வெயிலைத் தாங்கிய விறகாக இளம் ஃபைட்டர்களைக் கொண்ட இலங்கை, வீழ்ச்சிகளால் பலமுற்று, இனி திரும்ப வராது என்று நினைத்தபோது, கணிப்புகளைப் பொய்யாக்கி ஆசிய சாம்பியன் ஆகியிருக்கிறது. பல கடின சூழல்களைக் கடந்தும், இளம் படையின் எழுச்சியால் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது இலங்கை கிரிக்கெட் அணி.
டி20 ஃபார்மேட் என்றாலே பேட்ஸ்மென்களின் சொர்க்கபுரியாகவும் பௌலர்களின் மரணப் படுக்கையாகவுமே கருத்தில் கொள்ளப்படும். ஆனால், இந்த ஆசியத் தொடர் முழுவதிலும் பல சந்தர்ப்பங்களில் பௌலர்கள் தங்களது அசாத்திய ஸ்பெல்களினால் பேட்ஸ்மென்களுக்குக் கடினமான ஆட்டங்களாக இதை மாற்றிக் காட்டினர். அதிலும் நசீம் ஷா, ஹரீஸ் ராஃப் இணைந்து மிரட்டும் பாகிஸ்தானின் பவர்பிளே ஓவர்கள் ஒவ்வொன்றும் அவ்வகைப்பட்டவைதான். SL v PAK
இறுதிப் போட்டியிலும் பாகிஸ்தானின் தொடக்கம் அப்படித்தான் இருந்தது. பொதுவாகவே மணிக்கு 140+ கிமீ வேகத்தில் பந்துவீசி மிரட்டுபவர்கள், இப்போட்டியில் 150-க்கும் அதிகமான வேகத்தோடு பந்தை ஏவுகணையாக்கி அனுப்பினர். அந்த வேகத்திலும் பந்தை ஸ்விங்கும் செய்ய வைத்தது ஈட்டியில் விஷம் தோய்த்து அனுப்பியதைப் போல் இலங்கை பேட்ஸ்மேன்களின் நிலைமையைக் கவலைக்கிடமாக்கியது.
நசீமின் இன்ஸ்விங்கர் குஸால் மென்டீஸின் ஸ்டம்பைக் குசலம் விசாரித்து முதல் ஓவரிலேயே விக்கெட் கணக்கைத் தொடங்கி வைத்தது. அடுத்ததாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட ராஃபின் ஃபுல் லெந்த் டெலிவரி நிஷங்கவையும் வெளியேற்ற, ஓப்பனர்கள் இருவருமே பவர்பிளேயைக் கடக்கவில்லை. குணதிலகாவை ஆட்டமிழக்க வைத்த ராஃபின் வீசிய 151 கிமீ வேகத்தில் வந்த இன்ஸ்விங்கர் எல்லாம் வர்ணனைக்கு அப்பாற்பட்ட அதிபயங்கரம். பொதுவாக, "Their Bouncers are nightmares" என மேற்கிந்தியத் தீவுகளின் நான்கு ஹார்ஸ்மேனின் அட்டாக்கை எதிர்கொண்ட பேட்ஸ்மேன்கள் சொல்லுவதுண்டு. ஆனால், இவ்வளவு வேகமாக முன்னேறும் பந்து ஸ்விங்கும் ஆகும்போது பவுன்சரை விடவும் கடினமானதாக, பேட்ஸ்மேன்களால் எதிர் கொள்ளவே முடியாததாக மாறுகிறது. ஆகமொத்தம் 9 ஓவர்களுக்குள்ளாகவே ஐந்து பேட்ஸ்மேன்கள் பெவிலியனுக்குள் புகலிடம் தேடியிருந்தனர். 62/5 என இலங்கை சற்று தத்தளிக்கவே செய்தது.SL v PAK
ஆனால் அங்கிருந்து சாம்பியன் அணிக்குரிய சகல லட்சணத்தோடு இலங்கை கப்பல் கம்பேக் தந்தது. கேப்டன் ஷனக வெளியேறினாலும் அதனைக் கவிழாமல் காப்பாற்றியது பனுக ராஜபக்ஷ, ஹசரங்கவுடனும் பின் டெத் ஓவர்களில் கருணரத்னவுடனும் அமைத்துக்கொண்ட இரு பார்ட்னர்ஷிப்கள். பாதிக் கூடாரமே காலியாகி இருப்பினும் இவர்கள்தான் இழந்த நம்பிக்கையை மீட்டுத் தந்தனர். ஷதாப் மற்றும் இஃப்திகாரின் சுழல் பந்துகளால் காற்றைக் கிழித்த இவர்களது பேட்களைச் சமாளிக்க முடியவில்லை.
