ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெரிய தொடருக்கு முன்பாக அணி அறிவிக்கப்படும்போது அது சார்ந்து பலருக்கும் பலவிதமான அபிப்ராயங்கள் இருக்கும்.தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியின் பலம் பலவீனங்கள் குறித்துமே ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் தங்களின் கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்த வரிசையில் நாமும் நம்முடைய பங்கிற்கு அறிவிக்க்ப்பட்டிருக்கும் இந்திய அணி குறித்து ஒரு அலசு அலசுவோம்!
உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அஷ்வின், சஹல், அக்சர் படேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்சல் படேல், அர்ஷ்தீப் சிங்.
ரிசர்வ் வீரர்கள்:
முகமது ஷமி, ஸ்ரேயஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சஹார்.Team India
கடந்த 2021 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வில் சிலபல சர்ப்ரைஸ் விஷயங்கள் தென்பட்டிருந்தன. வருண் சக்கரவர்த்தியை அணியில் வைத்துக்கொண்டு சஹலை ஓரங்கட்டிய சம்பவங்களெல்லாம் நடந்திருந்தது. இந்த முறை அந்த மாதிரியான விஷயங்கள் பெரிதாக இல்லை. விராட் கோலி ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். அதனால் அவரை உலகக்கோப்பைக்கான அணியில் எடுப்பதற்கு முன் கொஞ்சம் யோசிக்க வேண்டும் என சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்கையில் பிசிசிஐ அந்த முன்னாள் வீரர்களின் கருத்துகள் குறித்தும் தீவிரமாக யோசிக்குமோ என தோன்றியது. ஆனால், கோலி சரியான நேரத்தில் சுதாரித்துக் கொண்டார். ஆசியக் கோப்பையில் நன்றாக ஆடி நீண்ட நாட்களாக அடிக்கப்படாமல் இருந்த சதத்தை அடித்து தன் மீதான கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலைக் கொடுத்துவிட்டார்.Virat Kohli
பிசிசிஐயும் முழு மனதோடு கோலியை உலகக்கோப்பை அணிக்குத் தேர்வு செய்துவிட்டது.
கடந்த உலகக்கோப்பையில் அனுபவமிக்க லெக் ஸ்பின்னரான சஹலை ஒதுக்கிவிட்டு ராகுல் சஹர், வருண் சக்கரவர்த்தி போன்றோரை துபாய்க்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணி அந்த உலகக்கோப்பையில் மோசமாகத் தோற்றதற்கு சஹல் இல்லாததும் மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது. அந்த தவற்றை இந்த முறை பிசிசிஐ சரி செய்திருக்கிறது. சஹல் உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். கூடவே தமிழக வீரரான அஷ்வினுக்கும் அணியில் இடம் கிடைத்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் ஒயிட்பால் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஒதுக்கப்பட்டிருந்த அஷ்வின் இப்போது தொடர்ச்சியாக இரண்டு உலகக்கோப்பைத் தொடர்களில் ஆடுவதே ஒரு சாதனைதான்.Ashwinகடந்த உலகக்கோப்பைக்கான அணியில் அஷ்வின் தேர்வான சமயத்தில் `Light at the end of the tunnel..' என்பது போல ஒரு ட்வீட்டை பதிவிட்டிருந்தார். அஷ்வினின் கரியரில் கடந்த ஆண்டு புலப்பட்ட வெளிச்சம் இன்னமும் குன்றவில்லை.
சஹல் மற்றும் அஷ்வினோடு காயமடைந்திருக்கும் ஜடேஜாவிற்கு ஈடாக அக்சர் படேலும் அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ப்ளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் ஜடேஜாவின் இடத்தை அக்சர் நிரப்ப வேண்டும்.
