உம்ரான் மாலிக்கின் பந்துகள் காற்றில் உலவும் கால அவகாசத்தை விடச் சற்றே அதிகமானதுதான் தற்சமயம் இந்தியக் கேப்டன்களின் பதவிக் காலமும், வீரர்களுக்கு அணியில் இடமும்!
குடவோலை முறையைப் பின்பற்றாத குறையாகத்தான் இந்தியா கேப்டன்களையும், வீரர்களையும் சமீபத்தில் தேர்வு செய்கிறது. இந்தாண்டில் மட்டும் மூன்று ஃபார்மேட்டில் ஏழு மாதங்களில், ஏழு கேப்டன்களை இந்தியா பார்த்துள்ளது. "ரெட் மற்றும் வொய்ட் பால் கிரிக்கெட்டுக்கு ஒரே கேப்டன்" என்று கூறி, கோலிக்குப் பதிலாக ரோஹித்தை மூன்று ஃபார்மேட்டுக்குமான முழுநேரக் கேப்டனாக்கிய அதே பிசிசிஐதான், தான் சொன்னதற்கு முரணாக ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு கேப்டன் என உருட்டி விளையாடுகிறது. Bazzball மூலம் இங்கிலாந்து, டெஸ்டை டி20 அச்சில் வார்க்க, இடிபாட்டுக்குள் இருந்த இலங்கைகூட மெல்ல எழுந்து வர, இந்திய அணியோ ஆபீஸ் வாட்ஸ் அப் குரூப்பில் எல்லோரையும் அட்மினாக்குவது போல் அட்டகாசம் செய்து வருகிறது. பிசிசிஐ டிரெண்டிங் செய்து வரும், "எல்லோரும் அணியின் முன்னாள் கேப்டனே" திட்டத்தின் வாயிலாக, ஒட்டுமொத்த இந்திய அணியும் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. ரவி சாஸ்திரி, தோனி, தோனி - கோலி
கேப்டன்ஷிப் மாற்றம் தோனி - கோலி விஷயத்தில் அவ்வளவு அழகாக நடந்தேறியது. ஆனால், கோலி - ரோஹித் மாற்றம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. கேப்டன் பதவிக்குத் தற்போது மியூசிக்கல் சேர்தான் நடத்தி வருகிறது பிசிசிஐ. கோலி, கே.எல். ராகுல், ரோஹித், பண்ட், பாண்டியா, பும்ரா, வரவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கு தவான் எனக் கேப்டன்களை வைத்தே, ஒரு பிளேயிங் லெவனை உருவாக்கி விடலாம். அதற்கு யாரைக் கேப்டனாகப் போடுவார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும். எது எப்படியோ, குறுகிய காலகட்டத்தில் அதிகக் கேப்டன்களோடு பணியாற்றிய சாதனையை ஏற்கனவே கோச் ராகுல் டிராவிட் படைத்துவிட்டார். சலாம் ராகுல் பாய்!
சரி, வழிநடத்தும் தலைமைதான் மாறிக் கொண்டே இருக்கிறது, அணியின் வீரர்களுக்கான இடங்களிலாவது நிலையான தன்மை இருக்கிறதா என்று பார்த்தால் தலைகீழாக நிறுத்தப்பட்ட தஞ்சாவூர் பொம்மையின் நிலைதான் அவர்களுக்கும். பொதுவாக, ஓர் அணியில் வீரர்களின் மாற்றம் என்பது ஒரு தொடரை வெற்றி பெறும்போது, தோற்கும்போது, இறுதிப் போட்டியில் ஆடும்போது, டெட் ரப்பர் மேட்சில் ஆடும்போது போன்ற சமயங்களில்தான் நிகழும். ஆனால், "என்னுடன் அழைத்துச் செல்லப்படும் அனைத்து வீரர்களையுமே இத்தொடரில் கண்டிப்பாக ஆட வைப்பேன்" எனக் கடந்த இலங்கை சுற்றுப்பயணத்தின் போது டிராவிட் கூறியதை வழிமொழிந்து, எல்லா வீரர்களையும் ஆட வைத்து அழகு பார்த்து வருகிறது பிசிசிஐ. பரிசோதனை முயற்சி தவறில்லைதான், ஆனால் பரிசோதனை மட்டுமே ஒரே முயற்சி என்றால் அதுவே அணிக்கான சோதனையாக மாறிவிடும் என்பதுதான் வேதனை.
