ரத்தத்தில் ஊறிய மல்யுத்த தாகம்: தந்தையின் கனவை நனவாக்கும் உந்துதலில் அன்ஷு மலிக்!

தந்தை சாதிக்க விரும்பி அவரால் முடியாமல் கலைந்து போன அந்தக் கனவை நனவாக்க லட்சிய மகளாக டோக்கியோ செல்கிறார் இளம் மல்யுத்த வீராங்கனை அன்ஷு மலிக்.

19 வயதாகும் அன்ஷு மலிக், ஹரியானவின் நிதானி பகுதியைச் சேர்ந்தவர். அவரது தந்தை தரம்வீர் சிங்கும் மல்யுத்த வீரரே. மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் பணியாற்றிய தரம்வீர் சிங் சர்வதேச போட்டி ஒன்றிலும் பங்கேற்றிருக்கிறார். ஆனால் காயம் காரணமாக அவரால் தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனது. 

தந்தையின் லட்சியத்தை தற்போது அன்ஷு பூர்த்தி கொண்டிருக்கிறார். 12 வயதில் அன்ஷு-வுக்கு மல்யுத்த விளையாட்டின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. மல்யுத்தத்தில் சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்ற தமது தந்தையின் கனவு நிறைவேறாமல் போனது குறித்து, தமது பாட்டியிடம் கவலைப்பட்டிருக்கிறார். 

விளைவு, தாமே கோதாவில் இறங்க முடிவெடுத்தார். 2012-ஆம் ஆண்டு தமது இளைய சகோதரர் சுபம் உடன் இணைந்து நிதானி விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சியெடுக்கத் தொடங்கினார். சக வீரர்களுக்கு தம்மகள் சளைத்தவர் அல்ல என்பதை 6 மாதங்களிலேயே தந்தை தரம்வீர் சிங் உணரத் தொடங்கினார். 

முதலில் மகன் சுபத்தை மல்யுத்த நாயகனாக மாற்ற முயற்சித்த தரம்வீர் பின்னர் முடிவை மாற்றிக் கொண்டார். தம்மை விட 3, 4 ஆண்டுகள் கூடுதலாக பயிற்சி பெற்ற வீராங்கனைகளை அன்ஷு எளிதில் வீழ்த்தியதை கண்ட தரம்வீர் தம் முழு கவனத்தையும் மகள் மீது திரும்பினார். 

அதன்பலனாக, ஜுனியர் பிரிவு போட்டிகளில் அன்ஷு சாதிக்கத் தொடங்கினார். இதனைத்தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கத்தை வென்றார். 

தொடர்ந்து இந்தாண்டு தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். இதுதவிர்த்து பெல்கிரேடில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருக்கிறார். முதல் ஒலிம்பிக் பதக்கத்தை குறிவைத்து டோக்கியோ செல்கிறார் அன்ஷு, லட்சிய மகளாக.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3AsfAer
via IFTTT

Post a Comment

0 Comments