Champions League: ரியல் மாட்ரிட் - எத்தனை முறை எரிந்தாலும் எழுந்து வரும் ஃபீனிக்ஸ்!

ரியல் மாட்ரிட் - கால்பந்து உலகை மிதப்பிலேயே வைத்துக்கொண்டிருக்கிறது. இவர்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் ஒரு முரட்டுத்தனமான கமர்ஷியல் படத்தைப் பார்ப்பதைப் போலவே இருக்கிறது. சாம்பியன்ஸ் லீக் தொடரில் தொடர்ந்து தோல்வியின் விளிம்பில் இருந்த அந்த அணி, தற்போது மீண்டு வெற்றியை அபகரித்துக்கொண்டிருக்கிறது. அதுவும் தொடர்ந்து மூன்று போட்டிகளாக! பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், செல்சீ, மான்செஸ்டர் சிட்டி என மூன்று பெரும் அணிகளுக்கும் அப்படி அதிர்ச்சியளித்திருக்கிறது ரியல் மாட்ரிட். இந்த வாரம் நடந்த சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் முழு கன்ட்ரோலில் இருந்தது மான்செஸ்டர் சிட்டி. முதல் லெக்கில் 4-3 என வெற்றி பெற்றிருந்த அந்த அணி, இரண்டாவது லெக்கின் 90-வது நிமிடத்தில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. 2 கோல்கள் முன்னிலை. ஸ்டாப்பேஜ் டைமைக் கடத்தினால் போதும். அதையெல்லாம் விட, அந்த 90 நிமிடங்களில் ரியல் மாட்ரிட் ஒரு ஷாட் ஆன் டார்கெட் கூட வைத்திருக்கவில்லை. ஆனால், அடுத்த ஒரு நிமிடத்தில் இரண்டு ஷாட்கள், இரண்டு கோல்கள். போட்டி சமனாகி கூடுதல் நேரத்துக்குச் செல்ல, அதிலும் மூன்றாவது நிமிடத்திலேயே ஒரு கோல். 11 நிமிட இடைவெளியில் 3 கோல்கள் அடித்து கம்பேக் கொடுத்தது அந்த அணி. இந்தப் போட்டியில் மட்டுமல்ல. செல்சீக்கு எதிரான காலிறுதியின் 80-வது நிமிடம் வரை ஒரு கோல் பின்தங்கியிருந்தது ரியல் மாட்ரிட். ஆனால், அடுத்த 16 நிமிடங்களில் 2 கோல்கள் அடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது. சொல்லப்போனால், காலிறுதிக்குள் நுழைந்த கதையுமே இப்படித்தான். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கெதிரான round of 16 போட்டியில், கடைசி 30 நிமிடத்துக்கு முன்பு வரை 2 கோல்கள் பின்தங்கியிருந்தது அந்த அணி. ஆனால், 18 நிமிட இடைவெளியில் 3 கோல்கள் அடித்து மெஸ்ஸி அண்ட் கோ-வை வெளியேற்றியது. இப்படி இந்த சீசனின் ஒவ்வொரு சுற்றிலும் அட்டகாசமான கம்பேக்குகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது ரியல் மாட்ரிட். ஒவ்வொரு போட்டியின்போதும் அந்த அணி அவ்வளவுதான் என்று நினைத்தால், ஃபீனிக்ஸ் பறவையைப்போல் நெருப்பிலிருந்து எழுந்து வந்துவிடுகிறது. மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது ஃபேன்டஸி போலத் தெரியலாம். ஆனால், ரியல் மாட்ரிட் அணிக்கு இதுவொன்றும் புதிய விஷயமில்லை. சாம்பியன்ஸ் லீக் அரங்கில் இப்படி பல முறை வெற்றி பெற்றிருக்கிறார்கள். வெற்றியின் உச்சிப் படியில் நின்றிருந்த எதிரணிகளை, ஒற்றை நொடியில் கீழே தள்ளியிருக்கிறார்கள்.Real Madrid vs PSG 2014. தங்கள் டெர்பி ரைவல் அத்லெடிகோ மாட்ரிட்டுக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் பைனல். ஆட்டம் ஸ்டாப்பேக் டைமுக்குச் செல்லும்போது 1 கோல் பின்தங்கியிருந்தது ரியல் மாட்ரிட். எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். அதுவும் அரணாய் நிற்கும் சிமியோனின் அணிக்கெதிராக