கொரோனா காலத்தில் இங்கிலாந்து கடைப்பிடித்த ரொட்டேஷன் பாலிஸியின் இன்னொரு வெர்ஷனைத்தான் இந்தியா தற்போது கையிலெடுத்துள்ளது. ஒரு வீரருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதா, சுழற்சி முறைக்கு உட்பட்டுள்ளாரா, அல்லது அணியிலிருந்து தற்காலிக விடை கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றுகூடக் கணிக்க முடியாமல் வீரர்களை வைத்து ஜக்லிங் ஆடியது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு. இதனால் பல போட்டிகளில் அவர்கள் கையைச் சுட்டுக் கொண்டனர். இந்தியாவும் இப்போது அதே அபாயகரமான பாதையில்தான் பயணிக்கிறது. எந்த ஒரு தொலைநோக்குப் பார்வையோ, குறிக்கோளோ, அவர்களது ரோல் குறித்த தெளிவோ இல்லாமலே வீரர்கள் ஆட வைக்கப்படுகின்றனர். அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியை எடுத்துக் கொள்வோம். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, ஷமியின் ஓய்வுக்குக் கூட வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்காக, காயம் ஏற்பட்டு விடாமல் அவர்களை இந்தியா அடைகாக்கிறதென எடுத்துக் கொள்ளலாம். நீண்ட காலத்திற்குப் பின் தரப்பட்டுள்ள பண்டிற்கான ஓய்வுகூட, சரியானதுதான். ஆனால், இந்தியாவின் இரு தூண்களான கோலி, ரோஹித்துக்கு அளிக்கப்பட்டுள்ள ஓய்வுதான், கேள்விகளை எழுப்புகிறது.ரோஹித் ஷர்மா, விராட் கோலி
ரோஹித், தனது காயத்துக்கும் களத்துக்குமான இடைவெளியில் தத்தளித்துக் கொண்டுள்ளார். கேப்டனாகத் தனது முதல் உலகக் கோப்பையைச் சந்திக்கப் போகும் அவர், அணியோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும். தோற்க வேண்டும், விழ வேண்டும், பாடம் கற்றுத் திரும்ப எழ வேண்டும், இதுதான் வளர்ச்சிக்கான ஃப்ளோ சார்ட். ஆனால், அது இங்கே நடக்கவே இல்லை. கோலியைப் பற்றியோ சொல்லவே தேவையில்லை. கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆடுவது, டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் தன்னை மெருகேற்றுவது போன்ற விஷயங்களை முயன்று ஃபார்முக்குத் திரும்ப அவர் தயாராக இல்லை. அப்படி இருக்கையில் என்னதான் தீர்வு? இர்ஃபான் பதான் கடுமையாகச் சாடியிருப்பதைப் போல, "ஓய்வு, இழந்த ஃபார்மை மீட்டுத் தராது" என்பதே உண்மை.
ரன்னெடுக்க வேண்டிய பரபரப்பிலேயே வைத்துக் கொள்ளும் டி20-ஐ விட, விக்கெட்டை இழக்கக் கூடாதென்ற பயத்தோடே உலவ வைக்கும் டெஸ்டை விட, ஆடி முடிக்க 50 ஓவர்கள் இருக்கின்றன என்னும் ஒரு தெளிந்த நீரோடை போன்ற மனநிலைக்கு நகர்த்தும் ஒருநாள் போட்டிகள், கோலி தனது இழந்த ஃபார்மை மீட்டெடுப்பதற்கான சரியான தளம். அதுவும் அவர் பல சதங்களை விளாசி உள்ள அதே தளம். அது மட்டுமின்றி, போட்டி நடைபெற இருப்பது சவாலான மேற்கிந்தியத் தீவுகள் மைதானங்களில்! தன்னம்பிக்கையைத் திருப்பித் தந்து, பழைய கோலியாக அவரை மாற்றுவதற்கு, இதைவிட வேறு வாய்ப்பு இருக்க முடியுமா?ஒருவேளை ஒருநாள் தொடரில் காணப்படாத பெயர்கள், இதே சுற்றுப்பயணத்தின் டி20 தொடரில் இடம்பெறலாம்தான், இருந்தாலும் அதுவும் நிச்சயமில்லை. இவற்றைத் தாண்டி ஒருநாள் போட்டிகள் மீதான பிசிசிஐ-யின் மெத்தனப் போக்கும், மேற்கிந்தியத் தீவுகள்தானே என்பது போன்ற அலட்சியமும்தான், இந்திய அணிக்கு அபாய மணி அடிக்கிறது. எந்த ஒரு அணிக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம்.