பெரிய தொடர்களில் ஒரு திடமான இடதுகை வேகப்பந்து வீச்சாளரை களமிறக்காமல் இருந்ததும் இந்திய அணியின் பலவீனமாக பார்க்கப்பட்டது. இந்திய பேட்டர்கள் எதிரணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டால் சிதறுவார்கள். ஆனால், அதே ஆயுதத்தைக் கொண்டு எதிரணியை தாக்க முற்படமாட்டார்கள். கடந்த உலகக்கோப்பையில் ஷாகீன் ஷா அஃப்ரிடியிடமும், ட்ரெண்ட் போல்டிடமும் இந்திய பேட்டர்கள் ஸ்டம்புகளை பறிகொடுக்கையில், பந்துவீச்சில் அதேபோன்ற பதில் தாக்குதலை தொடுக்க இந்திய அணியில் எந்த பௌலரும் இல்லை.Shaheen Afridi
இந்தக் குறையை போக்கும் வகையில் இந்த உலகக்கோப்பை அணியில் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டிருக்கிறார். தொடர்ச்சியாக ஐ.பி.எல் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்காகவும் தொடர்ந்து நன்றாக வீசி வருகிறார். பவர்ப்ளே, டெத் என எல்லா சமயங்களிலும் சிறப்பாக வீசக்கூடியவர். ஆசியக்கோப்பையில் சில போட்டிகளில் ஸ்கோரை டிஃபண்ட் செய்ய முடியாமல் இந்திய அணி தோற்றிருக்கும். அந்த போட்டிகளிலுமே கூட கடைசி ஓவர்களை அர்ஷ்தீப் சிங் சிறப்பாகவே வீசியிருப்பார். கடந்த அக்டோபர் நவம்பரில் நடந்த உலகக்கோப்பைக்குப் பிறகு இப்போது வரை இந்திய அணிக்காக மொத்தம் 11 போட்டிகளில் அர்ஷ்தீப் சிங் பந்துவீசியிருக்கிறார்.Arshdeep Singh | அர்ஷ்தீப் சிங்இந்த 11 போட்டிகளில் டெத் ஓவர்களில் அவருடைய சராசரி எக்கானமி 6.71 மட்டுமே.
பும்ரா எந்த காயமும் இல்லாமல் உலகக்கோப்பைக்கு வந்து சேரும்பட்சத்தில் டெத் ஓவர்களில் பும்ரா-அர்ஷ்தீப் சிங் கூட்டணி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர்கள் போக புவனேஷ்வர் குமாரும், ஹர்சல் படேலும் வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு வலு சேர்க்கின்றனர். ஆசியக்கோப்பையில் 19 வது ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியிருந்த போதும் புவனேஷ்வர் குமாரின் அனுபவத்தின்மீது அதிக நம்பிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
பவர்ப்ளேயில் அந்த முதல் ஸ்பெல்லில் விக்கெட்டுகளை அள்ளிக் கொடுக்க வேண்டியது புவனேஷ்வர் குமாரின் பொறுப்பு. ஆசியக்கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வீசியதை போன்றே உலகக்கோப்பையின் ஒவ்வொரு போட்டியிலும் புவி வீச வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஹர்சல் படேல் அவருடைய ஸ்லோயர் ஒன்களாலும் வேரியேஷன்களாலும் பேட்ஸ்மேன்களை திணறடிக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பெரிய மைதானங்கள் இவருடைய பந்துவீச்சிற்குக் கைகொடுக்கலாம்.
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரைக்கும் ஷமி இல்லாதது ஒரு குறையாக கருதப்படுகிறது. அது ஒரு குறைதான். ஆனால், அணியில் ஷமியின் இல்லாமை எதிர்பார்க்கப்பட்டதே. கடந்த உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா கூட்டணி பல வீரர்களையும் பல இடத்தில் பலவிதமாக முயன்று பார்த்திருக்கிறது.Bumrah & Shamiகடந்த உலகக்கோப்பைப் பிறகு இதுவரை நடந்திருக்கும் 8 தொடர்களின் Squad- ல் 30 வீரர்களை இந்திய அணி பயன்படுத்தியிருக்கிறது. இந்த 8 தொடர்களின் Squad லுமே ஷமி இல்லை. கடந்த உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணிக்காக அவர் ஒரு டி20 போட்டியில் கூட ஆடியிருக்கவில்லை.
அதேநேரத்தில் உலகக்கோப்பைக்கு முன்பாக நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கெதிரான டி20 தொடர்களில் ஷமிக்கும் அணியில் இடம் கிடைத்திருக்கிறது. ஒருவேளை ஷமி இந்தத் தொடர்களில் மிகச்சிறப்பாக வீசிவிட்டாலும் ரிசர்வ் வீரராக இருப்பதால் உலகக்கோப்பையில் பென்ச்சில் மட்டுமே அமர்ந்திருப்பார். வேகப்பந்து வீச்சாளர்கள் யாருக்கேனும் காயம் ஏற்படும்பட்சத்தில் ரீப்ளேஸ் செய்ய முதல் சாய்ஸாக ஷமியே இருப்பார் என்பது மட்டும்தான் ஆறுதலான விஷயம்.
