ICC World Cup: `இடது கை பேட்டர்கள் எங்கே?'- உலகக்கோப்பையில் இந்திய அணி எப்படிச் சாதிக்கப் போகிறது?

கம்பீர், யுவராஜ், ரெய்னா என வரிசைகட்டி இடக்கை வீரர்கள் கோலோச்சிய 2011 உலகக்கோப்பை எங்கே, அப்படி ஒரு வீரருக்காக ஏங்கித் தவிக்கும் தற்போதைய இந்திய அணியின் பரிதாபகரமான நிலைதான் எங்கே? 50 ஓவர் உலகக்கோப்பை இன்னமும் 100 நாள்களில் தொடங்கவிருக்கிறது. இந்தியாவில் நடக்கவிருக்கும் போட்டி ஆகையால் கடந்தமுறை போலவே இம்முறையும் இந்தியா வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே உள்ளன. இருப்பினும் அந்த இலக்கை நோக்கித்தான் இந்தியாவின் கடந்த மூன்றாண்டுக்காலப் பாதையும் பயணமும், அமைத்த அடித்தளமும் இருந்ததா என்றால், இல்லை என்பதுதான் உண்மை நிலவரம். இவ்வளவு ஏன், 2019-க்குப் பின்பு 50 ஓவர் போட்டிகளே அதிக அளவில் நடைபெறவில்லை. Team India கோவிட், அதற்குப் பிறகு இரு ஆண்டுகள் தொடர்ந்து டி20 உலகக்கோப்பைக்கு ஆயத்தமாகும் வகையில் அதிகமான டி20 போட்டிகள் நடத்தப்பட்டன எனப் பல காரணங்களாலும் 50 ஓவர் போட்டிகளின் வடிவமே பல பேருக்கு மறந்துபோனது. புதுமையைப் புகுத்தி இதன் ஆயுட்காலத்தை நீட்டுகிறோம் என்ற பெயரில் பல கருத்துகளும் முன்மொழியப்பட்டன. 40 ஓவர்களாகக் குறைக்கலாம் அல்லது 2 இன்னிங்ஸ்களாக 25 ஓவர்கள் போட்டிகளாக நடத்தலாம் எனப் பல யோசனைகளும் எழுப்பப்பட்டன. இவையெல்லாம் சேர்ந்து 50 ஓவர்கள் ஃபார்மேட்டே அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது போன்ற காட்சிப் பிழையை உண்டாக்கி, இதுவே கடைசி 50 ஓவர்கள் உலகக்கோப்பையாக இருக்குமோ என்ற பிம்பத்தையும் எழ வைத்துள்ளது. கடந்த முறை இந்திய அணி உலகக்கோப்பையை வென்றபோது அணியின் ரோடு மேப் தெள்ளத் தெளிவாக இருந்தது, அதற்கு ஏற்றாற்போலவே அணியும் ஶ்ரீகாந்தின் தேர்வுக் குழுத் தலைமையில் திடமாக உருவாக்கப்பட்டது. 3-வது, 5-வது, 7-வது இடத்தில் இடக்கை பேட்ஸ்மேன்கள் ஆட வைக்கப்பட வலக்கை/இடக்கை காம்பினேஷன் அருமையாக செட் ஆகி அணிக் கட்டமைப்புக்கான அடிப்படை இலக்கணத்தோடு ஒத்திசைவு செய்தது.சேவாக்/சச்சின் யாராவது ஒருவர் ஓப்பனிங்கில் ஆட்டமிழப்பின் கம்பீர் வருவார், கோலியின் விக்கெட் வீழ்ந்தால் யுவராஜ், தோனியை வழியனுப்பினால் ரெய்னா என ஆடும் லெவனில் மூன்று இடக்கை ஆட்டக்காரர்களை உள்ளே வைத்துக்கொண்டு அசைக்க முடியாத பேட்டிங் அணி செட் செய்யப்பட்டிருந்தது. இதில் இருவர் பௌலிங்கும் செய்தார்கள். குறிப்பாக யுவராஜ் முழுநேர ஆல்ரவுண்டராகவே வலம் வர, இந்தியாவுக்கு அது ஜாக்பாட்டாக மாறியது.Gautam Gambhir 362 ரன்களை 90.50 ஆவரேஜோடு குவித்ததோடு 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் யுவராஜ். வென்ற கோப்பையில் அங்குலம் தவறாது அவருடைய பெயர் ஒளிர்ந்தது. ரெய்னாவுக்கோ ஆடிய நான்கு போட்டிகளில் மூன்று