EURO 2020 : இங்கிலாந்தின் 'ஈ சாலா கப் நம்தே' மொமன்ட்… இறுதிப்போட்டியில் இத்தாலியுடன் சம்பவம்!

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸுக்கு ‘ஈ சாலா கப் நம்தே’ என்கிற கோஷம் என்றால், இங்கிலாந்துக்கு ‘Its coming home this time’. 1966-ல் கால்பந்து உலகக்கோப்பையை வென்றபிறகு கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக ஒரு கால்பந்து கோப்பைக்காக போராடி வருகிறது இங்கிலாந்து. உலகக்கோப்பை, யூரோ கோப்பை என ஒவ்வொரு தொடர் ஆரம்பிக்கும்போதும் இந்தமுறை கப் நம் ஊருக்கு வந்துவிடும் எனப் பாட ஆரம்பிப்பார்கள் இங்கிலாந்து ரசிகர்கள். ஆனால், கோப்பை வராது. இந்தமுறை அப்படியாகாது என பெரும் நம்பிக்கையோடு இருக்கிறது இங்கிலாந்து. முதல்முறையாக யூரோ கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து ரசிகர்களின் அந்த நம்பிக்கையை தக்க வைத்திருக்கிறது இங்கிலாந்து கால்பந்து அணி. ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து, இத்தாலியை வீழ்த்தி விட்டால் உண்மையிலேயே ‘Its coming home’ மொமன்ட்தான். இன்று அதிகாலை நடந்த யூரோ கோப்பை இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கை சந்தித்தது இங்கிலாந்து. டேனிஷ் Vs இங்க்லீஷ் என இரண்டு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்ல, உலகக் கால்பந்து ரசிகர்களும் முட்டிமோதினார்கள். சிவப்பும், வெள்ளைக்கும் நடந்த யுத்தத்தில் என்ன நடந்தது?! இங்கிலாந்து அதிரடியாக ஆடும் என எல்லோரும் எதிர்பார்க்க இங்கிலாந்தையே ஆரம்பத்தில் திணறடித்தது டென்மார்க். மைக்கேல் டாம்ஸ்கார்ட் டென்மார்க்கிற்கான முதல் கோலை அடித்தார். ஃப்ரீ கிக்கில் அவர் அடித்த கோல் இங்கிலாந்து வீரர்களையே ஆட்டம் காண வைத்தது. ஆனால், இந்த சம்பவத்துக்குப் பிறகு எதிர்த்து எகிறி அடிக்க ஆரம்பித்தார்கள் இங்கிலாந்து வீரர்கள். அடுத்த 10 நிமிடங்களுக்குள்ளாகவே ஈக்குவலைசர் கோல் அடிக்கப்பட்டது. ஆனால், இது டென்மார்க்கின் ஓன் கோல் என்பதுதான் டென்மார்க் ரசிகர்களுக்கான துயரம்.இங்கிலாந்து ரசிகர்கள் இரண்டாவது பாதி முழுக்க இரண்டாவது கோலை அடித்துவிடவேண்டும் எனத் துடித்தது இங்கிலாந்து. பெரும்பான்மையான நேரம் டென்மார்க்கின் கோல் போஸ்ட் பக்கமே ஆட்டம் இருந்தது. டென்மார்க் கோல் கீப்பர் காஸ்ப்பர் ஷிமைக்கல் செம பிஸியாகவே இருந்தார். இங்கிலாந்தின் பல கோல் முயற்சிகளை ஒற்றை ஆளாக தடுத்தி நிறுத்தினார் ஷிமைக்கல். இதனால் ஆட்டம் 1-1 என முடிந்து எக்ஸ்ட்ரா டைம் கொடுக்கப்பட்டது. இதில் பெனால்ட்டி கிக் வாய்ப்பு இங்கிலாந்துக்குக் கிடைக்க பந்து கேப்டன் ஹேரி கேன் கால்களுக்குப் போனது. ஹேரி கேன் உதைத்தப்பந்தை ஷிமைக்கல் அற்புதமாக தடுத்தார். ஆனால், அவர் கையில் இருந்து பந்து திரும்ப ஹேரி கேனை நோக்கிவர வேகமாக ஓடிச்சென்று அதை மீண்டும் கோல் போஸ்ட்டுக்குள் உதைத்தார் ஹேரி கேன். இங்கிலாந்து 2-1 என வென்றது.ஹேரி கேன்சவுத்கேட் - இங்கிலாந்து பயிற்சியாளர் ஹேரி கேன் அடித்த கோல் யூரோ கோப்பை வரலாற்றில் இங்கிலாந்தின் 50-வது கோல் என்பதோடு, இங்கிலாந்துக்காக உலகக்கோப்பை, யூரோ கோப்பைகளில் கேன் அடித்த 10-வது கோல் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இங்கிலாந்துக்காக பெரிய தொடர்களில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கேரி லிங்கரின் 10 கோல் சாதனையை சமன் செய்திருக்கிறார் ஹேரி. இறுதிப்போட்டியில் இன்னும் ஒரு கோல் அடித்தால் கேன் இங்கிலாந்தின் ஆல் டைம் கிரேட்டாக உயர்வார். லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் வரும் ஞாயிறு இரவு இத்தாலியை சந்திக்க இருக்கிறது இங்கிலாந்து. இந்த யூரோ கோப்பை தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத அணிகளாக இத்தாலி, இங்கிலாந்து என இரண்டு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கின்றன. இறுதிப்போட்டியில் வெல்லப்போவது இங்கிலாந்தா, Its coming home or its going from home- ஆ என்பது இந்திய நேரப்படி திங்கள் அதிகாலை தெரிந்துவிடும்!
http://dlvr.it/S3LSfZ

Post a Comment

0 Comments