ஸிவர் அதிவேக அரைசதத்தால், இந்தியாவை அடித்து நொறுக்க, மழையும் டக்வொர்த் லூயிஸும் தன்பங்குக்குச் செயலாற்ற, டி20 தொடரை தோல்வியோடு தொடங்கியுள்ளது, இந்திய மகளிர் அணி.
இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரை இழந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்த இந்தியப் பெண்கள் அணி, டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்போடு களத்தில் இறங்கியது. 2020, டி20 உலகக் கோப்பை தொடரில், இரண்டாவது இடத்தில் முடித்த நம்பிக்கையோடு இந்தியா களமிறங்கினாலும், கடைசியாக விளையாடிய 11 டி20 போட்டிகளில், தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள பெருமிதத்தோடு இங்கிலாந்து களமிறங்கியது. இந்த இரு அணிகளும், நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ள டி20 போட்டிகளில் 19-ல், 15-ல் இங்கிலாந்தே வென்றுள்ளது என்ற புள்ளி விபரமும் பயமுறுத்தியது. ஸிவர் | Sciver
டாஸை வென்ற ஹர்மன்ப்ரீத், பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார். பேட்டிங் பிட்சில், ரன்களைக் குவித்து, பின் சுழலால் சுருட்டாமல், ஏன் மாற்றி யோசிக்கிறார் என்ற கேள்வி எழுவதற்குள், ஷார்ட் ஃபார்மேட்டில், இலக்கைத் தெரிந்து கொண்டு துரத்துவது சுலபம் என்றார். எனினும், சேஸிங் செய்த, கடைசி ஒருநாள் போட்டியின் வெற்றி கொடுத்த நம்பிக்கையும், அவரது முடிவுக்கு, முக்கிய காரணமாக இருந்தது.
பியூமன்ட்டுடன் இன்னொரு ஓப்பனராக வியாட் களமிறங்க, வியாட் முன்னதாக அடித்த, 56 பந்து அதிவேக சதம் கண்ணில் வந்து மறைந்தது. முதல் பந்தை வொய்டாக்கி ஷிகா தொடங்க, அடுத்த ஓவரை அருந்ததியை வீச வைத்தார் ஹர்மன்ப்ரீத். பவர்ப்ளே ஓவர்களைப் பந்தாடியது இக்கூட்டணி. ஆறாவது ஓவரில், சுழல்பந்து வீராங்கனை, தீப்தியைக் கொண்டு வந்தும் ரன்கள் குவிய, 48 ரன்களோடு நல்ல துவக்கத்தைக் கொடுத்தது இந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்.
இவர்களைப் பிரிக்க, ராதா யாதவ் இறக்கப்பட்டார். டி20 ஸ்பெஷலிஸ்ட்டான ராதா, கடைசியாக ஆடிய 26 டி20 போட்டிகளிலும், ஒருமுறை கூட விக்கெட் இன்றி வெறுங்கையோடு சென்றதில்லை என்பதால், அவரைக் கொண்டு வந்தார் ஹர்மன்ப்ரீத். அவரது நம்பிக்கையைப் பொய்யாக்காமல், வீசிய இரண்டாவது பந்திலேயே, வியாட்டின் விக்கெட்டை வீழ்த்தினார் ராதா. இதற்கடுத்த ஓவரிலேயே, பூனம் வீசிய பந்தை, லாங் ஆனில் மந்தனா அற்புதமாகக் கேட்ச் பிடிக்க, பியூமன்ட் வெளியேற, ஓப்பனர்கள் இருவரையும் அடுத்தடுத்து பறிகொடுத்தது இங்கிலாந்து. வெகு சீக்கிரமாகவே, நைட் தனது விக்கெட்டை, ரன் அவுட்டால் பறிகொடுக்க, மூன்று விக்கெட்டுகளை, நான்கு ஓவர்களுக்குள் வீழ்த்தி, போட்டிக்குள் திரும்ப வந்தது இந்தியா. இந்த குறிப்பிட்ட ஓவர்களில், இந்திய வீராங்கனைகளின், பௌலிங்கும் மிகச் சிறப்பாக இருக்க, ஃபீல்டிங்கிலும் புதுத் துடிப்பு காணப்பட்டது. இது அடுத்த சில ஓவர்களுக்கு நீடித்தது. எனினும், அதை வெகுநேரம் நிலைக்கவிடவில்லை ஸிவர் - ஜோன்ஸ் கூட்டணி.