அழுத்தம் தரும் நாக் அவுட் போட்டி. குறிப்பாக காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யுவராஜ் - ரெய்னா பார்ட்னர்ஷிப் 61 பந்துகளில் 74 ரன்களைக் குவித்து மரணப்பிடியில் இருந்து அணியை மீட்டிருந்தது. கம்பீர் மொத்தமாக அடித்த 393 மட்டுமல்ல, இறுதிப் போட்டியில் சேறு படிந்த ஜெர்ஸி சுட்டிக்காட்டிய 97 ரன்களும் கோப்பைக்கான கடவுச்சீட்டாகின. வலது - இடது என சச்சின் - கம்பீர் கூட்டணி இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்கு எதிராகவும் 100+ பார்ட்னர்ஷிப்போடு எதிரணிக்குப் பள்ளம் பறித்தது. இங்கிலாந்து அந்த இருவரிடமிருந்து மீண்டாலும், இறுதியில் யுவராஜ் - தோனி கூட்டணியாக 46 பந்துகளில் 69 ரன்களோடு அடித்து இங்கிலாந்தை பாதாளத்தில் இறக்கினர். மொத்தத்தில் இடமும் வலமும் இணைய, மையத்தில் வையத் தலைமை கொண்டது இந்திய அணி.Yuvraj Singhகவனத்தை அப்படியே சற்று திருப்பி 2023-ல் குவியுங்கள், இங்கே ஆடவிருக்கும் உத்தேச பேட்ஸ்மேன்களை உற்று நோக்குங்கள்... ரோஹித் ஷர்மா சுப்மன் கில் விராட் கோலி ஸ்ரேயாஸ் கேஎல் ராகுல் ஹர்திக் பாண்டியா இந்த டாப் 6-ல் ஒருவர்கூட இடக்கை பேட்ஸ்மேன் இல்லை. ஜடேஜா, அக்ஸர் என 7-வது, 8-வது இடத்திற்குத்தான் இடக்கை பேட்ஸ்மேன்களைக் கொண்டு வருகிறார்கள். இதன் பாதிப்பு லெக் ஸ்பின்னர்களை எதிர்கொள்கையில் பூதாகரமானதாக மாறும். ஆடம் ஜம்பா, ஆதில் ரஷித், ரஷித் கான் என ஒவ்வொரு அணியும் அச்சுறுத்தும் லெக் ஸ்பின்னர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதுவும் இந்தியக் களங்களில் அவர்களைக் கையாள வேண்டுமெனில் இடக்கை பேட்ஸ்மேன்கள் மிகவும் அவசியம். டிரெண்ட் போல்ட் போன்ற இடக்கை வேகப்பந்துவீச்சு வீச்சாளர்களின் அவுட் ஸ்விங்கர்களும் வலக்கை பேட்ஸ்மேன்களைத் தள்ளாடச் செய்யும். இத்தனை பிரச்னைகளுக்குமான ஒரே தீர்வு, இடது/வலது கூட்டணிதான்.பாண்டியா, ஜடேஜா இந்தியத் தேர்வுக்குழு இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை எப்போதோ மறந்துவிட்டது. அவர்களைப் பொறுத்தவரை ஐ.பி.எல் அணியில் ஆடும் நட்சத்திர மதிப்பூட்டப்பட்ட வீரர்கள் அனைவரும் இந்திய அணிக்குள்ளேயே இருக்க வேண்டும், அதை வைத்து இவர்கள் பணம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நிரம்பியுள்ளது. அர்த்தமுடைய கடுமையான அதிரடி முடிவுகளோ, முறையான திட்டமிடலோ எதுவுமே இல்லை. கோப்பை வென்ற அந்த அணி போல மீண்டுமொரு அணியைச் செதுக்கி மீட்டுருவாக்கம் தர வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை இல்லை. அதற்கான அடிப்படைகளில் ஒன்றான இடக்கை/வலக்கை காம்பினேஷன் வீரர்களை டாப் ஆர்டரில் இருந்து தொடர்ச்சியாக செட் செய்ய வேண்டும் என்ற கருதுகோள் பெயரளவில்கூட இல்லை. ரிஷப் பண்டைக் கொண்டு 4-வது/5-வது இடத்தை முழுமைப்படுத்தலாம் என்று கருதி அந்த இடத்தில் அவரை ஆட வைத்துக்கொண்டிருந்தார்கள். அதையும் ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டு ஸ்ரேயாஸ் மற்றும் கே.