IPL 2021 : KKR அணியின் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியருக்கு கொரோனா... இன்றைய போட்டி ஒத்திவைப்பு!

கொரோனா இரண்டாம் அலையின் நடுவே இவ்வளவு நாட்களாக தடங்கல் இல்லாமல் நடந்துவந்த ஐபிஎல் போட்டிகளுக்கு இன்று பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே இன்று இரவு அஹமதாபாத்தில் போட்டி நடைபெற இருந்தது. ஆனால், தற்போது பயோபபுளுக்குள் இருந்த கொல்கத்தாவின் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இன்றையைப் போட்டியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தோளில் ஏற்பட்ட காயத்துக்கு ஸ்கேன் எடுப்பதற்காக வருண் சக்ரவர்த்தி பயோபபுளைவிட்டு மருத்துவமனைக்குச் சென்றதாகத் தெரிகிறது. மருத்துவமனை மூலம் அவருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்றும், வருண், சந்தீப்பைத்தவிர வேறு யாருக்கும் கொல்கத்தா அணியில் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருண் சக்ரவர்த்தி கொரோனா காரணமாக இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டிருப்பது தொடர்ந்து ஐபிஎல் நடக்குமா என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. கடந்த பிப்ரவரி - மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீகில் இதேபோன்று வீரர்களுக்கு கொரோனா பரவியதால் தொடரே பாதியில் நிறுத்தப்பட்டது. அதுபோல் ஐபிஎல் தொடரும் நிறுத்தப்படலாம் என்கிற செய்திகள் இப்போது பரவ ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ, ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு தொடர்பாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.
http://dlvr.it/Ryx208

Post a Comment

0 Comments