தொடர்ச்சியாக 13-வது டி20 போட்டியை வென்று சாதனை படைத்திருக்கிறது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா அணி. கடந்த சில மாதங்களாக இந்திய அணிக்குள் பல்வேறு புதிய கேப்டன்கள் உருவெடுத்தாலும் ரோஹித் தலைமையேற்கும் போது மட்டும் இந்தியா ஒரு போட்டியைகூட இழக்காதது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டியில் விளையாடிய சீனியர் வீரர்களுக்கு இப்போட்டியில் ஓய்வு அளிக்கப்படவே அயர்லாந்தில் ஜொலித்த வீரர்களுக்கு இப்போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. கூடுதலாக இந்தியாவுக்காக தன் முதல் போட்டியில் ஆடினார் அர்ஷதீப் சிங்.Hardik Pandya
டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்தியா. ரோஹித்தும் இஷான் கிஷானும் இன்னிங்க்ஸை தொடங்க வழக்கம் போல் பொறுமையாக விளையாடாமல் இருவரும் ஆரம்பம் முதலே சரவெடியாக வெடிக்க தொடங்கினர். ரோஹித்தின் இன்டென்ட் ஒவ்வொரு பணத்திலும் தெரிந்தது. ஆனால் மொயின் அலி ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்த கையோடு 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார் ரோஹித். விக்கெட் போனதும் ஆட்டத்தின் வேகம் குறையும் என்று எதிர்பார்த்தால் அதற்கு நேர் மாறாக அடுத்து களம் இறங்கிய தீபக் ஹூடா இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்து தன் ரன் கணக்கைத் தொடங்கினார்.
மறுபக்கம் இஷான் கிஷானும் அவுட் ஆக, அடுத்து வந்த சூர்ய குமாரும் எடுத்தவுடன் அதிரடியைத் தொடங்கினார். பவர்ப்ளே முடிவில் 66 ரன்களை அடித்திருந்தது இந்தியா. அதே ஆட்டமுறையை சற்றும் வேகம் குறையாமல் மிடில் ஓவர்களிலும் ஹூடா சூர்யா ஜோடி கடைபிடிக்கவே ரன்கள் வேகமாக வரத்தொடங்கின. 33 ரன்களில் ஹூடா ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தன் சமீபத்திய ஃபார்மை தொடரும் விதமாக சர்வதேச டி20களில் தன் முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். டெத் ஓவர்களில் இங்கிலாந்து அணியின் பௌலிங் சிறப்பாக இருக்கவே தன் இன்னிங்ஸை 198 ரன்களில் முடித்துக்கொண்டது இந்திய அணி.Jos Buttler
இங்கிலாந்து அணியில் புதிய முழுநேர கேப்டனான ஜோஸ் பட்லரும் ஜேசன் ராயும் ஒப்பனர்களாக களம் இறங்கினர். இந்தியா அணி பேட்டிங்கில் மட்டுமல்ல பவுலிங்கிலும் பவர்பிளேயை தன் வசமாக்கியது. பந்தை இரண்டு பக்கங்களும் ஸ்விங் செய்து இங்கிலாந்து வீரர்களையே திணறடித்தனர் புவனேஸ்வர் குமாரும் அர்ஷதீப் சிங்கும். இந்தியாவின் ஸ்விங் பவுலிங்கைத் தாக்குப்பிடிக்க இயலாமல் வரிசையாக பெவிலியன் திரும்பினர் இங்கிலாந்து வீரர்கள்.
பவர்ப்ளே முடிவில் 32-3 என்ற நிலையில் தவித்தது இங்கிலாந்து. தொடர்ந்து சீரிய இடைவெளியில் இங்கிலாந்து அணி தொடர்ந்து விக்கெட்டை இழக்கவே அவர்களால் கடைசி வரை போட்டிக்குள் வர முடியவில்லை. மொயின் அலியும், ஹார்ரி ப்ரூக்ஸ்சும் சிறிது நேரம் தாக்குப்பிடித்து சில ஷாட்ஸ்களை அடித்து இங்கிலாந்துக்கு நம்பிக்கையை கொடுத்தாலும் அதுவும் போதுமானதாக இல்லை. ஹர்திக் பேட்டிங்கில் மட்டும் இல்லாமல் பவுலிங்கிலும் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இறுதியில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து சுருண்டது இங்கிலாந்து. பேட்டிங் பீல்டிங் என்று இரண்டு இடங்களில் ஜொலித்தாலும் , பல கேட்ச்களை தவறவிட்டனர் இந்திய அணியினர். சிறப்பான பந்துவீச்சால் அந்த கேட்ச் டிராப்களால் பெரிய பாதிப்பு எதுவும் நிகழவில்லை.“ முதல் பந்திலிருந்தே பாசிட்டிவாக ஆடினோம். முதல் 6 ஓவர்களை கைப்பற்றுவதே இனி வரும் ஆட்டங்களிலும் எங்களின் திட்டமாக இருக்கும்” என்று போட்டியின் முடிவில் தெரிவித்தார் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா. இந்தியாவிற்காக அரைசதம் அடித்து 4 விக்கெட்களையும் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் ஹர்திக் பாண்டியா.
http://dlvr.it/STZtMm
0 Comments
Thanks for reading