இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5வது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்திருந்த சமயம் அது. இந்திய ரசிகர்கள் மத்தியில் ஒருவித கவலை தொற்றிக் கொண்டிருந்தது. அது இங்கிலாந்தின் அதிரடியான அணுகுமுறை கொடுத்த மிரட்சி என்றுகூட எடுத்துக் கொள்ளலாம். 'டெஸ்ட்டிலேயே இந்த அடி அடிக்கிறார்களே. டி20யிலெல்லாம் என்ன அடி அடிப்பார்கள்? இந்திய அணி எப்படி சமாளிக்கப்போகிறதோ?' என மிரண்டு போயிருந்தனர்.ஆனால், இந்திய ரசிகர்கள் பயந்த அளவுக்கு முரட்டுத்தனமான சம்பவங்கள் எதையும் இங்கிலாந்து நிகழ்த்திவிடவில்லை. முதல் இரண்டு போட்டிகளிலும் சத்தமே இல்லாமல் அடங்கியிருந்தனர். நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் மட்டும் கொஞ்சம் சீறியிருந்தனர். அதிலும், தோற்றாலும் பதிலுக்கு இந்தியா சார்பில் சூர்யகுமார் யாதவ் அடித்த அடி இங்கிலாந்தை மிரள வைத்துவிட்டது என்பதுதான் உண்மை.Malan
முதல் இரண்டு போட்டிகளையும் வென்று இந்திய அணி ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றி விட்ட நிலையில் மூன்றாவது போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றிருந்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. இந்தப் போட்டியில் பட்லர் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்துவிட்டார். இந்திய அணியில் ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், உம்ரான் மாலிக், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 215 ரன்களை எடுத்தது. ரவி பிஷ்னோய், ஹர்சல் படேல் இருவரையும் தவிர மற்ற இந்திய பௌலர்கள் அத்தனை பேரும் மானாவாரியாக அடி வாங்கியிருந்தனர். பவர்ப்ளேயிலேயே உம்ரான் மாலிக்கின் ஒரே ஓவரில் 17 ரன்களை பட்லர் சேகரித்துக் கொடுத்தார். ஆனாலும் பட்லர் நீண்ட நேரம் நிற்கவில்லை. ஆவேஷ் கானின் ஓவரில் ஸ்டம்பைப் பறிகொடுத்து வெளியேறினார்.மலானும் லிவிங்ஸ்டனுமே கூட்டணியாக நின்று அதிரடியாக இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் சேர்ந்து 84 ரன்களை எடுத்திருந்தனர். மலான் 77 ரன்களையும் லிவிங்ஸ்டன் 42 ரன்களையும் எடுத்திருந்தனர்.Virat Kohli
மலானின் விக்கெட்டை ரவி பிஷ்னோய் வீழ்த்தியிருந்தார். கடைசியில் ஹாரி ப்ரூக், ஜோர்டனுமே கூட அதிரடியாக ஆட இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 200 ஐ கடந்தது. ஆவேஷ் கான், உம்ரான் மாலிக், ஜடேஜா மூவரின் எக்கானமி ரேட்டுமே ஏறக்குறைய 11க்கு மேல் சென்றிருந்தது.
இந்திய அணி 216 ரன்களை நோக்கி சேஸிங்கைத் தொடங்கியது. பவர்ப்ளே வரை பார்க்கையில் இந்திய அணி மோசமாக தோற்கப்போகிறது என்னும் தோற்றமே உருவாகியிருந்தது. ரிஷப் பண்ட், கோலி, ரோஹித் என மூவருமே அவுட் ஆகியிருந்தனர். 6 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 34 மட்டுமே. இப்படி ஒரு சூழலிலிருந்துதான் சூர்யகுமார் யாதவ் தனது வித்தைகளை காட்ட ஆரம்பித்தார். ஸ்ரேயாஸ் ஐயருடன் கூட்டணி சேர்ந்து 119 ரன்களை எடுத்திருந்தார்.பெயருக்குதான் இது கூட்டணி. ஸ்ரேயாஸை ஒரு முனையில் வேடிக்கை பார்க்க வைத்துவிட்டு சூர்யகுமார் சாத்தியமான அத்தனை கோணங்களிலும் சுழன்றடித்தார். துளி கூட அச்சமின்றி இங்கிலாந்தின் அத்தனை பௌலர்களையும் சிதறடித்தார்.SKY
ஓவருக்கு ஓவர் பவுண்டரியும் சிக்ஸருமாகப் பறந்தது. சாத்தியமற்றதாகத் தெரிந்த இலக்கை நோக்கி இந்திய அணி வேகமாக முன்னேறியது. டேவிட் வில்லியின் ஓவரில் பவுண்டரி அடித்து சூர்யகுமார் யாதவ் சதத்தையும் நிறைவு செய்தார். போட்டி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியது. கடைசி 2 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 41 ரன்கள் தேவை. 19வது ஓவரை மொயீன் அலி வீசினார். முதல் மூன்று பந்துகளில் மட்டும் இரண்டு ஒயிடோடு சேர்த்து 16 ரன்களை சூர்யகுமார் சேர்த்தார். போட்டி இந்தியா பக்கம் திரும்புவதாக தெரிந்தது.இந்நிலையில்தான் துரதிர்ஷ்டவசமாக இதே ஓவரில் சூர்யகுமார் யாதவ் தன் விக்கெட்டை பறிகொடுத்தார். 55 பந்துகளில் 117 ரன்களை அடித்து சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இத்தோடு இந்தியாவிற்கான நம்பிக்கையும் தகர்ந்தது. இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
சூர்யகுமார் யாதவ் நின்றிருந்தால் இந்திய அணி வென்றிருக்கக்கூடும். சூர்யகுமார் எவ்வளவு சிறப்பாக ஆடினாலும் கடைசி வரை நின்று ஆட்டத்தை முடிக்கமாட்டார் என்னும் குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. அது இந்தப் போட்டியிலும் தொடர்ந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் தாக்குப்பிடித்திருந்தார் எனில் அவர் அடித்த சதத்திற்கு ஒரு மணி மகுடம் கிடைத்ததை போன்று இருந்திருக்கும். மேலும், சூர்யகுமாருடன் கூட்டணி அமைக்கிறேன் என ஸ்ரேயாஸ் ஆடிய மந்தமான ஆட்டமும் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. 23 பந்துகளில் 28 ரன்களைத்தான் அடித்திருக்கிறார். இதில் 2 சிக்ஸர்களும் அடக்கம். அதைத் தவிர்த்துவிட்டால் 21 பந்துகளில் 16 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். Shreyasசூர்யகுமார் சென்ற வேகத்திற்கு ஒரு தடையாகவே ஸ்ரேயாஸின் ஆட்டம் அமைந்திருந்தது. ஸ்ரேயாஸ் கொஞ்சம் வேகம் கூட்டியிருந்தால் கூட இந்திய அணி வென்றிருக்கும்.
