சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஆண்களுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.
இதுவரை இந்தியாவில் 1987, 1996, மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் நடைபெற்று இருக்கிறது. அதில், 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.
அது சச்சினின் கடைசி உலகக்கோப்பை போட்டி என்பதால் மும்பை வான்கடே மைதானமே 'சச்சின் சச்சின்..' எனக் கோஷமிட்டபடி அதிர்ந்தது. சச்சினுக்காக உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள், குறிப்பாக விராட் கோலி சச்சினைத் தோளில் சுமந்து மைதானத்தையே வலம் வந்தார்.விராட், சச்சின்
அப்போது பலரும் விராட் கோலி, சச்சினைத் தோளில் சுமந்து வலம் வந்தது குறித்து 'சச்சினுக்குப் பிறகு அவரது இடத்தை நிரப்புவது கோலிதான்' என்று கிரிக்கெட் ரசிகர்கள் புகழ்ந்திருந்தனர். அதற்கேற்றவாறு விராட்டும் குறுகியக் காலத்தில் பல சாதனைகள் புரிந்தார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மகுடமாக அமைந்த இந்நிகழ்வு குறித்துப் பேசியுள்ள முன்னால் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், விராட் கோலி சச்சினைத் தோளில் தூக்கிச் சுமந்ததற்கானக் காரணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுபற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர், "சச்சினுக்காகத்தான் 2011 உலகக்கோப்பையை வென்றோம். அப்போது சச்சினைக் கொண்டாட வேண்டும் என்று அவரைத் தோளில் சுமந்து மைதானத்தை வலம் வர நினைத்தோம். அதற்குச் சரியான நபர் யாரென்று ஆலோசித்தோம். சச்சினைத் தோளில் சுமந்து வலம் வர என்னைப்போன்ற வயதானவர்களால் முடியாது. தோனிக்கும் அப்போது முட்டியில் காயம் ஏற்பட்டிருந்தது.
அதனால், இளம் கிரிக்கெட் வீரர்கள் யாராவது அவரைத் தோளில் சுமந்து வலம் வந்தால் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்தோம். அந்த சமயத்தில் விராட் அதனைச் செய்தார். விராட், சச்சினைத் தோளில் சுமந்ததற்கு வேறெந்தக் காரணமும் இல்லை" என்று கூறினார்.விராட், வீரேந்தர் சேவாக்
இதுமட்டுமின்றி அண்மையில் விராட் கோலி குறித்துப் பேசிய சேவாக், "இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2011 ஆண்டு கடைசி உலகக்கோப்பைத் தொடரில் விளையாடியபோது அந்த உலகக்கோப்பையை இந்திய வீரர்கள் அனைவரும் சச்சினிற்காக வெல்ல வேண்டும் என்று நினைத்தோம். தற்போது சச்சினின் இடத்தில்தான் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இருக்கிறார். விராட் கோலிக்காக இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டும்" என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/SrLnD5
0 Comments
Thanks for reading