போட்டி கிட்டத்தட்டப் பாகிஸ்தானின் பக்கம் சாய்ந்திருந்த போதிலும் பனுகவின் அதிரடிதான் இலங்கையை ஆட்டத்திற்குள் திரும்பக் கொண்டு வந்தது. இறுதி ஓவரின் இறுதி இரண்டு பந்துகளில் அடிக்கப்பட்ட ஸ்கூப் ஷாட்டில் வந்த அந்த பவுண்டரியும், லாஃப்டட் டிரைவில் விளாசப்பட்ட சிக்ஸரும் அவரது இன்னிங்ஸின் சாராம்சத்தைச் சொல்பவை. அவரை வெளியேற்ற இஃப்திகார் இறக்கப்பட்டாலும் அவருக்கும் பவுண்டரியால் பதில் சொன்னார் பனுக. பிரஷர், அடுத்து ஆட ஆளில்லை என எதனையும் தலைக்குள் ஏற்றிக் கொள்ளாமல் அஞ்சாமல் ஆடினார். இன்னொரு புறம், ஹசரங்காவின் இன்னிங்ஸும் சளைத்ததில்லை. க்ரீஸை முழுமையாகப் பயன்படுத்தி சவாலான பந்துகளைக் கூட தனக்குச் சாதகமானதாக மாற்றிக் கொண்டார். பௌலிங் படையைக் கிறுகிறுக்க வைத்தது இவரது ஆட்டம். இந்த அஞ்சாத கவுன்ட்டர் அட்டாக்தான் தொடக்க ஓவர்கள் தந்த அழுத்தத்தைப் பாகிஸ்தானின் பக்கமே எதிரொலிக்கச் செய்தது. SL v PAK
இறுதி ஓவர்களில் இன்னமும் வெறி கொண்டு ரன்ரேட்டை முடுக்க முன்னேறிக் கொண்டிருந்த பனுக - ஹசரங்க கூட்டணியை இடையில் தரப்பட்ட ராஃபின் ஓவர் முறித்தது திருப்புமுனையாக எண்ணப்பட்டது. எனினும், அதன் பின்னும் இறுதி 4 ஓவர்களில் பாகிஸ்தானின் டெத் பௌலிங்கை அடித்து நொறுக்கி, 50 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தது பனுக - கருணரத்ன கூட்டணி.முதல் 9 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு, ஐந்து விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டிருக்க, அங்கிருந்து திரும்பி அடிக்கத் தொடங்கியது இலங்கை. 108 ரன்களை மீதமிருந்த வெறும் 11 ஓவர்களில் இலங்கையின் அந்த இரு கூட்டணிகளும் பெற்றுத் தந்துவிட்டன. குறிப்பாக, ஹசரங்க ஆட்டமிழந்த பின்னும் மொமெண்டம் மாறாமல் கடைசி 4 ஓவர்களில் 50 ரன்கள் குவிக்கப்பட்டன.
171 என்பது போதுமானதா என்பது பற்றியெல்லாம் யோசிக்கக்கூடவிடாமல் செய்துவிட்டது இலங்கையின் கம்பேக். மறுபுறம் பாகிஸ்தானோ இன்னிங்ஸின் முதல் பாதியில் பௌலிங், ஃபீல்டிங் என அத்தனையிலும் ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதியிலோ இரண்டிலுமே சோபிக்கத் தவறியது. ஆக, சேஸிங் சுலபம் என்பதால் பாகிஸ்தானின் கை ஓங்குமென்றாலும், இறுதிப் போட்டியின் அழுத்தம், போட்டியின் முடிவை எப்படியும் மாற்றலாம் என்பது இலங்கைக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது.SL v PAKடாஸை வென்றாலே போட்டியை வெல்லலாம் என்ற கனவோடு இருந்த பாகிஸ்தானுக்கு அவர்கள் வீசிய பவர்பிளே ஓவர்கள், ஏறக்குறைய வெற்றியை உறுதி செய்திருந்தன. இடையில் இலங்கை தந்த பதிலடியால் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டாலும் அது எட்டக்கூடியதென்ற கனவோடுதான் இறங்கியது பாகிஸ்தான்.
ஆனால், டி20 அனுமானத்துக்கு எல்லாம் அப்பாற்பட்டது, பௌலர்களின் முழுத் திறமையும் வெளிவரும் பட்சத்தில் அது போட்டியை இன்னமும் சுவாரஸ்யமானதாக்கும் என்பதனை இலங்கையின் பந்துவீச்சும் நிரூபித்தது. டாஸின் விழாத பக்கத்தில்கூட நமக்கான வெற்றி ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம். இலங்கை அதனைக் கருத்தில் கொண்டே இரண்டாம் பாதியை அணுகியது. SL v PAK
முதல் ஓவரில் லைன் செட்டாகாமல் மதுஷன்க திணறியது மோசமான தொடக்கமாக இருந்தது. ஆனால், நான்காவது ஓவரை வீசிய பிரமோத் மதுஷன்தான் போட்டியை இலங்கை பக்கம் திருப்பிவிட்டார். பாபர் மற்றும் ஃபாகர் ஜமான் ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் அவர் அனுப்பி வைக்க, 37/2 என பவர்பிளேயிலேயே சற்றே தள்ளாடத் தொடங்கியது பாகிஸ்தான். அங்கிருந்து சீரான இடைவெளியில் விக்கெட் வேட்டை ஆடி, கிடைத்த வாய்ப்பினைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது இலங்கை.