ஒருமுறை ரிக்கி பாண்டிங், உலக சாம்பியன்களாக ஆஸ்திரேலியா வலம் வருவதற்கான காரணம் குறித்துக் கேட்ட போது, என்று கூறியிருந்தார் ரிக்கி பாண்டிங்"எந்த அணியையும் நாங்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை. வளரும் அணியாக இருந்தாலும், அவர்களுடன் ஆடுவது எங்களது சாதனை வட்டங்களைப் பெருக்கும், 400 என்னும் இலக்கை நிர்ணயிக்கும் மனநிலையோடு இறங்குவோம், அவ்வகையில் அதுவும் முக்கியமே"
இந்தியா இந்த இடத்தில்தான் பாடம் கற்க வேண்டும். அயர்லாந்து தொடருக்கு அனுப்பிய அதே அணியில் சில பெயர்களை மட்டும் அடித்து மாற்றி மேற்கிந்தியத் தீவுகளுக்கு அனுப்ப இருக்கிறது. இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்தான், பெஞ்ச் வலுவைப் பரிசோதிக்கலாம்தான். ஆனால் அதற்கு முதலில் சீனியர் வீரர்கள் டிராக்கிற்குத் திரும்ப வேண்டும். ஒரு கோர் அணி தயாராக வேண்டும். அதைச் சுற்றித்தான் ஒவ்வொரு வீரருக்குமான பேக் அப் வீரர்களை செட் செய்ய வேண்டும். ஆனால் இங்கே அந்த பிரதான பிளேயிங் லெவனுக்கே 'சாட் பூட் த்ரி' போட்டு ஆட்களை இஷ்டத்துக்கு மாற்றி வருகிறது பிசிசிஐ.ராகுல் டிராவிட் - ஷிகர் தவான்
இந்தியாவைப் பொறுத்தவரை அதன் கோர் அணி, முழு ஆயத்தமாகவும் இல்லை, அசைக்க முடியாத வலிமையுடனுமில்லை. அதனை முறைப்படுத்த முயலாமல் 'Trial and Error' முறையிலேயே தொடருக்கு ஒருவராகக் களத்தில் ஆடவிட்டு, நேர்முகத் தேர்வு நடத்திவருகிறது பிசிசிஐ. அணிக்குள்ளான இப்படிப்பட்ட மாற்றங்கள் இடையூறுகளாகி, அணிக்குள்ளான ஒத்திசைவையே இது குலைத்துப் போடும்.