ஸிவர் முதல் ஓவரிலிருந்தே அதிரடி காட்டினார். ஃபுட் வொர்க், பேலன்ஸ், டைமிங் என சகலமும் பொருந்தி வர, மிக நேர்த்தியான ஷாட்களை ஆடிக் கொண்டிருந்தார். ஜோன்ஸ் தொடக்கத்தில், செட்டில் ஆக சில பந்துகளை எடுத்துக் கொண்டவர், ராதாவின் ஓவரில், இரண்டு பேக் டு பேக் பவுண்டரிகளை, ஆஃப் சைடுக்கு ஒன்று, லெக் சைடுக்கு ஒன்று என அடித்து அதிரடி மோடுக்கு மாறினார். அதற்கடுத்த அருந்ததியின் ஓவரை, ஹாட்ரிக் பவுண்ரிகளோடு, சிறப்பாக கவனித்தார் ஸிவர். ரன்மழை பொழிந்தது. 24 பந்துகளில், ஸிவரின் அரை சதமும் வந்து சேர்ந்தது. Harleen deol catch
நடுவில் சிறிது நேரம் இந்திய பௌலர்களிடம் காணப்பட்ட மொத்த நம்பிக்கையையும் சரியச் செய்தனர் இவர்கள். 42 பந்துகளில், 78 ரன்களை வாரிக் குவித்திருந்தது இக்கூட்டணி. அந்த நிலையில்தான், 19-வது ஓவரில், மிகக் குவாலிட்டியான கிரிக்கெட்டை ஆடிக் காட்டினர் இந்திய வீராங்கனைகள். அந்த ஓவரை, ஷிகா பாண்டே வீசினார். இரண்டாவது பந்தை, லாங் ஆனை நோக்கி ஸிவர் அடித்து அனுப்ப, ஹர்மன்ப்ரீத், அதனை மிக அற்புதமாகக் கேட்ச் பிடிக்க, ஸிவர் வெளியேறினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை, ஜோன்ஸ் அடிக்க, அதை நம்ப முடியாத வகையில், டியோல் பவுண்டரி லைன் அருகே கேட்ச் பிடித்தார். பந்தைப் பிடிக்க முயன்ற அவர், நிலைதடுமாறி, லைனுக்கு அப்பால் விழப் போக, சமாளித்து, பந்தை வெளியே எறிந்து, லைனுக்கு அப்பால் காலை ஊன்றி, மறுபடியும் ஃபீல்டின் பக்கம் தாவி, பந்து தரையைத் தொடும் முன், அதைக் கேட்ச் பிடித்தார். ஆச்சரியம் அதோடு முடியவில்லை! அதற்கடுத்த பந்தை, டங்லி அடிக்க முயன்று நிதானம் தப்பி காலை சற்றே மேலே தூக்கிய போது, கையில் கிடைத்த பந்தால், மின்னல் வேகத்தில், ஸ்டம்பைச் சிதறச் செய்தார் கீப்பர் கோஷ். ஷிகாவின் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தது. எனினும், அதற்குள் இங்கிலாந்து, செய்ய வேண்டியதை எல்லாம் சிறப்பாகச் செய்து விட்டது. தீப்தி கடைசி ஓவரை வீசினார். அதில், கடைசிப் பந்துக்கு முந்தைய பந்தை, எக்கல்ஸ்டோன் சிக்ஸருக்குத் தூக்க, பதிலுக்கு, இறுதிப் பந்தில் அவரை வீழ்த்தி, பழி தீர்த்துக் கொண்டார் தீப்தி ஷர்மா.
ஆறு பௌலர்களைக் கொண்டு இந்தியா மாற்றி மாற்றித் தாக்கிய போதும், கொஞ்சமும் அடங்கவில்லை இங்கிலாந்து தரப்பு. தொடர்ந்து, அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடிக் கொண்டே இருந்தனர். 177/7 என முடித்தது இங்கிலாந்து.
