சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதில் அர்ஷ்தீப் தன் கைக்கு வந்த கேட்ச்சைத் தவறவிட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்தச் சூழலில் நெட்டிசன்கள் பலர், அர்ஷ்தீப் சிங்கை `காலிஸ்தானி' என்றும் அவரது நாடு 'காலிஸ்தான்' என்றும் குறிப்பிட்டு கேலி செய்தது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங், தான் தவறவிட்ட கேட்ச் குறித்து மிகவும் வருத்தப்பட்டுப் பேசியதாகவும் அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை என்றும் அவரது பயிற்சியாளர் ஜஸ்வந்த் ராய் கூறியுள்ளார்.அர்ஷ்தீப் சிங்
இது பற்றிக் கூறிய ஜஸ்வந்த் ராய், "அன்று அர்ஷ்தீப் மிகவும் பதற்றமாக இருந்தார். 'உன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் நீ செய்தாய், கவலைப்படாதே' என்று அவருக்கு ஆறுதல் கூறினோம். அவர் ஒரு கேட்சைத் தவறவிட்டாலும் ஆட்டத்தின் கடைசி ஓவரில் கிட்டத்தட்ட ஏழு ரன்களைப் பாதுகாத்துச் சிறப்பாகப் பந்து வீசியிருந்தார். பின்னர், இது பற்றி அவரிடம் பேசியபோது அன்று இரவு அவரால் தூங்க முடியவில்லை என்று வருத்தத்துடன் என்னிடம் கூறினார்.
மேலும், தான் ட்ரோல்கள் பற்றிக் கவலைப்படவில்லை என்றும் தான் முயன்ற யார்க்கர் ஃபுல் டாஸாக மாறியது குறித்து மட்டுமே தனது எண்ணங்கள் இருந்ததாகவும் கூறினார். அர்ஷ்தீப்பின் தவறுகளைச் சரிசெய்யும் அணுகுமுறை அவருக்கும் இந்திய அணிக்கும் உதவும். நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பைப் போட்டி அவருக்கு மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/SYJt5C
0 Comments
Thanks for reading