El clasico of ஐபிஎல் என விதந்தோதப்படும் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. போட்டியின் முதல் ஒரு மணி நேரத்தை பார்த்தவர்களுக்கு இது ஒரு சுமாரான போட்டியாக முழுக்க முழுக்க மும்பை அணி ஆதிக்கம் செலுத்தி வெல்லப்போகும் போட்டியாகவே தோன்றியிருக்கும். ஆனால், ருத்துராஜ் கெய்க்வாட் அனைவரின் நினைப்பையும் பொய்யாக்கியிருந்தார்.மும்பை அணி எளிதாக வெல்லும் என கணிக்கப்பட்ட போட்டியை அப்படியே தலைகீழாக மாற்றி சென்னை பக்கம் திருப்பினார்.ருத்துராஜ் கெய்க்வாட்
டுப்ளெஸ்சி, மொயீன் அலி, தோனி, ரெய்னா, அம்பத்தி ராயுடு என சீனியர் வீரர்கள் அத்தனை பேரும் மும்பை அணியின் பந்துவீச்சாளர்களிடம் சிக்கி திணற, இளம் வீரரான ருத்துராஜ் மட்டும் நாடி நரம்பு முறுக்க முறுக்க ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை எப்படி ஆடினார்?
நேற்று மும்பைக்கு எதிரான சென்னையின் இன்னிங்ஸின் முதல் மற்றும் கடைசி பந்துகளை எதிர்கொண்டவர் ருத்துராஜ்தான். டிரென்ட் போல்ட்டின் முதல் பந்தை டாட் பாலாகத் தொடங்கியவர், பும்ராவின் கடைசிப்பந்தை சிக்ஸராக்கி முடித்தார்.
ருத்துராஜை பொறுத்தவரைக்கும் ஒரு தொடரில் எப்போதுமே முதல் இரண்டு மூன்று போட்டிகளை செட் ஆவதற்கும் ஃபார்முக்கு வருவதற்கும் எடுத்துக் கொள்வார். அப்படியே ஷேன் வாட்சன் ஸ்டைல்தான். ஆம், இன்ஜின் சூடு பிடிக்க பிடிக்க ஆட்டமும் வேகம் எடுக்கும். 2020 சீசனில் அவர் ஆடிய முதல் மூன்று போட்டிகளில் 0,5,0 என்றே ஸ்கோர் செய்திருந்தார். ஆனால், அடுத்த மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த சீசனின் முதல் பாதியிலும் அப்படியே. முதல் மூன்று போட்டிகளில் 5,5,10 என்றே ஸ்கோர் செய்திருந்தார். ஆனால், அடுத்த நான்கு போட்டிகளில் இரண்டு அரைசதங்களை அடித்திருந்தார். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய சீசன் போல ஐபிஎல்-ன் இரண்டாம் பாதி தொடங்கியிருப்பதால் இங்கேயும் முதல் ஒன்றிரண்டு போட்டிகளை செட் ஆவதற்காக எடுத்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்தது வேறு. முதல் போட்டியிலேயே ராக்கெட் வேகத்தில் ஃபார்முக்கு வந்திருக்கிறார் ருத்துராஜ்.
