RR v KKR: தாலாட்டு பாடிய கொல்கத்தா இன்னிங்ஸ்... உருட்டியடித்தே வென்ற ராஜஸ்தான்! | IPL 2021

பாட்டு பாடி தூங்க வைக்கும் போட்டி நடைபெற்றால் முதல் பரிசை சின்னதம்பி பிரபுவும் இரண்டாவது பரிசை ஐபிஎல் போட்டிகளும் வென்றுவிடும் போல. நேற்றுதான் மும்பை Vs பஞ்சாப் போட்டியில் டெஸ்ட் மேட்ச்சை போன்ற ஒரு ஆட்டத்தை பார்த்த களைப்பில் இருந்த ரசிகர்களுக்கு, இன்று மீண்டும் ஒரு டெஸ்ட் மேட்ச் சம்பவத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளது கொல்கத்தா. சிஎஸ்கேவுக்கு எதிராக 220 ரன்கள் சேஸிங்கின் போது மரண பயத்தை காண்பித்த அணி இதுதானா என்கிற சந்தேகம் வலுவாக எழும் வகையில் மோசமாக ஆடியுள்ளது கொல்கத்தா. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை சுலபமாக வீழ்த்தியுள்ளது. மும்பை வான்கடேவில் வைத்து நடைபெற்ற இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ட்ரெஸ்ஸிங் ரூமில் மறைத்து வைக்கப்பட்டிருந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஒரு வழியாக ப்ளேயிங் லெவனில் கொண்டு வந்திருந்தார் சாம்சன்.RR v KKR 'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே சேப்பாக்கம் பிட்ச் ஞாபகம் வருதே' என்பதை போலத்தான் கொல்கத்தா அணியின் பேட்டிங் இருந்தது. ஓப்பனர்களாக இறங்கிய நிதிஷ் ராணா சுப்மன் கில் இருவருமே பெரிதாக அடித்து ஆடுவதற்கு முயலவே இல்லை. உனத்கட் வீசிய முதல் ஓவரில் 3 ரன்களும், சக்காரியா வீசிய அடுத்த ஓவரில் இரண்டு வைடுகளுடன் 5 ரன்களும் மட்டுமே வந்திருந்தது. மூன்று மற்றும் நான்காவது ஓவரில் மட்டுமே ராணா கில் ஆகிய இருவரும் தலா ஒரு பவுண்டரியை அடித்தனர். அவ்வளவுதான், பவர்ப்ளேயில் மொத்தமே இரண்டு பவுண்டரிகள்தான். 6 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 25 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. 6வது ஓவரில் கில்லும் ரன் அவுட் ஆகி வெளியேறியிருந்தார். வான்கடே மைதானத்தில் பவர்ப்ளேயில் சராசரியாக 44 ரன்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கொல்கத்தா அணி வெறும் 25 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பேட்டிங்குக்குச் சாதகமான இந்த பிட்ச்சில் பவர்ப்ளேயில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. இத்தனைக்கும் ராஜஸ்தான் பௌலிங் அவ்வளவு மிரட்டலாக ஒன்றும் இல்லை. செட்டில் ஆகிவிட்டு அடிக்கத் தொடங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பையும் கொல்கத்தா அணி பொய்யாக்கவே செய்தது. 25 பந்துகளைச் சந்தித்து 22 ரன்களை எடுத்திருந்த நிதிஷ் ராணா சக்காரியாவின் பந்தில் எட்ஜ் ஆகி சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டைம் அவுட்டுக்கு பிறகு, 9 வது ஓவரில் சக்காரியாவை அழைத்து வந்த சாம்சனின் முடிவு பாராட்டுக்குரியது. 9வது ஓவரில் ராணா அவுட்டாக, 10வது ஓவரில் நரைனும் 11வது ஓவரில் மோர்கனும் எனத் தொடர்ந்து மூன்று ஓவர்களில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா. மோர்கனின் ரன் அவுட் பெருத்த சோகமாக அமைந்தது. ஒரு பந்தை கூட சமாளிக்காமல் பரிதாபமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார் மோர்கன். கேப்டனை ரன் அவுட் ஆக்கிவிட்டதால், அடுத்த மேட்ச்சில் ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பரிதவிப்பிலேயே ஆடிக்கொண்டிருந்தார் ராகுல் திரிபாதி. மோர்கன் அவுட் ஆன பிறகு, ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸரை மட்டுமே அடித்த திரிபாதி 36 ரன்களில் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். RR v KKR சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியிலும் கொல்கத்தாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சொதப்பவே செய்திருந்தனர். தினேஷ் கார்த்திக், ரஸல், கம்மின்ஸ் ஆகியோர்தான் அதிரடியாக