178 என்பதெல்லாம் இதுவரை இந்தியா, சேஸிங்கில் நெருங்காத இலக்கு என்பதால், பல விஷயங்கள் ஆரம்பத்தில் இருந்தே, இந்தியாவுக்கு எதிராகத்தான் அமைந்தது. ஷஃபாலியோடும், மந்தனாவோடும் இந்தியா தொடங்கியது. ஷஃபாலி, பிரன்ட் என்கவுன்டர் மீண்டும் ஒருமுறை காட்சிக்கு வந்தது. இம்முறை பிரன்ட்டே வென்றார். ஷார்ட் பாலுக்கு, கடந்த சில போட்டிகளில் ஷஃபாலி திணறியதால், அதுவே அவரை வீழ்த்தும் ஆயுதம் என எதிர்பார்த்தால், 'சர்ப்ரைஸ்' என ஸ்லோவர் டெலிவரியை பிரன்ட் வீச, க்ளீன் போல்டான ஷஃபாலி, ரன் எதுவும் சேர்க்காமல் வெளியேறினார். ஹர்மன்பிரீத் கவுர்
மந்தனாவும் டியோலும் இணைந்தனர். மந்தனா, கேப்களைக் கண்டுபிடித்து, ஃபீல்டர்களுக்கு நடுவில், பவுண்டரிக்கு பந்தை தோட்டாவாக அனுப்பிக் கொண்டிருந்தார். ஆனால், மந்தனாவின் மேஜிக் வெகுநேரம் நீடிக்கவில்லை. இம்முறை, அவருக்கு அழகாக வலை பின்னியது இங்கிலாந்து. ரவுண்ட் த விக்கெட்டில் பந்துகளை வீசிக் கொண்டிருந்தார் ஸிவர். அந்த ஓவரின் நான்காவது, ஐந்தாவது பந்தில் மந்தனாவை அவர், பேக் டு பேக் பவுண்டரி அடிக்க விட்டார். பின், ஆறாவது பந்தை ஷார்ட் பாலாக ஸிவர் வீச, அதை புல் ஷாட்டின் மூலமாக, ஹாட்ரிக் பவுண்டரியாக மாற்ற முயன்றார் மந்தனா. ஆனால், இம்முறை அங்கே நிறுத்தப்பட்டிருந்த, எக்கல்ஸ்டோனின் கையில் போய் பந்து சிக்கியது. 17 பந்துகளில், 29 ரன்களைச் சேர்ந்திருந்த சேஸிங் ராணி மந்தனா ஆட்டமிழந்தார். அதற்கடுத்த ஓவரிலேயே, கேப்டன் ஹர்மன்ப்ரீத்தை, கிளென் வீசிய பந்து காலி செய்ய, மூன்று விக்கெட்டுகளோடு திணறியது இந்தியா. எந்நேரமும் மழை வரலாம், அதற்குள் டக்வொர்த் லூயிஸ் முறைக்கு ஏற்றவாறு ரன்களைக் குவிக்க வேண்டும் என்ற அவசரத்தால், இந்திய வீராங்கனைகளிடம் ஒரு பதற்றம் காணப்பட்டது. அதற்கு விலையாக மூன்று முக்கிய விக்கெட்டுகளும் விழுந்துவிட, அவர்கள் எதிர்பார்த்த மழையும், 8.4 ஓவரில் வந்துசேர, 54/3 என இருந்தது அணியின் ஸ்கோர். மழை கொட்டித் தீர்த்தது.
அரைமணி நேரத்திற்கு மேலாகியும், மழை நிற்காததால், ஆட்டத்தைக் கைவிட வேண்டிய நிலை வந்தது. டிஎல்எஸ் முறைப்படி கணக்கிட்டு, இந்தியா வெற்றி பெற, 72 ரன்கள் இருக்க வேண்டுமென்றும், இந்தியா, 54 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்ததால், 18 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.
மூன்று விக்கெட்டுகளை துரித கதியில் எடுத்த இந்தியா, அந்த மொமன்டத்தைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை. தக்க வைத்துக் கொள்ள, ஸிவர் - ஜோன்ஸ் கூட்டணி விடவில்லை. ஸிவரின் அதிரடியும், ஜோன்ஸின் பொறுப்பான ஆட்டமும் இங்கிலாந்தின் பக்கம், வெற்றியைப் பதியமிட்டது.இந்திய பெண்கள் அணி
கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில், இந்த இரண்டு அணிகளுக்கான அரையிறுதிப் போட்டி, மழையால் மொத்தமாக ரத்து செய்யப்பட, புள்ளிகள் அடிப்படையில், இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா. அதே போன்று மறுபடி ஒருமுறை, இங்கேயும் மழை குறுக்கிட, அங்கே மூட்டிய பகை, இங்கே பழி தீர்க்கப்பட்டிருக்கிறது. 1-0 என தொடரில் முன்னிலை வகிக்குறது இங்கிலாந்து. இந்நிலையில், இந்த இரண்டு அணிகளுக்குமிடையேயான இரண்டாவது போட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தொடரை உயிர்ப்போடு வைத்துக் கொள்ள வேண்டுமெனில், அந்தப் போட்டியில் இந்தியா, வென்றே ஆக வேண்டும்.
http://dlvr.it/S3TBX3
0 Comments
Thanks for reading