முதல் 6 ஓவர்கள் சென்னை அணிக்கு பயங்கர திகிலாக அமைந்திருந்தது. டுப்ளெஸ்சி, மொயீன் அலி, தோனி, ரெய்னா என முக்கியமான சீனியர்கழ் எல்லாமே அவுட். ட்ரென்ட் போல்ட்டும் ஆடம் மில்னேவும் பந்தை வைத்து வித்தை காண்பித்துக் கொண்டிருந்தனர். மில்னேவின் மிரட்டலான பந்தில் மணிக்கட்டில் அடிபட்டு அம்பத்தி ராயுடு ரிட்டயர் ஹர்ட் ஆகியிருந்தார். ராயுடு வாங்கிய அடி, வரிசையாக வீழ்ந்த விக்கெட்டுகள் என அத்தனையையும் இன்னொரு எண்ட்டில் நின்று வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு ருத்துராஜுக்கு கிடைத்திருந்தது.ருத்துராஜ் கெய்க்வாட்மும்பை அணியின் மிரட்டலும் சென்னை அணியின் மற்ற வீரர்களின் வீழ்ச்சியும் ருத்துராஜை சலனப்படுத்தியிருக்க வேண்டும். அவரின் சமநிலையை குலைத்து அவரையும் வீழ்ச்சி பாதையில் இழுத்து போட்டிருக்க வேண்டும். ஆனால், ருத்துராஜ் கெய்க்வாடுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஏனெனில், அவரின் சமநிலை தவறா மனோதிடம் இந்த சூழலை விட சக்திமிக்கதாக அமைத்திருந்தது. அதன்விளைவாகவே, தோனி உள்பட ஒட்டுமொத்த சீனியர்களும் பொறுப்பற்ற ஷாட்டை ஆடி அவுட் ஆன போதும் ருத்துராஜ் மட்டும் நிதானம் தவறாமல் தேவையற்ற ஷாட்டை ஆடி விக்கெட்டை விடாமல் பவர்ப்ளேயை கடந்தார்.
ஐபிஎல்-ன் முதல் பாதியில் பவர்ப்ளேயில் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் ருத்ராஜ் கெய்க்வாட்டே. மிடில் ஓவர்களில் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருக்கும் பேட்ஸ்மேனும் அவரே. இந்த புள்ளிவிவரமே ருத்துராஜ் ஆட்டமுறையை விளக்கிவிடுகிறது. அதாவது, முதலில் மெதுவாக தொடங்கி, பின்னர் செட்டில் ஆகி, மிடில் ஓவரில் ஸ்பின்னர்கள் வந்தவுடன் அடித்து ஆட தொடங்க வேண்டும். இதுவே எப்போதும் ருத்துராஜின் கேம் ப்ளானாக இருக்கிறது. நேற்றும் அதே கேம்ப்ளான்தான். வரிசையாக வீழ்ந்த விக்கெட்டுகள், பதற்றமான சூழல், அழுத்தம் இது எதுவுமே ருத்துராஜின் வழக்கமான கேமை பாதிக்கவில்லை.முதல் 30 பந்துகளில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 87 மட்டுமே. அடுத்த 30 பந்துகளில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 200+. ருத்துராஜ் ருத்துராஜாகவே ஆடினார்.
பவர்ப்ளேயில் அமைதி காத்த ருத்துராஜ், பவர்ப்ளே முடிந்த பிறகு பும்ரா, பொல்லார்ட் வீசிய ஓவர்களிலும் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் சிங்கிள் தட்டவே முயன்றார். 7-11 இந்த நான்கு ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட வரவில்லை. ஸ்பின்னர்கள் உள்ளே வந்தவுடன்தான் தன்னுடைய வேலையை காட்டத் தொடங்கினார் ருத்துராஜ்.ருத்ராஜ் கெய்க்வாட்
க்ரூணால் பாண்ட்யா வீசிய 12-வது ஓவரில் டவுண் தி ட்ராக் இறங்கி வந்து ஒரு ஸ்ட்ரெயிட் சிக்சரை விளாசினார். அதே ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி இன்னொரு பவுண்டரியையும் அடித்தார். ருத்துராஜின் வேட்டை அந்த ஓவரிலிருந்தே தொடங்கியது. அடுத்தடுத்து எல்லா ஓவர்களிலும் பவுண்டரி மழைதான். பேக் ஃபுட், ஃப்ரண்ட் ஃபுட் என இரண்டு விதமான ஷாட்களிலும் வலுவாக இருப்பதால் பௌலர்கள் சரியான லென்த்தை பிடிக்க விடாமல் திணற வைத்தார். க்ரீஸுக்குள் காலை ஊன்றி பின்னங்காலில் வேகப்பந்து வீச்சாளர்களை அடித்த அடி தோனி, ரஸல் போன்ற பிக் ஹிட்டர்களுக்கு இணையான பவரோடு இருந்தது.
