32-வது ஒலிம்பிக் தொடர் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 9 வரை டோக்கியோவில் நடக்கிறது. கடந்த ஆண்டே நடந்திருக்கவேண்டிய கொரோனா தொற்றின் காரணமாக ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டது. இந்த ஆண்டு எப்படியும் நடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது அலையால் டோக்கியோ அதிகம் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் தொடரை முழுமையாக ரத்துசெய்யவேண்டும் என்று நகர மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியிருக்கிறார்கள்.Protest against Olympics
டோக்கியோ நகரில் கடந்த சில வாரங்களில் சராசரியாக தினமும் சுமார் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். மற்ற வளர்ந்த நாடுகளைவிட பாதிப்பு சற்று குறைவாக இருந்தாலும், இதையுமே மிகவும் சீரியஸாக அனுகுகிறார்கள் ஜப்பானியர்கள். தடுப்பூசி போடுவதை ஜப்பான் மிகவும் தாமதமாகவே தொடங்கியது அதற்கொரு காரணம். இதுவரை 5 சதவிகித மக்களுக்கே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இப்படியொரு சூழ்நிலை நிலவும்போது ஆயிரக்கணக்கானவர்களை நகருக்குள் விடுவது மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்று பலரும் கருதுகிறார்கள்.
இந்த ஒலிம்பிக் தொடருக்காக இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 15,000 வீரர், வீராங்கனைகள் டோக்கியோ வருவார்கள். ஆனால், இந்த எண்ணிக்கை வீரர்களோடு முடியப்போவதில்லை. பயிற்சியாளர்கள், நடுவர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், ஒளிபரப்புக் குழு, பாதுகாப்புக் குழு என 70,000 பேர் வரை டோக்கியோ வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே மருத்துவ பிரச்னைகளைச் சந்தித்துவரும் நிலையில், இது இன்னும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள் டோக்கியோ மருத்துவர்கள்.
முன்பு, இந்தத் தொடருக்காக 10,000 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியார்களை ஒதுக்கியிருந்தத ஒலிம்பிக் நிர்வாகம், இப்போது அந்த எண்ணிக்கையை ஏழாயிரமாகக் குறைத்திருக்கிறது. இருந்தாலும், மருத்துவமனைகளில் மக்கள் கஷ்டப்படும்போது, குறைந்த அளவு மருத்துவர்களை அனுப்புவதுமே ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்கள் ஜப்பானியர்கள். மருத்துவர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் இந்த விஷயத்தில் ஒரே கருத்தைத்தான் முன்வைத்திருக்கிறார்கள்.
தங்கள் நாட்டுப் பிரச்னை ஒருபக்கமிருந்தாலும், ஒலிம்பிக்குக்காக வருபவர்களால் சிக்கல்கள் வந்துவிடுமோ என்ற அச்சம் அதிகமாக இருக்கிறது. "இன்னும் பல நாடுகள் கொரோனா பெருந்தொற்றை சமாளிக்கத் தடுமாறிவருகின்றன. அந்த நாடுகளிலிருந்து மக்கள் ஜப்பானுக்கு வருவது மிகவும் ஆபத்தானது. மருத்துவமனை ஊழியர்களை ஒலிம்பிக்குக்கு அனுப்பினால், அது மருத்துவமனையின் செயல்பாட்டைப் பெரிதும் பாதிக்கும்" என்று கூறியிருக்கிறார் டோக்கியோ மருத்துவ சங்கத்தின் இயக்குநர் சடோரோ அராய். Protest against Olympics