ஆடி அணியை தூக்கி நிறுத்தினர். இந்தப் போட்டியிலும் அவர்கள் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரிசல்ட் என்னவோ 'வலிமை அப்டேட்' கதையாகிவிட்டது. தினேஷ் கார்த்திக் மட்டுமே ஒரு சில பவுண்டரிகளை அடித்து 25 ரன்களைச் சேர்த்தார். கிறிஸ் மோரிஸின் ஓவரில் சிக்ஸர் அடித்த ரஸல் அதே ஓவரில் இன்னொரு சிக்ஸருக்கு முயன்று லாங் ஆனில் கேட்ச்சாகி வெளியேறினார். இதே ஓவரில் தினேஷ் கார்த்திக்கும் எக்ஸ்ட்ரா கவரில் நின்ற சக்காரியாவை தாண்டி பவுண்டரி அடிக்க முடியாமல் கேட்ச் ஆனார். தொடர்ந்து யார்க்கராக வீச முயன்று 8 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தியிருந்தார் மோரிஸ். மோரிஸ் வீசிய 20வது ஓவரிலும் கம்மின்ஸ் ஒரு சிக்ஸரை அடித்துவிட்டு அடுத்த பந்துலேயே பவுண்டரி லைனில் கேட்ச் ஆகி வெளியேறினார். கேட்ச்சை பிடித்துவிட்டு ரியான் பராக் செய்யும் கொண்டாட்டம் அதகளமாக இருக்கிறது. செல்ஃபி புள்ளையாக மாறி பந்தை வைத்து செல்ஃபி எடுப்பது இந்த சீசனின் ட்ரெண்டிங் ஸ்டைலாக கூடிய விரைவிலேயே மாறும். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.RR v KKR வான்கடேவில் 134 ரன்கள் என்பது ஒரு ஸ்கோரே கிடையாது என்பதால் பெரும் நம்பிக்கையுடனேயே களமிறங்கியது ராஜஸ்தான் அணி. கங்குலி ஸ்டைல் பேடைக் கட்டிக் கொண்டு பட்லருடன் ஜெய்ஸ்வால் ஓப்பனராகக் களமிறங்கினார். பேட் கம்மின்ஸ் வீசிய இரண்டாவது ஓவரில் ஆஃப் சைடில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்தார் ஜெய்ஸ்வால். ஜெய்ஸ்வால் நன்றாக ஆடினாலும் பட்லர் சீக்கிரமே அவுட் ஆனார். தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்தை பவுண்டரியாக்கிய பட்லர் இரண்டாவது பந்திலேயே அவுட் ஆனார். பெரிதாக ஸ்பின் செய்யாமல் வருண் நேராக வீசிய அந்த டெலிவரியை எதிர்கொள்ள முடியாமல் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார் பட்லர். நம்பர் 3 இல் கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். வழக்கம்போல, க்ரீஸுக்குள் வந்தவுடனேயே பேட்டை வீசினார் சாம்சன். வருண் வீச அவர் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரியாக்கினார். பவுண்டரிகளாக விரட்டி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால் சிவம் மவியின் ஓவரில் 22 ரன்களில் கேட்ச்சாகி வெளியேறினார். இதன்பிறகு, சிவம் துபே உள்ளே வந்தார். சாம்சன் - துபே கூட்டணி ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரி அடித்து நன்றாக ஆடிக்கொண்டிருந்தது. இந்தக் கூட்டணியையும் தமிழக வீரரான வருணே பிரித்தார். ஒரு கூக்ளியில் சிவம் துபேவை ஷார்ட் தேர்டு மேனிடம் கேட்ச் ஆக வைத்தார். 22 ரன்களில் துபே வெளியேறிய சிறிது நேரத்திலேயே திவேதியாவும் அவுட் ஆனார். இதனால், ராஜஸ்தான் பக்கம் கொஞ்சம் அழுத்தம் உருவாவதாக தோன்றியது. RR v KKR ஆனால், கேப்டன் சஞ்சு சாம்சன் ஒரு முனையில் விக்கெட் விடாமல் பொறுப்பாக நின்று ஆடிக்கொண்டிருந்தார். தேவையில்லாத நேரத்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று அவுட் ஆவார் என்பதே சாம்சன் மீதான குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால், இந்தப் போட்டியில் நின்று நிதானமாக அவசரமேயின்றி 41 பந்துகளைச் சந்தித்த சாம்சன் 42 ரன்களையெடுத்து அணியை வெற்றிபெற வைத்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.வான்கடே மைதானத்தில் எவ்வளவு பெரிய ஸ்கோரையும் எதிரணியால் ஸ்கோர் செய்ய முடியும் என உணர்ந்திருந்த கொல்கத்தா அணி பெரிதாக ஸ்கோர் செய்யவே முயலவில்லை என்பது ஏமாற்றமடைய செய்தது. புள்ளிப்பட்டியலின் அடிவாரத்தில் வசிக்கும் இரண்டு அணிகள் மோதிய இந்தப் போட்டி ஒரு டெஸ்ட் மேட்ச் போலவே ஆடப்பட்டதால் பெரிதாக எந்த சுவாரஸ்யமும் இல்லாமலே முடிந்திருக்கிறது.
http://dlvr.it/RyMv1m

Post a Comment

0 Comments