ஆடம் மில்னே, சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்து முடிந்த The Hundred தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். எக்கானமி 4.6 மட்டுமே. மில்னே நேற்று தனது ஷார்ட் பால்கள் மூலம் சென்னை அணியை கடுமையாக திணறடித்திருந்தார். மொயீன் அலி, தோனி இருவருமே மில்னேவின் ஷார்ட் பால்களுக்கே விக்கெட்டை விட்டிருந்தனர். அம்பத்தி ராயுடு மில்னேவின் ஷார்ட் பாலில் திணறிப்போய்தான் கையில் அடிபட்டு ரிட்டயர் ஹர்ட் ஆனார். ஆனால், 140+ வேகத்தில் மில்னே வீசிய ஷார்ட் பால்களால் ருத்துராஜை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை. பவர்ப்ளேயிலேயே மில்னேவின் ஷார்ட் பாலை மடக்கியடித்து பவுண்டரியாக்கி பதிலடி கொடுத்தார்.
டெத் ஓவர்களில் பும்ராவும், போல்ட்டும் கூட ருத்துராஜிடம் பயங்கர அடி வாங்கியிருந்தனர். யார்க்கராக வீச முயன்று இருவரும் லோ ஃபுல் டாஸாகவே வீசிக்கொண்டிருக்க, ருத்துராஜோ ஸ்பின்னர்களை அடிப்பது போல முட்டி போட்டு மடக்கி அடித்து சிக்சராக்கிக் கொண்டிருந்தார். இன்னிங்ஸின் கடைசி பந்திலும் பும்ரா ஒரு லோ ஃபுல் டாஸைத்தான் வீசியிருப்பார். அதை மடக்கி சிக்சராக்கி சென்னை அணியின் இன்னிங்ஸை அட்டகாசமாக முடித்து வைத்தார் ருத்துராஜ்.ருத்துராஜ் கெய்க்வாட்
100 ரன்களை தொடுவதே கடினம் என்ற பரிதாபகரமான நிலையிலிருந்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 156 ரன்களை எடுத்திருந்தது. காரணம், ருத்துராஜ் கெய்க்வாட். 58 பந்துகளில் அவர் அடித்த 88 ரன்கள் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸாக அமைந்திருந்தது. பதற்றமில்லாமல் சமநிலையை பேணியது, தன்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆடியது, சரியான நேரத்தில் சரியான டைமிங்கில் ஷாட்கள் ஆடியது போன்றவையே ருத்துராஜின் வெற்றிகரமான இன்னிங்ஸுக்கு காரணமாக அமைந்திருந்தது. இந்த வெற்றி மூலம் சென்னை அணியும் புள்ளிப்பட்டியலின் உச்சத்துக்குச் சென்றுள்ளது.
2020 சீசனில் இதே ஐக்கிய அரபு நாடுகளில் முதல் மூன்று போட்டிகளில் ருத்துராஜ் சொதப்பியதுமே ருத்துராஜை மறைமுகமாகக் குறிப்பிட்டு இளம் வீரர்களிடம் தான் எதிர்பார்த்த ஸ்பார்க் இல்லை என்றார் தோனி. அப்படி சொன்ன தோனியே மிரளும் அளவுக்கு அடுத்து கிடைத்த வாய்ப்பில் அரசதமாக அடித்து நொறுக்கியவர், விட்டுப்போன ஃபார்மை இந்த 2021-லும் தொடர்கிறார்.ருத்துவுக்கு ஒரு பெரிய விசில் போடுங்க!
http://dlvr.it/S7y1WL
0 Comments
Thanks for reading