சென்ற டி20 உலகக் கோப்பையிலும் இந்தத் தவற்றைத்தான் இந்திய அணி செய்தது. பிளேயிங் லெவனைப் பற்றிய தெளிவில்லை. இறுதி செய்யப்பட்டதும் அணியாக ஒருங்கிணைந்து பல போட்டிகளைச் சந்திக்கவில்லை. நம்பர் 4 என்ற முக்கிய இடத்துக்கான குழப்பம் ஒரு பிரச்னையாகவே இருந்தது. ஐபிஎல் முடிந்த கையோடு கோதாவில் குதித்துச் சமாளிக்க முடியாமல் தொங்கிய முகத்தோடு கோப்பை இல்லாமல் திரும்பி வந்ததுதான் மிச்சம். உலகக் கோப்பைக்கு முன்னதாகச் சில போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், பழைய கசப்பை மறக்க பிசிசிஐ என்ன செய்ய வேண்டும்? சில நாள்களுக்கு முன், ஜெய் ஷா, "இந்தியாவின் இரு அணிகள் உலகின் வெவ்வேறு மூலைகளில் ஒரே சமயத்தில் இருவேறு அணிகளுடன் ஆடிக் கொண்டிருக்கும்" என்று கூறியிருந்தார். இது நிகழக் கூடியதே. ஆனால் அது பிசிசிஐயின் கல்லாவை நிரப்புமே ஒழிய, கோப்பைக்கான ரோடு மேப்பாகவோ, ப்ளூ பிரின்டாகவோ நிச்சயம் இருக்க முடியாது.HBD Dhoni: "தோனி... தோனி!" இன்றும் குறைந்திடாத ரசிகர்களின் உற்சாகம்! அப்படி என்ன செய்தார் எம்.எஸ்?
"தி பெஸ்ட்" ஆக, குறைகளற்ற சர்வதேச தரமுள்ள அணியை இறுதி செய்வது, அவர்களை ஆட வைக்கும் பொசிஷனிலிருந்து எல்லாவற்றையும் தெளிவோடு அணுகுவது, அவர்களை அணியாகப் பல போட்டிகளில் ஆட வைப்பது, அதன் வழியாக அழுத்தத்தால் உடைந்து போகாதபடி அவர்களுக்கான பயிற்சியை அளிப்பது என இவையெல்லாம்தான் அணிக்குள்ளே ஒரு கட்டுக்கோப்பையும் பிணைப்பையும் உருவாக்கும். இதுதான் ஆக்கத்துக்கான வழித்தடமாகவும் இருக்க முடியும்.
ஏற்கெனவே பயிற்சியாளர் டிராவிட் மீது விமர்சனத் தோட்டாக்கள் பாயத் தொடங்கி விட்டன. அவரது பேட்டிங் ஸ்டைல் போலவே இருக்கும் அவரின் டிஃபென்சிவ் மைண்ட் செட்தான் இங்கே தோல்வியைத் தருகிறது. கிரேக் சேப்பலுடனான இருள் சூழ்ந்த நாள்களின் இரண்டாவது பாகம் இது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. உண்மையில் தலைமாறிக் கொண்டே உள்ள அந்த 'கேப்டன் கிரீடம்' ஒரு தலையில் நிலையாக நின்றால் மட்டுமே எப்பேர்ப்பட்ட ராஜகுருவாலும் நல்ல ஆலோசனைகளை வழங்கிட முடியும். குறைந்தபட்சம் அந்தத் தவற்றையாவது பிசிசிஐ சரிசெய்து, டிராவிட் - ரோஹித் பிணைப்பை வலுவாக்கி, இணைந்து பயணிப்பதற்கான நிலையை உருவாக்க வேண்டும். இவர்களது கெமிஸ்ட்ரி அணிக்குள்ளும் சமநிலையை உருவாக்கி முன்னெடுத்துச் செல்லும்.Ganguly - Dravid
குவிலென்ஸ், சூரிய ஆற்றலை ஒரு புள்ளியில் குவித்து காகிதத்தையே எரியூட்டுவதைப் போல், ஒரே புள்ளியில் மொத்த கவனமும் திருப்பப்பட வேண்டும். அந்தப் புள்ளியில் ஒரு இம்மிகூட உலகக் கோப்பை அவுட் ஆஃப் ஃபோகஸில் தெரியக் கூடாது. அப்போதுதான் கோப்பைக்கான கனவைக் காணவாவது தகுதி கிடைக்கும்.இது எல்லாம் நடந்தேறத் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் டி20 உலகக் கோப்பை மட்டுமல்ல, அடுத்து வரவிருக்கும் ஒருநாள் போட்டிகளுக்குரிய கோப்பை கூட இந்தியாவின் கண்களிலிருந்து மறைந்து கொண்டேதான் இருக்கும்!
http://dlvr.it/STY1TW
0 Comments
Thanks for reading