கடைசி நொடிகளில் மட்டும் முடிந்திடுமா என்ன? ஆனால், ரியல் மாட்ரிட் அதை முடித்துக் காட்டியது. ஸ்டாப்பேஜ் டைமின் மூன்றாவது நிமிடத்தில் ரமோஸ் கோலடித்து ஆட்டத்தை எக்ஸ்ட்ரா டைமுக்கு எடுத்துச் செல்ல, அந்த 30 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து அசத்தலாக ஆட்டத்தை முடிந்தது ரியல்! இப்படி எத்தனையோ போட்டிகளில் ஆட்டத்தை மாற்றியிருக்கிறது அந்த அணி. ஆனால், இந்த வெற்றி கொண்டாடப்படவேண்டியதற்கான முக்கியக் காரணம், இப்போது இருக்கும் அணி முந்தைய அணிகளைப் போன்றது அல்ல. செர்ஜியோ ரமோஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற ஆளுமைகள் இல்லை. மார்செலோ, மோட்ரிச் போன்றவர்களுக்கு வயதாகிவிட்டது. ஒருவரால் ஆட்டத்தைத் தொடங்கவே முடியவில்லை. ஒருவரால் முடிக்க முடியவில்லை. இப்படி ஒரு அணிதான் மில்லியன்கள், இல்லை பில்லியன்கள் மதிப்பு மிக்க... இளம் வீரர்களும், சூப்பர் ஸ்டார்களும் நிறைந்த அணிகளை புரட்டி எடுத்திருக்கிறது. மான்செஸ்டர் சிட்டி அணிக்கெதிரான போட்டியை முடித்த 11 வீரர்களைப் பார்த்தால், அது ரியல் மாட்ரிட் அணியைப் போலவே தெரியாது. கோர்ட்வோ, லூகாஸ் வஸ்கீஸ், டேனி கர்வகால், நாசோ, ஜீசஸ் வலேஹோ, ஃபெர்லாண்ட் மெண்டி, கமவிங்கா, டேனி சபயோஸ், ஃபெடரிகோ வெல்வர்டே ராட்ரிகோ, அசான்சியோ போன்றவர்கள்தான் அந்த ஆட்டத்தை முடித்தவர்கள். கார்லோ ஆன்சலோடி இந்த அணியை சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.Carlo Ancelloti காயத்தால் டேவிட் அலாபா இந்தப் போட்டியில் ஆடவே இல்லை. எடர் மிலிடோ, கடைசி சில நிமிடங்கள் காயத்தால் ஆடவில்லை. ஆனால், அதையெல்லாம் இந்த அணி கடந்து வந்திருக்கிறது. பென்சிமா எனும் தங்க முட்டையிடும் வாத்தையும், அவருக்கு உறுதுணையாய் இருக்கும் வினிசியஸ் ஜூனியரையும் மையமாக வைத்து அவர்கள் அட்டாக்கை வடிவமைத்தார் டான் கார்லோ. கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளையும் பக்காவாக இவர்கள் கோலாக்க, எதிரணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தடமாறுகின்றன. இந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு முன்பு முன்னாள் ஆர்செனல் பயிற்சியாள ஆர்சென் வெங்கர் அதைத்தான் கூறியிருந்தார்: "இந்த ரியல் மாட்ரிட் அணி குறைந்த வாய்ப்புகளைத்தான் உருவாக்குகிறது. ஆனால், அதை அவர்களால் கோலாக்க முடிகிறது. அதைத்தான் அவர்கள் சிட்டிக்கு எதிராக செய்யவேண்டும்" என்றார். அதைப் போலவே, கிடைத்த கிடைத்த முதல் 3 வாய்ப்புகளையும் கோலாக்கி ஆட்டத்தை மாற்றியது அந்த அணி.Karim Benzema இந்தப் போட்டிக்குப் பின்பு வெங்கர் சொன்ன விஷயம் இது: "ஒவ்வொரு போட்டிக்குப் பின்பும், என்ன பிரச்னை நடந்தது என்று நாங்கள் நிறைய ஆராய்வோம். ஆனால், இந்த மாட்ரிட் அணிக்கு ஒவ்வொரு பிரச்னைக்குமான பதில் உடனே கிடைத்துவிடுகிறது" என்றார். அதனால்தான் 13 முறை சாம்பியன்ஸ் லீகை வென்றிருக்கிறது ரியல் மாட்ரிட். அந்தப் பதில் கிடைப்பதால், இது சாத்தியம் ஆகியிருக்கலாம். இல்லையெனில், இதுவே பதிலாகவும் இருக்கலாம்!
http://dlvr.it/SPv7mb

Post a Comment

0 Comments