பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகளை இந்தாண்டுக்குள் நடத்திமுடித்துவிடவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது பிசிசிஐ. இங்கிலாந்து கவுன்ட்டிகள் தங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்திக்கொள்ள அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், பிசிசிஐ ஐக்கிய அரபு நாட்டிலேயே மீதமுள்ள போட்டிகளை நடத்துவதில் ஆர்வம் காட்டுகிறது.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளில் போட்டிகள் எந்தப்பிரச்னையும் இல்லாமல் நடந்ததோடு, இந்தியாவுக்கும் அந்நாட்டுக்குமான நேர வித்தியாசமும் குறைவாக இருப்பதால் பிசிசிஐ ஐக்கிய அரபு நாடுகளையே இறுதிசெய்யும் முடிவில் இருக்கிறது. இங்கிலாந்து அரசின் அனுமதி, அதன் கட்டுப்பாடுகள் எல்லாம் திடீரென பிரச்னையை உண்டாக்கலாம் என்பதால் பிசிசிஐ இங்கிலாந்தின் அழைப்பைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார்கள்.
அதேசமயம் அக்டோபர் - நவம்பரில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பையையும் ஐக்கிய அரபு நாடுகளிலேயே நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கிறது. அதனால் டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவோ அல்லது அது முடிந்ததுமோ அங்கேயே ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.கங்குலி
இதற்கிடையே பயோபபுளுக்குள் கொரோனா நுழைந்தது குறித்து பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி பேசியிருக்கிறார். ''எங்கே, எப்படி தவறு நடந்திருக்கிறது என விசாரிக்கத்தொடங்கியிருக்கிறோம். இச்சம்பவத்தில் ஒரு முழுமையான பிரேத பரிசோதனை செய்யவேண்டியிருக்கிறது'' என்று சொல்லியிருக்கிறார் கங்குலி. மேலும் அவர் ''இந்த ஆண்டு இறுதிக்குள், அதாவது 14-வது ஐபிஎல் சீசன் நடித்திமுடிக்கவில்லையென்றால் 2500 கோடி ரூபாய் பிசிசிஐ-க்கு நஷ்டம் ஏற்படும்'' என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டிக்கும் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாயை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பிசிசிஐக்குத் தருகிறது. இப்போது போட்டிகள் நடக்கவில்லையென்றால் இந்தத்தொகை மட்டுமல்லாமல், 29 போட்டிகளே நடந்துள்ளதால் ஏற்கெனவே பேசப்பட்ட தொகையும் குறைந்துவிடும். அதேப்போல் விவோ நிறுவனத்திடம் இருந்து வரவேண்டிய 250 கோடி ரூபாய், மற்ற ஸ்பான்சர்களிடம் இருந்து வரவேண்டிய பணம் என எல்லாமே வராமல் போகும் என்கிற பயத்தில் இருக்கிறது பிசிசிஐ. அதனால் எப்பாடுபட்டாவது இந்தாண்டுக்குள் போட்டிகளை நடத்திமுடித்துவிடவேண்டும் என்பதில் கவனமாக இருந்து பல திட்டங்களைத் தீட்டிவருகிறது பிசிசிஐ.
http://dlvr.it/RzFnp0
0 Comments
Thanks for reading