
கொரோனா பரவல் காரணமாக மூன்று பாட்மிண்டன் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தேர்வாக முடியாத நிலைக்கு சாய்னா நேவால் தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவரின் ஒலிம்பிக் கனவு தகர்ந்துவிட்டதாகவே கூறப்படுகிறது.
இந்தியாவின் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இதுவரை 24 சர்வதேசப் போட்டிகளை வென்றுள்ளார். மேலும் நாட்டுக்காக ஏற்கெனவே ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ள அவர், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். இந்நிலையில் அடுத்தமாதம் நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்து, பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார் சாய்னா நேவால்.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற இருந்த இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டி கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது. கோலாலம்பூரில் நடைபெற இருந்த மலேசிய ஓபன் சூப்பர் 750 போட்டியும் கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, ஜூன் 1 முதல் 6 வரை நடைபெறவிருந்த சிங்கப்பூர் ஓபன் போட்டியும் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மூன்று போட்டிகளையும் வைத்து ஒலிம்பிக் கனவு கொண்டிருந்த வீரர்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பி.வி. சிந்து, சாய் பிரணீத், ஆடவர் இரட்டையர்கள் சிராக் ஷெட்டி - சாத்விக் சாய்ராஜ் ஆகிய இந்திய பாட்மிண்டன் வீரர்கள் ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டார்கள். ஆனால் இந்த மூன்று போட்டிகளில் பங்கேற்று அதில் கிடைக்கும் வெற்றிகளை வைத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற இருந்தனர் இந்திய வீரர்களான சாய்னா நெவாலும் ஸ்ரீகாந்தும்.
ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதிபெறுவதற்காக எஞ்சியிருந்த மூன்று போட்டிகளும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோரின் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கனவு தகர்ந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3oWXs6M
via IFTTT
0 Comments
Thanks for reading