டாப் ஆர்டரில் ரோஹித், ராகுல், கோலி என சீனியர் வீரர்கள் ஆக்கிரமித்து இருக்கின்றனர். இப்படியான டாப் ஆர்டருக்கு பின் வரும் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டரில் சிறிய குழப்பம் இருக்கலாம். இதை ஆசியக்கோப்பையிலேயே பார்த்திருப்போம். தினேஷ் கார்த்திக்கை பென்ச்சில் வைத்துவிட்டு ஹர்திக்கை மேலே இறக்கிவிட்டு தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் போன்றோரை டெத் ஓவர்களில் இறக்கியிருப்பார்கள். இந்த ஆர்டர் எதிர்பார்த்த ரிசல்ட்டை இந்திய அணிக்குக் கொடுக்கவில்லை. கடந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணி ஃபினிஷர் ரோலை தினேஷ் கார்த்திக்கிற்கென்றே ஒதுக்கியிருந்தது. கடைசி வரை அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தனக்கென ஒரு உறுதியான ரோலையும் இடத்தையும் கொடுத்த போது தினேஷ் கார்த்திக் வெளுத்தெடுத்தார்.
அதே பாணி இங்கே உலகக்கோப்பையிலும் பின்பற்றப்படும்பட்சத்தில் தினேஷ் கார்த்திக்கிடமிருந்து தரமான ஃபினிஷ்களை எதிர்பார்க்கலாம். 2007 இல் நடந்த அறிமுக டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் இந்திய அணிக்காக தினேஷ் கார்த்திக் ஆடியிருந்தார். ஏறக்குறைய 15 ஆண்டுகள் கழித்து இப்போதைய உலகக்கோப்பை அணியிலும் தினேஷ் கார்த்திக் ஆடப்போகிறார். இந்த 15 ஆண்டுகளுமே அவருக்கு போராட்டங்களின் காலமாகவே இருந்திருக்கிறது. இந்திய அணியுமே 2007 க்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வெல்லவே இல்லை.Dinesh Karthikஇந்த உலகக்கோப்பையை வெல்ல தினேஷ் கார்த்திக்கால் இயன்ற அத்தனையையும் கொடுப்பது மட்டுமே அவருடைய கரியரின் திருப்திகரமான க்ளைமாக்ஸூக்கு உகந்ததாக இருக்கும். அவருடைய ட்ரீம் தருணம் இதுவென்பதால், இந்த முறை கோட்டைவிடமாட்டார் என நம்புவோம்!
சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களின் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே இந்திய அணிக்கு பெரும்பலமாக இருக்கும்.
கடந்த உலகக்கோப்பைக்கான அணியில் ஆடியதில் 6 வீரர்களுக்கு இந்த உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. இஷன் கிஷன் வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பெரிதாக சோபிக்கவில்லை. ராகுல் சஹர், வருண் சக்கரவர்த்தி, ஷர்துல் தாகூர், ஷமி ஆகியோர் இந்திய அணியின் ப்ளூ ப்ரிண்ட்டிலேயே இல்லை. ஜடேஜாவுக்கு காயம். இவர்களை தவிர்த்து கடந்த முறையை போன்றே இந்த முறையும் ஸ்ரேயஸ் ஐயர் ரிசர்வ் வீரராகவே வைக்கப்பட்டிருக்கிறார்.
முன் திட்டமிடல்கள் இன்றி கடைசி நிமிடத்தில் எடுத்த சில முடிவுகளே கடந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பலத்த அடியைக் கொடுத்தது. அதை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு, கடந்த ஒரு வருடமாக தாங்கள் முயன்று பார்த்து நல்ல ரிசல்ட்டை கொடுத்த வீரர்களை மட்டுமே இந்த முறை பிரதானமாக தேர்வு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் சிலவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணி பெரிய ஏமாற்றங்கள் இல்லாத அணியே. Team Indiaஇந்த அணி ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிக்கொடியை பறக்கவிடுவார்களா என்பதை மட்டுமே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
http://dlvr.it/SYJJ8n
0 Comments
Thanks for reading