"சர்வதேச கிரிக்கெட்டில் இடம் பெறாத வீரர்கள் ரூ.7-10 கோடி பெறுகிறார்கள்!" - யுவராஜ் சிங் ஆதங்கம்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங், டி20 போட்டிகளால் டெஸ்ட் கிரிக்கெட் இறந்து கொண்டிருக்கிறது என்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இடம் பெறாத வீரர்கள்கூட ரூ.7-10 கோடி சம்பளம் பெறுகிறார்கள் என்றும் பேசியுள்ளார். மேலும் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கான காரணம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பேசிய யுவராஜ் சிங், "டெஸ்ட் கிரிக்கெட் இறந்து கொண்டிருக்கிறது. மக்கள் டி20 கிரிக்கெட் பார்க்க விரும்புகிறார்கள்; மக்கள் டி20 கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறார்கள். ஐந்து நாள் கிரிக்கெட் விளையாடி ஐந்து லட்சம் ரூபாய் வாங்கியவர், இன்று ஒரு டி20 கிரிக்கெட் போட்டி விளையாடி ரூ.50 லட்சம் வாங்குகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இடம் பெறாத வீரர்கள்கூட ரூ.7-10 கோடி பெறுகிறார்கள். டி20 ஆட்டத்தைப் பார்த்துப் பழகியவர்களுக்கு 50 ஓவர் ஆட்டத்தைப் பார்க்கும்போது 50 ஓவர் ஆட்டம் ஒரு டெஸ்ட் போட்டி போன்று தெரிகிறது. 20 ஓவர்களுக்குப் பிறகு இன்னும் 30 ஓவர்கள் இருக்கின்றனவா என்று சலிப்பாகக் கூறுகிறார்கள். எனவே, நிச்சயமாக டி20 எல்லாவற்றையும் நீர்த்துபோகச் செய்கிறது" என்று கூறினார். யுவராஜ் சிங் மேலும் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கான காரணம் குறித்தும் பேசிய அவர், "2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்றபோது, எங்கள் ஒவ்வொருவருக்கும் நிலையான பேட்டிங் ஆர்டர் என்று ஒன்று இருந்தது. அதன் பிறகு வந்த 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின்போது நிலையான பேட்டிங் ஆர்டர் இல்லை. இந்தக் குறையை சரி செய்யாமலேயே அவர்கள் உலகக் கோப்பையில் பங்கேற்றனர். 2003 உலகக் கோப்பையின்போது முகமது கைப், மோங்கியா, நான் (யுவராஜ்) ஆகிய மூவரும் கிட்டத்தட்ட 50 போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் உள்ளவர்களாக இருந்தோம். மிடில் வரிசையில் இருக்கும் பிரச்னையை சரிசெய்யாமல் இருப்பதால்தான், இந்திய அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
http://dlvr.it/SPxdPJ

Post a Comment

0 Comments