சஞ்சீவ் ராஜ்புத்தின் 'ஒலிம்பிக்' குறி...- ஒரு மாலுமி 'துப்பாக்கிச் சுடுதல்' வீரர் ஆன கதை

ஒலிம்பிக் போட்டிகளில் மூன்றாவது முறையாக பங்கேற்கும் துப்பாக்கிச்சுடுதல் வீரர் சஞ்சீவ் ராஜ்புத், முதன்முறையாக பதக்கம் வெல்லும் முனைப்பில் இருக்கிறார். 50 மீட்டர் 3 பிரிவு போட்டியில் பங்கேற்கும் அவரது வாழ்க்கை களத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம்.

நின்றவாறு, முழங்கால் இட்டபடி, தரையோடு தரையாக படுத்தபடி என மூன்று நிலைகளில் இருந்து இலக்கை குறிவைக்கும் போட்டிதான் ரைஃபிள் 3P போட்டி. இந்தப் பிரிவில் பங்கேற்கும் 40 வயது வீரரான சஞ்சீவ் ராஜ்புத் மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சிறப்பை பெறுகிறார். ஆனாலும் அவரது தங்கக்கனவு வருடக்கணக்கில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில், 50 மீட்டர் ரைஃபிள் ப்ரோன் பிரிவில், இறுதிச்சுற்றுக்கு முன்னேற தவறிவிட்டார். 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 50 மீட்டர் ரைஃபிள் 3 P பிரிவில் பங்கேற்ற அவர், இந்த முறையும் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறவில்லை. 

ஹரியானாவில் உள்ள சிறிய நகரமான ஜகத்ரி என்ற இடத்தில் பிறந்த ராஜ்புத், தமது 18 ஆவது வயதில் இந்திய கடற்படையில் மாலுமியாக சேர்ந்தார். இதன்பின்னர் துப்பாக்கிச்சுடுதலில் பயிற்சியெடுக்கத் தொடங்கிய அவர், 2002-ஆம் ஆண்டு கடற்படை துப்பாக்கிச்சுடும் அணியில் இணைந்தார். பின்னர் அதிகாரியாக பதவிஉயர்வு பெற்ற அவர், 2014-ஆம் ஆண்டு கடற்படையில் இருந்து விலகினார். 

image

தொடக்கத்தில் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற அவர் 2004-ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார். இதன்பின்னர் தமது திறமையை சிறப்பாக வெளிப்படுத்திய அவர், உலகக்கோப்பை போட்டிகளில் ஒரு தங்கம் மற்றும் 3 வெள்ளிப்பதக்கங்களை வென்றிருக்கிறார். மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2006-ஆம் ஆண்டு தொடங்கி 2018-ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக பதக்கங்களை வென்றிருக்கிறார். 

காமன்வெல்த் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளிலும் பதக்கங்களை குவித்திருக்கிறார் ராஜ்புத். 2019-ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றதன் மூலம் டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு சஞ்சீவ் ராஜ்புத் தகுதிபெற்றார். அந்தப்போட்டியில் முதலிடம் பிடித்த குரேயேஷிய வீரர் பீட்டர் கோர்சாவை விட 0.2 புள்ளிகள் குறைவாக எடுத்து தங்கத்தை தவற விட்டார். அங்கு விட்டதை டோக்யோவில் தட்டும் முயற்சியுடன் இருக்கிறார் சஞ்சீவ் ராஜ்புத்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3dAJtPU
via IFTTT

Post a Comment

0 Comments