க ஆஸ்திரேலியா ரன் எடுக்கக்கூடிய வாயில்களை எல்லாம் இங்கிலாந்து மூடி அடைக்க ஆஸ்திரேலியாவால் மிகப்பெரிய ஸ்கோரினை எட்ட முடியாமல் போனது. Baz Ball உத்திக்குப் பெயர் பெற்ற இங்கிலாந்து Bodyline பௌலிங் மோடுக்கு மாறி இரண்டாவது இன்னிங்ஸினில் கோலோச்சியது. அச்சமயத்தில் மட்டுமல்ல இப்போட்டி முழுவதுமே வேகப்பந்து வீச்சாளர்கள் இதனைப் பின்பற்றியிருந்தனர். 2006-க்கு பின்பாக நடைபெற்றுள்ள டெஸ்ட்களில் அதிகப் பந்துகள் Body Line-ல் வீசப்பட்டிருப்பது (62 பந்துகள்) இதுவே முதல்முறை. இதே உத்வேகத்தை களம் இன்னமும் சாதகமாக இருந்த முதல் நாளிலேயே இங்கிலாந்து காட்டியிருந்தால் ஆஸ்திரேலியாவால் 400 ரன்களை எட்டியிருக்க முடியாது, காற்று இங்கிலாந்தின் பக்கமும் திரும்பியிருக்கலாம். பௌலிங்கில் மட்டுமல்ல ஃபீல்டிங்கிலும் தவறுகள் திருத்தப்பட்டிருந்தன. ஹெட்டினை வெளியேற்றிய ரூட்டின் கேட்சும், ஸ்மித்தை வெளியேற்றிய க்ராவ்லியின் கேட்சும் போட்டிக்குள் திரும்பவும் இங்கிலாந்தை வரவைக்க உதவின. காயத்தைப் பொருட்படுத்தாமல் தனது 100-வது டெஸ்டில் பேட்டிங் செய்ய இறங்கிய லயானின் மன உறுதி மீது மரியாதை படிந்தது. இரண்டாவது இன்னிங்ஸ் பௌலிங்கில் அவர் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு பெரிய பின்னடைவுதான். இருப்பினும் தன்னால் முடிந்ததை பேட்டிங்கில் அவர் செய்தது ரசிகர்களை சற்றே நெகிழ வைத்தது. பின்வரிசை வீரர்களை இங்கிலாந்து சிறப்பாக வழியனுப்பியது. ஆஸ்திரேலியாவின் இறுதி ஐந்து விக்கெட்டுகளை 40 ரன்களை எட்டுவதற்குள் எடுத்திருந்தனர். 400 ரன்களையும் தாண்டும் என நினைத்த இலக்கை 371 என முடிக்க வைத்ததற்கும் இங்கிலாந்தின் ஷார்ட் பால் வியூகமே வழியமைத்தது. கம்பேக்குகள் இருபுறமும் பல அடுக்குகளாக இப்போட்டி முழுவதையும் நிரப்பியிருந்தது. Bairstow இதே இலக்கு மற்ற அணிகளுக்கு நிர்ணயக்கப்பட்டிருந்தால் தோல்வியை எதிர்பார்த்தோ டிராவினை விழிநோக்கியோ ஆடவே வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்த இடத்திலேதான் இங்கிலாந்து வேறுபட்டிருக்கிறது. Baz Ball ஏற்படுத்தப்பட்டுள்ள தாக்கம் அத்தகையது. ஆஸ்திரேலியாவின் பக்கம்தான் வெற்றி விழுக்காடு அதிகம் என்றாலும் இங்கிலாந்து வீழ்ந்து விடும் என யாராலும் ஸ்டோக்ஸின் விக்கெட் விழும் வரை உறுதியாக சொல்ல முடியவில்லை. `அண்டர் 10' அளவில் மட்டுமே நேர வாய்ப்புள்ள தவறால் பேர்ஸ்டோ தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் இருந்திருந்தால் இங்கிலாந்து இறுதியில் ஆட்டம்காட்டியிருக்கும். குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் எப்போதும் போல அசாத்தியத்தின் முதுகிலேயே சாத்தியத்தை பயணிக்க வைக்க போராடிக் கொண்டிருந்தார். டக்கெட்டுடனான அவரது நிதானமான பார்ட்னர்ஷிப் ஆகட்டும், பேர்ஸ்டோவுடன் இணைந்து கரைசேர்க்க முயன்றதாகட்டும், பேர்ஸ்டோ ஆட்டமிழந்ததும் சீண்டப்பட்ட சிங்கமாக சீறி எழுந்து எல்லாப் பந்துகளையும் நையப் புடைத்த விதமாகட்டும் வழக்கம் போல தனக்குள் உள்ள போர்வீரனை மீண்டுமொரு முறை ஸ்டோக்ஸ் காட்சிப்படுத்தினார்.Stokes க்ரீன் ஓவரில் வந்த அந்த ஹாட்ரிக் சிக்ஸர்கள் அதன் உச்சகட்டம். பிராடுடனான பார்ட்னர்ஷிப்பில் விக்கெட்டை விழுந்துவிடக்கூடாதென்ற கவனத்தில் அவர் சிங்கிள் ஓடுவதைத் தடுத்திருப்பினும் அதுவே கூடுதல் அழுத்தத்தை ஏற்றுவதாகியது. அதேபோல் ஆஃப் சைட் பந்துகளில் ரன்களைத் தேற்றாமல் லெக்சைடில் மட்டுமே பெரும்பாலான ரன்களைச் சேர்த்திருந்தார். ஆஸ்திரேலியாவோ சாமர்த்தியமாக லெக்சைடில் அடிக்க வாய்ப்பின்றி அவருக்கான வலையை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தொடர்ந்து வீசி பின்னி அவரை வீழ்த்தியது. இப்படி திட்டங்களை இடம், காலத்திற்கேற்றாற் போல் மாற்றும் பாங்குதான் சாம்பியனாக ஆஸ்திரேலியாவை அடையாளப்படுத்துகிறது. இவையெல்லாம் இருப்பினும் முதல் இன்னிங்சில் விழுந்த பள்ளம், புதைமணலின் மேல் கட்டமைக்கப்பட்ட கட்டிடம் போல இங்கிலாந்தை உள்வாங்கி விட்டது. விஷத்தின் மூலமாக எதிர்ப்பு சக்தியைக் கொண்டு வர முயல்வது போன்ற ஆபத்தான தீயுடனான விளையாட்டில்தான் இங்கிலாந்து BazBall மூலமாக ஈடுபட்டுள்ளது. அது சுட்டெரிக்கிறதா அல்லது அவர்களை வார்த்தெடுக்கிறதா, அதில் நிபுணத்துவம் பெறுவதற்கு முன்பான சின்ன சின்ன சரிவுகள்தான் இவையா என்பதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். எனினும் டெஸ்டின் இலக்கணத்திற்குள் நின்று ஆடியது ஆஸ்திரேலியாவினை வெற்றியாளராக்கியுள்ளது. இதுவரை ஆஷஸில் 2/0 என்ற நிலையிலிருந்து மீண்டு வந்து கோப்பையைக் கைப்பற்றியது 1936/37-ல் பிராட்மேனோடு பயணித்த அணி மட்டுமே. அதே சரித்திரத்தை Bazz Ball-ன் துணையோடு மறுபடியும் எழுத இங்கிலாந்து முயலுமா என்பது அடுத்த போட்டியில் தெரியவரும்.
http://dlvr.it/SrbRPL

Post a Comment

0 Comments