அதுமட்டுமல்லாமல் புதிய வகை வைரஸ் தோன்றுவதற்கும் வாய்ப்பிருப்பதாக ஜப்பான் மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள். "தற்போது பல்வேறு வகையான உருமாறிய கொரோனா வைரஸ் உலகெங்கும் பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. வித்யாசமான இந்த அத்தனை வேரியன்ட்களும் ஒரே இடத்தில் கூடும். அது மிகவும் ஆபத்தானது. ஒரு மிகவும் புதிதான வேரியன்ட் உருவாகும் வாய்ப்பும் ஏற்படும்" என்று சொல்லியிருக்கிறார் ஜப்பான் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் நயோடா உயேமா. "அப்படி நடந்தால் அது டோக்கியோ வேரியன்ட் என்றுகூட அழைக்கப்படலாம். அடுத்த 100 ஆண்டுகளுக்கு அது விமர்சனங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்" என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மருத்துவர்களின் குரலைத்தான் டோக்கியோ நகர மக்களும் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒலிம்பிக் நடத்தவேண்டுமா என்று ஆன்லைனில் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு 83 சதவிகிதம் பேர் அதற்கு எதிராகத் தான் வாக்களித்திருந்தனர். 43 சதவிகிதம் பேர் ஒலிம்பிக் ரத்து செய்யப்படவேண்டும் என்றும், 40 சதவிகிதம் பேர் தள்ளிவைக்கப்படவேண்டும் என்றும் வாக்களித்திருந்தனர். 17 சதவிகிதம் பேர் மட்டுமே ஒலிம்பிக் நடக்கவேண்டும் என்று கூறியிருந்தனர். தள்ளிவைக்கவேண்டும் என்ற அந்த 40 சதவிகிதம் பேரின் கோரிக்கையை இதற்கு மேல் ஒலிம்பிக் கவுன்சிலும் சரி டோக்கியோ நகரும் சரி பரிசீலிக்க முடியாது. ஏற்கெனவே ஒரு வருடம் தள்ளிப்போய்விட்டது. அடுத்த 3 ஆண்டுகளில் பாரிஸ் ஒலிம்பிக் தொடங்கிவிடும். அதனால் இப்போது இருப்பது இரண்டு ஆப்ஷன்கள்தான்.
சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல், மக்கள் பலரும் டோக்கியோவின் வீதியில் இறங்கி கொடிபிடிக்கத் தொடங்கிவிட்டனர். ஒருபக்கம் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்க, அதே நகரில் ஒலிம்பிக் வேண்டாம் என்ற போராட்டம் தீவிரமடைந்துகொண்டிருக்கிறது. 'ஒலிம்பிக் ஏழைகளைக் கொல்லும்' என்ற பதாகைகளை நகரெங்கும் பார்க்க முடிகிறது. அதனையடுத்து, வெளிநாட்டு ரசிகர்கள் ஒலிம்பிக்குக்கு வருவது தடை செய்யப்பட்டிருக்கிறது. போக, உள்ளூர் மக்களையுமே அனுமதிக்கலாமா என்றும் ஆலோசித்துவருகின்றனர்.
இந்த போராட்டங்கள் நடந்தாலும், ஒலிம்பிக்கை நடத்தி முடிப்பதில் மிகவும் தீர்க்கமாக இருக்கின்றன ஒலிம்பிக் மற்றும் டோக்கியோ நகர நிர்வாகங்கள். ஆஸ்திரேலிய சாஃப்ட் பால் அணியுமே இப்போது டோக்கியோவில் தரையிறங்கிவிட்டது. அதனால், நிச்சயம் இந்தத் தொடர் நடந்துவிடும் என்று சொல்லிவிடலாம். Protest against Olympics
இன்னொருபுறம், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இருக்கும் மக்கள் சுகாதார அமைப்பின் இயக்குநர் கெஞ்சி ஷிபுயா, "நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள அல்லது நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாத ஒருவரின் உடலில்தான் கொரோனா உருமாற்றம் அடையும். அப்படியிருக்கையில் தடுப்பூசி போடாமல் பலரும் இருக்கும் இந்த சூழ்நிலைதான் மிகவும் ஆபத்தானது. இதுதான் ஆபத்தான காலகட்டம்" என்று கூறியிருக்கிறார். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் 80 சதவிகிதம் பேர் தடுப்பூசி போடப்பட்டுவிடுவார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் கூறியிருக்கிறது. அதனால், டோக்கியோவில் ஒலிம்பிக் நிச்சயம் நடக்கும். ஆனால், எந்த அளவுக்கு பாதுகாப்பாக நடக்கும் என்பதில்தான் அது வெற்றியா இல்லை பெரும் தவறா என்பது முடிவாகும்.
http://dlvr.it/S0sX9D

0 Comments
Thanks for reading