மதுஷன், புதுப்பந்தில் மட்டுமல்ல, மிடில் ஓவர், டெத் ஓவர் என மூன்று கட்டத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது ஸ்லோ பால்களும் இன்ன பிற வேரியேஷன்களும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி தந்தன. இஃப்திகார் - ரிஸ்வான் இடையே நீடித்த 71 ரன்கள் பார்டனர்ஷிப்பை அவர் முறித்ததுதான் இலங்கையின் வெற்றிக்கு அடித்தளமிட்ட தருணம். அங்கேயே பாகிஸ்தானின் நம்பிக்கை சற்றே குலைய ஆரம்பித்தது. எனினும் கோப்பையை உறுதி செய்தது ஹசரங்கவின் அந்த ஒரு ஓவர்தான்.SL v PAK
ஒரு லெக் ஸ்பின்னர் ஆல்ரவுண்டராகக் கிடைப்பது எப்போதும் அணியை ஒரு படி முன்னெடுத்துச் செல்லும். அதிலும் ஹசரங்க போன்ற திறமையுடைய டி20 ஆல்ரவுண்டர், அணிக்கான வரம். இப்போட்டியிலும் அதனை மீண்டும் நிரூபித்தார் ஹசரங்க. ரிஸ்வான், ஆசிஃப் அலி, குஸ்தில் ஆகிய மூவரையும் காலி செய்த ஹசரங்கவின் ஓவர்தான் ஆசிய சாம்பியனாக இலங்கைக்கு முடிசூட்டியது. இறுதி மூன்று ஓவர்களில் சற்றே போராடினாலும் பாகிஸ்தானால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களது ஆறாவது ஆசியக் கோப்பையை இலங்கை ஏந்தியது.
2014-ம் ஆண்டுக்குப் பிறகு மறுபடியும் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது இலங்கை. முந்தைய எல்லாக் கோப்பைகளையும் விட, இக்கோப்பை அவர்களுக்கு மிகவும் ஸ்பெஷல். நாட்டு நிலவரத்தால் தங்களது நாட்டில் நடத்தக்கூட முடியாத தொடரை இம்முறை அரபு மண்ணில் இலங்கை நடத்தியது. அப்படியிருக்க இக்கோப்பை அவர்களுக்கு மாபெரும் நம்பிக்கையையும் அடுத்தடுத்த தொடர்களுக்கான உத்வேகத்தையும் கொடுக்கும்.
மேலும், இலங்கை கிரிக்கெட் மிகச் சமீபமாகக் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்க வைத்தது போலிருந்தது இந்தத் தொடரில் அவர்கள் கொடுத்த கம்பேக்கும் இப்போட்டியில் அவர்கள் கொடுத்த கம்பேக்கும்! கடந்த சில ஆண்டுகளாகவே பழைய மாண்புகள் மறக்குமளவு, அதனை எண்ணி மற்ற நாட்டு ரசிகர்களே வருந்துமளவு தொடர் தோல்விகளால் மூழ்கியிருந்த அணி, அங்கிருந்து மேலே வந்து, இத்தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி வந்தது. அதிலும், தொடரின் தொடக்கப் போட்டியில் ஆப்கனிடம் வாங்கிய அடிக்கும், இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியனானதுக்குமான இடைவெளிதான் அவர்கள் மீண்டெழுந்திருப்பதைச் சொல்கிறது. SL v PAK
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய அத்தியாயத்திற்கான தொடக்கப் புள்ளி இது.'The Shawshank Redemption' திரைப்படத்தின் அடிப்படை "நம்பிக்கை" என்றால், மீண்டு எழுந்து நிற்கும் "Sri Lankan Cricket Redemption"-ன் அடிநாதமும் அதுவேதான். துணைக் கண்டத்தில் முன்பைப்போல பலம் பொருந்தியதாக இலங்கை அணி உருவெடுத்திருப்பதற்கும், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் எல்லா அணிகளுக்கும் சவால் விடும் அணியாக இருக்கப் போவதற்கும் இக்கோப்பை ஒரு அத்தாட்சி!
http://dlvr.it/SY9LsQ
0 Comments
Thanks for reading