இவையெல்லாம் இந்தப் போட்டியை பற்றிய குறைபாடுகள். இதைத் தவிர்த்துவிட்டு இந்தத் தொடரை உற்றுநோக்கினால் இந்திய அணிக்கு ஓரளவு நிறைவான தொடராகவே இது அமைந்திருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணியின் பந்துவீச்சு மெச்சத்தகுந்த வகையில் இருந்தது. ஸ்கோரை டிஃபண்ட் செய்து வென்றது அபாரம். பேட்டிங்கிலுமே சில குறைகள் இருந்தாலும் சமாளித்துவிட்டார்கள். சில பரிச்சார்த்த முயற்சிகளையும் செய்து பார்த்திருந்தார்கள். அந்தவகையில் இந்திய அணிக்கு இது ஒரு நல்ல தொடர்தான். அதேநேரத்தில், ஒரு சில கேள்விகளும் எழாமல் இல்லை.தீபக் ஹூடா இந்தச் சுற்றுப்பயணத்தில் மிகச்சிறப்பாக ஆடியிருக்கிறார். அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளில் 47 (29)*, 104 (57), இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 33 (17) என ஸ்கோர் செய்திருந்தார்.Deepak Hooda
மூன்றுமே தரமான இன்னிங்ஸ்கள். ஓப்பனிங்கிலும் அடித்திருக்கிறார். நம்பர் 3 யிலும் அடித்திருக்கிறார். இன்னும் கீழே இறக்கினாலும் ஸ்கோர் செய்யக்கூடிய திறனுடையவர்தான். ஆனால், இப்படியானவரை இரண்டாவது போட்டியில் கோலிக்காக ட்ராப் செய்தார்கள். மூன்றாவது போட்டியில் அணியில் எக்கச்சக்க மாற்றங்கள். ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளே வந்தார். தீபக் ஹூடா மீண்டும் பென்ச்சிலேயே இருந்தார். டிராவிட்டிடமோ ரோஹித்திடமோ மைக்கை நீட்டி இதைப்பற்றி கேட்டால் ஹூடா ட்ராப் செய்யப்படவில்லை. மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு அவருக்கு ஓய்வளித்திருக்கிறோம் என்பார்கள். இதில்தான் சிக்கலே எழுகிறது. உலகக்கோப்பைக்கு இன்னும் 100 நாள்கள் கூட இல்லை. இந்திய அணி இன்னமும் தங்களுடைய ஒரு பெஸ்ட் லெவனைத் தேர்ந்தெடுத்து முழுமையாக ஒரு தொடரை ஆடவில்லை. கடந்த உலகக்கோப்பைக்குப் பிறகு ஆடிய அத்தனை தொடரிலுமே இதே நிலைதான். கடைசிவரை இப்படியே பெஸ்ட் லெவனை டிக் அடிக்காமல் இருந்தால் உலகக்கோப்பை சமயத்தில் பெரும் குழப்பம் ஏற்படும்.சேவாக்அணிக்காக அதிரடியாக ஆடக்கூடிய எத்தனையோ இந்திய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். துரதிஷ்டவசமாக அவர்களெல்லாம் வெளியில் உட்காந்திருக்கிறார்கள். வீரர்கள் தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதே டி20 உலகக்கோப்பைக்கு உகந்ததாக இருக்கும்.
என முன்னாள் வீரர் சேவாக் கூறியிருக்கிறார்.
அதேமாதிரி, எடுக்கப்படும் பரிச்சார்த்த முயற்சிகளைப் பற்றியும் யோசித்தாக வேண்டும். ரிஷப் பண்ட் அடுத்தடுத்த தொடர்களிலும் ஓப்பனராகத் தொடர்வாரா இல்லையா? தொடரும்பட்சத்தில் ராகுல், இஷன் கிஷன் போன்றோருக்கெல்லாம் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? இதெல்லாம் மிகப்பெரிய கேள்வியாக எஞ்சி நிற்கிறது.SKYஇந்த உலகக்கோப்பைதான் இலக்கு எனில் இந்திய அணி தங்களின் பெஸ்ட் லெவனைக் கட்டமைக்கும் வேலையில் இப்போதே இறங்க வேண்டும். இல்லை 2024 டி20 உலகக்கோப்பைதான் இலக்கெனில், ஒன்றும் அவசரமில்லை. இதே வேகத்திலேயே பொறுமையாகத் தொடரலாம்!
http://dlvr.it/STh97N
0 Comments
Thanks for reading