எல்.ராகுல்தான் 4, 5 என முடிவு செய்து ரிஷப் பண்ட் லிமிடெட் ஃபார்மேட்டில் இருந்தே கழற்றி விடப்பட்டார். அதற்கு அடுத்த சில நாள்களிலேயே கார் விபத்தில் அவர் சிக்க, டாப் ஆர்டரில் ஒரு இடக்கை ஆட்டக்காரர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தரைமட்டமாகின. காயத்தில் இருந்து மீண்டு வந்தாலும் உலகக்கோப்பையில் இனி அவர் ஆடுவதற்கான வாய்ப்பு குறைவு என்பது இந்தியாவுக்கான பின்னடைவே. இதே அணி தொடருமானால் இந்தியாவிடம் தற்போது ஒரு வாய்ப்புதான் இருக்கிறது. அதாவது பாண்டியாவைக் கீழே இறக்கி ஜடேஜா/அக்ஸரில் ஒருவரை மேலே ஆட வைப்பது. இந்த உபாயத்தை விலக்கி வைத்து அணுகினால் இந்த பேட்டிங் அமைப்பை அவ்வளவு எளிதில் மாற்றி அமைக்க முடியாது. ஏனென்றால் இந்த இடங்களை விட்டுத் தர தற்போது ஆடும் எந்த வீரரும் முன்வரமாட்டார்கள்.ரிஷப் பண்ட் இளம் சேவாக்கிற்காக சச்சினும்/கங்குலியும் தங்களது ஓப்பனிங் இடத்தைத் தியாகம் செய்தார்கள் என்பதெல்லாம் பழங்கதை. அணியை முன்னிறுத்தி எதையும் அணுகும் பாங்கையெல்லாம் இப்போது நினைத்தே பார்க்கமுடியாது, தங்களது இடத்தைத் தக்க வைப்பதிலேயே பலரது கவனமும் உள்ளது. அது மட்டுமன்றி அஷ்வின் கூறியதுபோல் அக்காலத்தில் நண்பர்களாக ஆடினார்கள், தற்போது உடன் பணியாற்றும் சக பணியாளர்களாக ஆடுகிறார்கள். இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. அப்படியே மனமுவந்து அப்படியான அற்புதங்கள் நிகழ்ந்தாலும் இருக்கும் குறுகிய கால கட்டத்திற்குள் பெரிய அளவிலான அந்த மாற்றங்கள் நடந்தேறி அது ஆங்காங்கே பொருந்தியும் போவது அவ்வளவு எளிதான காரியமல்ல.ICC World Cup 2023: புறக்கணிப்படுகிறதா ராஜீவ் காந்தி ஸ்டேடியம்? உலகக்கோப்பையும் சில கேள்விகளும்! டிராவிட் பயிற்சியாளராக ஏற்கெனவே இரு உலகக்கோப்பைத் தோல்விகளைப் பரிசாக அளித்துவிட்டார். எந்த அளவு அவர்மீது நம்பிக்கை இருந்ததோ அதற்கு ஒருபடி மேலாகவே தற்சமயம் அதிருப்தி நிலவுகிறது. இது அவருக்கு ஏறக்குறைய இறுதி உலகக்கோப்பை, இதிலும் அவர் தோற்றால் ரோஹித்துடன் சேர்த்து இந்த உலகக்கோப்பைத் தொடரோடு அவரும் வெளியே செல்ல நேரிடும். இறுதி வாய்ப்பு இருவரது கழுத்தினையும் இறுக்கிப் பிடிக்கும் சமயத்தில் தெளிவான கண்ணோட்டத்தோடு சில கடுமையான முடிவுகளை எடுத்து அதில் விடாப்பிடியாக இருந்தால் மட்டுமே இந்த வருட உலகக்கோப்பை சாத்தியம்.ராகுல் டிராவிட்இவற்றைச் செய்யத் தவறும் பட்சத்தில் தொலைநோக்கியைத் தப்பான பக்கமிருந்து பார்த்துக்கொண்டிருப்பது போல, இந்தியாவிற்குக் கோப்பை என்பது பார்க்கவே முடியாத கனவாக மாறிவிடும்.
http://dlvr.it/SrPVfp

Post a Comment

0 Comments