
சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜூலையில் இந்தியாவின் இளம் ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் ஒருவர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றிருந்தார். உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 86.48 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து ஜூனியர் அளவில் உலக சாதனை படைத்து, தங்க பதக்கமும் வென்றிருந்தார். ஒரே இரவில் தடகள விளையாட்டு உலகில் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்த்தை எட்டினார். அவர்தான் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்வார் என் எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவர்.

உடல் எடையை குறைக்க ஈட்டி எறிதல் விளையாட்டை கற்றவர்: ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் உள்ள காந்த்ரா கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 1997இல் பிறந்தவர். அவருக்கு தற்போது 23 வயது. பள்ளிப் பருவத்தில் பருமனான உடல் வாகை கொண்டிருந்திருக்கிறார் அவர். 12 வயதில் 90 கிலோ உடல் எடையுடன் இருந்திருக்கிறார். அந்த எடையை குறைக்கும் நோக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில் பயிற்சி பெறத் தொடங்கி உள்ளார். அது நாளடைவில் அவரை தொழில்முறை வீரராக உருவாக்கி உள்ளது.
தொடக்கத்தில் உள்ளூர் அளவில் அசத்தியவர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். 2016-இல் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றதன் மூலம் தனது பதக்க வேட்டையை தொடங்கினார். உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், காமன் வெல்த், ஆசிய விளையாட்டுகள் மாதிரியான முக்கிய போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். இடையில் சில மாதங்கள் காயம் காரணமாக அவர் விளையாடாமல் இருந்தார்.

பதக்கம் வெல்வது எனக்கு போனஸ் மட்டுமே: “எப்போதுமே அனைவரும் பதக்கம் வெல்ல வேண்டும் என மட்டுமே சிந்திக்கிறார்கள். நான் விளையாடும் போது எனது ஆட்டத்தை சரியாக விளையாடி துல்லியமாக ஈட்டியை எறிய வேண்டும் என நினைப்பேன். நான் எனது நோக்கத்தை அடையும்போது அதில் கிடைக்கும் வெற்றிக்கான போனஸ்தான் பதக்கங்கள்” என்கிறார்.
90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தால் பதக்கம் வெல்லும் வாய்ப்பு: நீரஜ் டோக்கியோ ஒலிம்பிக்கில் 90 மீட்டர் அல்லது அதற்கும் கூடுதலான தூரம் ஈட்டியை எறிந்தால் அவர் தனது முதலாவது ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போதைக்கு அவரது சிறந்த ரெக்கார்ட் 88.07 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்ததுதான். இந்த சாதனையை கடந்த மார்ச் மாதம் அவர் அடைந்திருந்தார்.
கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் ஜெர்மனி வீரர் Thomas Röhler 90.30 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கம் வென்றார். அந்த தூரத்தை அடைய நீரஜுக்கு 2.23 மீட்டர் தூரம் ஈட்டியை கூடுதலாக வீச வேண்டியுள்ளது. அதை அவர் நிச்சயம் டோக்கியோவில் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் அவருக்கு போட்டியாளர்களாக ஜெர்மன், கென்யா, தைவான் மாதிரியான நாடுகளை சேர்ந்த வீரர்கள் பதக்கம் வெல்ல மல்லுக்கு நிற்பார்கள் என தெரிகிறது.
விளையாட்டு என்றாலே போட்டி தானே கலக்குங்க நீரஜ்..!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3yBdOWx
via IFTTT
0 Comments
Thanks for reading