வீராங்கனைகளின் வறுமையைப் பயன்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்தாரா தடகள பயிற்சியாளர் நாகராஜன்?!

தமிழகத்தின் பிரபல தடகள பயிற்சியாளரான நாகராஜன் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடெமி என்ற தடகள பயிற்சி மையத்தை சென்னை பாரிமுனையில் நடத்திவருகிறார். பல முன்னணி தடகள வீரர்களை உருவாக்கியவர், விளிம்பு நிலையில் இருந்த இளைஞர்களுக்கு எதிர்காலம் கொடுத்தவர் என்று இத்தனை காலம் விளையாட்டு சமுதாயம் அவரைக் கொண்டாடிக்கொண்டிருந்தது. ஆனால், விளிம்பு நிலையில் இருந்த வந்த வீரர்களை அவர் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்ற அவலம் இப்போது வெளியாகத் தொடங்கியிருக்கிறது. விளையாட்டுத் துறையைப் பற்றி தொடர்ந்து எழுதிவரும் பத்திரிகையாளர் டி.என்.ரகு, நாகராஜனால் பாதிக்கப்பட்ட சில பெண்களின் மெசேஜ்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதில் இத்தனை ஆண்டுகளாக தன்னிடம் பயிற்சி பெற்ற பல பெண்களுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்திருக்கும் தகவல்கள் நிறைந்திருக்கின்றன. வயது வித்யாசம் இல்லாமல் 14, 15 வயது சிறுமிகளும்கூட இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். "Trigger warning: sexual abuse" Horrific sexual abuse allegations have cropped up against P. Nagarajan, coach at Prime Sports athletic academy in Chennai. Some of his former trainees have testified against him. Please order a thorough investigation. @mkstalin. @CMOTamilnadu 1/n pic.twitter.com/E9R609rzF6— T.N. Raghu (@tnrags) May 26, 2021 "என்னுடைய ஜூனியரான ஒரு 17 வயது பெண் என்னிடம் வந்து நாகராஜன் கொடுக்கும் பாலியல் தொல்லைகள் பற்றிக் கூறினார். அதையடுத்து அவருக்கு எதிராக நான் குரல் கொடுக்கத் தொடங்கினேன். அதைத் தொடர்ந்து பல பெண்களும் அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாகக் கூறினார்கள். எங்களுக்குப் போதுமான ஆதரவு கிடைக்காததாலும், இனிமேல் அது தொடராது என்று அவர் உறுதியளித்ததாலும் நாங்கள் விட்டுவிட்டோம். அந்த அத்லெட்கள் எல்லோரும் டாப் லெவலில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தவர்கள். ஒன்று, அவர்கள் கனவுகளை நனவாக்க வேறு அகாடெமிக்குப் போகவேண்டும், இல்லை விளையாட்டையே விட்டுவிடவேண்டும் என்ற நிலைக்கு எல்லோரும் தள்ளப்பட்டார்கள். ஒருசிலரால் அகாடெமியை விட்டு விலக முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டார்கள். தன்னை எதிர்த்து குரல் கொடுக்கமாட்டார்கள் என்பதால் வறுமையில் வாடிய பெண்களை, கிராமப்புறங்களிலிருந்து வந்த பெண்களை அவர் அதிகம் குறிவைத்தார்" என்று கூறியிருக்கிறார் நாகராஜனிடம் பயிற்சி பெற்ற அத்லெட் ஒருவர். "கஷ்டப்படும் குடும்பத்திலிருந்து வந்த பெண்கள் பலரும் அவரால் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டனர். நாகராஜனால் உடல் உறவுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட பல பெண்களை எனக்குத் தெரியும். ஒரு சிலர் தொடர்ந்து மாதக்கணக்கில் அவரால் துன்பறுத்தப்பட்டிருக்கின்றனர். YMCA-வில் இருக்கும் அவர் வீட்டில் வைத்து துன்புறத்தப்பட்ட என் ஜூனியர் ஒருவர், நாகராஜனை கொல்லவும், தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சி செய்தார். அப்போது அவருக்கு 16 அல்லது 17 வயதுதான் இருக்கும். மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் இருக்கும் அவருடைய அலுவலகத்தில் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கும்போது அவரைப் பார்த்திருக்கிறேன். பயிற்சி முடிந்தபிறகு ஒரு பெண்ணை மட்டும் இருக்கச் செய்து அவர் சொல்வதையெல்லாம் செய்யவைப்பார். ஒருமுறை அழுதுகொண்டே அந்த சோகத்தைச் சொன்னாள் அந்தப் பெண். அவருக்கு உதவ முடியவில்லையே என்று இன்றுவரை வருத்தமாக இருக்கிறது" என்று தன் மெசேஜில் கூறியிருக்கிறார் இன்னொரு பெண். இதுபோல் பலரும் நாகராஜன் கொடுத்த தொந்தரவுகள் குறித்து வெளியே சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். நாகராஜன் பற்றிய இந்த விஷயத்தை வெளியே எடுத்துவந்திருக்கும் பத்திரிக்கையாளர் ரகுவிடம் பேசியபோது, "ரொம்பவே அதிர்ச்சியா இருக்கு. எத்தனையோ பொண்ணுங்க தொடர்ந்து இவரால பாதிக்கப்பட்டிருக்காங்க. ஏதோ flirt, chat அப்டினு இல்ல. ரொம்பவும் கொடூரமான தொல்லைகள் கொடுத்திருக்கார். இன்னும் நிறைய பேர் தொடர்ந்து போன் பண்ணி இந்த மாதிரியான விஷயங்களை சொல்லிட்டிருக்காங்க. இத்தனை வருஷத்துல இது பத்தி எனக்குத் தெரியல. என் சேனலுக்கு சமீபத்தில இவரைப் பேட்டி எடுத்திருந்தேன். அதுக்கு அப்புறம்தான் ஒரு நண்பர், 'என்னங்க இவரைப் போய் என்கரேஜ் பண்றீங்களே' அப்டினு சொன்னாரு. ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. அதுக்குப் பிறகுதான் அதுபற்றிய விஷயங்கள் சேகரிக்க ஆரம்பிச்சேன்" என்றார். "இந்தத் துறையில பொண்ணுங்க நிலைமை ரொம்ப கஷ்டம். இந்த மாதிரி விஷயங்களை எதிர்கொள்ளணும். ஒருசிலரால வெளிய சொல்ல முடியறது இல்ல. இன்னும் சிலர், 'நாம தான் இடம் கொடுத்துட்டோமோனு எங்களை நாங்களே வருத்திக்கிட்டோம்' அப்டினு சொல்றாங்க. அதெல்லாம் கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. உடனடியா சரியான நடவடிக்கைகள் எடுக்கணும். பொண்ணுங்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்க முயற்சி செய்யணும்" என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்தார் ரகு. நாகராஜன் மீது தமிழ்நாடு தடகள சங்கத்தில் ஒரு அத்லெட்டின் தந்தை புகார் அளித்திருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் அந்த புகார் அத்லெட்டிக் அசோசியேஷனின் தலைவர் லதாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த புகார் குறித்தும், நாகராஜன் மீதான தொடர் குற்றச்சாட்டுகள் குறித்தும் லதாவிடம் கேட்டேன். "இதுக்கு முன்னாடி அந்தப் புகார் வந்தப்ப உடனே விசாரணை நடத்தினோம். கோச் கிட்ட கேட்டப்போ, அவர் அந்தப் பொண்ணு ஒருத்தரை லவ் பண்ணதாவும், அந்த விஷயத்தில் கண்டிச்சதாவும், அதனால தன் மேல பொய்யா புகார் கொடுக்கிறதாவும் சொன்னாரு. அந்தப் பொண்ணு சைட்ல, இரண்டு தரப்பையும் ஒண்ணா வச்சு பேசத் தயாரா இல்ல. அதைத் தவிர்த்து வேறு எந்தப் புகாரும் வரலை. இன்னைக்குத்தான் நிறையப் பேரு பாதிக்கப்பட்டிருக்காங்க அப்டின்றது தெரியுது. இப்போ நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கோம். கண்டிப்பா சரியான முறையில விசாரணை நடக்கும்" என்றார். ''விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரை, எங்கே வெளியே சொன்னால் தங்கள் கனவு கலைந்துவிடுமோ என்ற பயத்திலேயே பல பெண்களும் தங்கள் சங்கடங்களை வெளியே சொல்லாமல் இருந்துவிடுகிறார்கள். இந்த சூழ்நிலை மாறுவது அவசியம். வீட்டில ஸ்போர்ட்ஸே வேண்டாம்னு சொல்லிடுவாங்கனு பொண்ணுங்க வெளிய சொல்ல பயப்படுறாங்க. அந்தப் பயத்தைப் போக்கணும். அவங்களோட கஷ்டத்தை வெளிய சொல்றதுக்கான ஒரு இடத்தை ஏற்படுத்திக்கொடுக்கணும். அப்போதான் இங்க மாற்றம் ஏற்படும்னு நம்புவாங்க. தங்கள் கஷ்டங்களை வெளிய சொல்வாங்க. அது நடக்கணும். இங்க நானும் ஒரு பொண்ணு. கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். பொண்ணுங்க தைரியமா வந்து சொல்லணும்" என்றும் சொன்னார் லதா.P.Nagarajan புகார்கள் குறித்து பயிற்சியாளர் நாகராஜனிடம் கேட்டேன். "இது முழுசா பொய். இதுக்கு முன்னாடி பிப்ரவரிலயே ஒரு புகார் போச்சு. அதுபத்தி விசாரிச்சாங்க. அந்தப் பொண்ணு லவ் பண்ணிட்டு இருந்துச்சு. அதனால, அந்தப் பொண்ணு மேல ஒழுங்கு நடவடிக்கை எடுத்தேன். உடனே அப்படி ஒரு புகார் போச்சு. அதைத் தெளிவா விளக்கியிருந்தேன். இப்போ திரும்ப இந்த மாதிரி நடக்குது. இதெல்லாம் அடிப்படை ஆதாரமில்லாத புகார்கள்" என்று சொன்னார். ஆனால், இது ஒருவர் கொடுத்த புகார் இல்லையே, பல பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார்களே என்று கேட்க, "முப்பது வருஷமா பயிற்சியாளரா இருக்கேன். வருஷத்துக்கு 2-3 பொண்ணுங்களை ஏதோவொரு காரணத்துக்காக வெளியே அனுப்புவேன். அவங்களாம்தான் இப்படி ஒரு குற்றச்சாட்டை ஆரம்பிச்சு வச்சிருக்காங்க. திட்டமிட்டு பண்றாங்க. இப்போக்கூட என் அகாடெமில 1000 பொண்ணுங்க, பசங்க இருக்காங்க. அவங்களைக் கூப்டு விசாரிச்சுப் பாருங்க. இதெல்லாம் அடிப்படை இல்லாதது" என்று குற்றச்சாட்டுகளை மறுத்தார். விரைவில் இதுகுறித்து முழுமையான விசாரணை நடந்தால் மட்டுமே உண்மைகள் தெரியவரும்!
http://dlvr.it/S0TH7B

Post a Comment

0 Comments