
ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக பாய்மரப்படகுப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் ஒரேநேரத்தில் பங்கேற்கின்றனர். அவர்களில் முதல் ஆளாக, நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர் நேத்ரா குமணன்.
தொழில்முறை பாய்மரப்படகுப் போட்டியில் பங்கேற்கும் 23 வயது நேத்ரா குமணன் சென்னையை சேர்ந்தவர். சிறு வயதில் கோடைக்கால பயிற்சியாக பாய்மரப்படகு செலுத்துதலை கற்ற அவர், பின்னாளில் சர்வதேச அளவில் சாதிக்கத் தொடங்கினார்.
2014 ஆம் ஆண்டிலும், 2018-ஆம் ஆண்டிலும் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் போட்டியிட்டு இருக்கிறார் நேத்ரா. இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் புதிய வரலாறை எழுதினார் அவர். அமெரிக்காவின் மயாமியில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார் அவர். இதன் மூலம் உலகக்கோப்பையில் பதக்கம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் பாய்மரப்படகு போட்டி வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார் அவர். 2021ல் ஓமனில் நடைபெற்ற ஆசிய தகுதிப் போட்டியில் தேர்வு பெற்றதன் மூலம் இந்தியா சார்பில் ஒலிம்பிக் மகளிர் பாய்மரப் படகு போட்டியில் பங்கு பெறும் முதல் பெண் வீராங்கனை என்கிற பெருமையை பெற்றுள்ளார் நேத்ரா குமணன். இதற்கான நேத்ராவின் யுக்தி பற்றி விவரிக்கிறார் அவரது தந்தை.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.டெக். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்ற நேத்ரா குமணன், ஸ்பெயின் அருகேயுள்ள கேனரி தீவுகளில் பயிற்சியெடுத்து தம் திறமையை மேம்படுத்தினார். லேசர் ரேடியல் கிளாஸ் எனும் பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர். லேசர் பிரிவு என்பது சிறிய ரக படகில் கொடிமரம் கட்டப்பட்டு, ஒருவர் மட்டும் கடல் காற்றில் பயணிப்பது.
இந்த வகை படகு 1970-ல் ப்ரூஸ் கிர்லாக் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. வரும் 12 -ம் தேதி டோக்யோ புறப்படும் நேத்ரா, ஒலிம்பிக் பாய்மர படகு போட்டி நடைபெறும் யோனோஷிமா யாட் துறைமுகத்திற்கு செல்கிறார். தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 7 பேரில் நேத்ராவும் ஒருவர். தாய்நாட்டில் பல கோடி பேரின் வாழ்த்துகளோடு, நம்பிக்கை ஊற்றாய் இந்தியாவிற்காக பசிபிக் பெருங்கடலில் கடலாட உள்ளார் நேத்ரா. இவர், டோக்யோ ஒலிம்பிக்கில் லேசர் ரேடியல் கிளாஸ் பிரிவில் ஒரு புதிய வரலாறை எழுத வாய்ப்புள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jGHhtQ
via IFTTT
0 Comments
Thanks for reading