‘’நீங்க நம்பலனாலும் அதான் நெசம்!''... முதல் இடத்தில் கோலியின் RCB... பட்டையைக் கிளப்பிய படிக்கல்!

‘’நாங்கெல்லாம் டாஸ் ஜெயிக்குறதுக்கு வாய்ப்பே இல்லையே’’ என்பதுபோல நேற்று டாஸுக்கு முன்பாக கோலி ஒரு ரியாக்சன் கொடுத்திருப்பார். அதேமாதிரிதான் 'ஆர்சிபியெல்லாம் நாலு மேட்ச்ல தொடந்து ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பே இல்லையே ராசா' என்றுதான் பலரும் நினைத்திருந்தனர். 'நீங்க நம்பலனாலும் அதான் நெசம்' ஆர்சிபி தொடர்ந்து நான்கு போட்டிகளில் வென்றுவிட்டது. புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்திற்கு முன்னேறிவிட்டது. ‘’எதைப் பற்றியும் எங்களுக்கு கவலையில்லை. எந்த ஸ்கோராக இருந்தாலும் சேஸ் செய்வதற்கு தயார்’’ எனக்கூறி சேப்பாக்கத்திலேயே டபுள் சென்சுரியை கடந்த கெத்துடனே டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் கோலி. ரஜத் படிதரை பென்ச்சில் வைத்துவிட்டு கேன் ரிச்சர்ட்சனை மீண்டும் ப்ளேயிங் லெவனுக்குள் கொண்டு வந்திருந்தார் கோலி. ராஜஸ்தான் சார்பில் பட்லரும், மன்னன் வோராவும் ஓப்பனர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை சிராஜ் வீசினார். முதல் நான்கு பந்துகளையும் டாட் ஆக்கிய பட்லர் அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். கைல் ஜேமிசன் வீசிய அடுத்த ஓவரில் வோரா இரண்டு பவுண்டரிகளை அடித்தார். மூன்றாவது ஓவரை மீண்டும் சிராஜ் வீசினார். இந்த ஓவரில் பட்லரை போல்டாக்கி வெளியேற்றினார் சிராஜ். நியுபாலில் டெஸ்ட் மேட்ச் மாதிரி ஒரு குட் லென்த்தைப் பிடித்துக்கொண்டு தொடர்ந்து வீசினார் சிராஜ். RCB கோலி, சிராஜ் பட்லர் அவுட் ஆவதற்கு முந்தைய பந்தை 5-வது ஸ்டம்ப் லைனில் 140+ கிலோ மீட்டரில் வீசியிருந்தார் சிராஜ். அடுத்த பந்தையை வேகத்தை குறைத்து இன்கம்மிங் டெலிவரியாக வீசினார். ஷாட் ஆட இடம் கிடைக்காமல் லெக் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்து வந்த பட்லர் பந்தின் வேகத்தை கணிக்காமல் ஸ்டம்பை பறிகொடுத்தார். ஜேமிசன் வீசிய அடுத்த ஓவரிலேயே வோராவும் பெரிய ஷாட்டுக்கு ஆசைப்பட்டு தூக்கியடித்து கேட்ச் ஆனார். சிராஜ் நன்றாக வீசியதால் அவருக்கு தொடர்ந்து மூன்றாவது ஓவரையும் கொடுத்தார் கோலி. கோலியின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இந்த ஓவரில் மில்லருக்கு ஒரு யார்க்கரை இறக்கி lbw மூலம் டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார். இதன்பிறகு, கேப்டன் சஞ்சு சாம்சன் கொஞ்சம் அதிரடி காட்டினார். ரிச்சர்ட்சனின் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தவர், வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் பந்திலேயே சிக்சர் அடித்தார். ஆனால், அடுத்த பந்திலேயே மிட்விக்கெட்டில் நின்ற மேக்ஸ்வெல்லிடம் தூக்கியடித்து கேட்ச் ஆனார் சாம்சன். சாம்சன் 21 ரன்களில் வெளியேறினார். இந்த சீசனிலும் கன்ஸிஸ்டன்சி இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார் சாம்சன். ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் மொத்தமாக காலியாக, மிடில் ஆர்டரே ராஜஸ்தான் அணியை காப்பாற்றியது. ஷிவம் துபேவும், ரியான் பராக்கும் கூட்டணி போட்டு சிறப்பாக ஆடினர். சஹால் வீசிய 9-வது ஓவரில் இரண்டு சிக்சர்களையும் பவுண்டரியையும் அடித்து மிரட்டினார் ஷிவம் துபே. பராக்-துபே கூட்டணி குறுகியே நேரத்திலேயே 65 ரன்களை சேர்த்தது. ஹர்ஷல் பட்டேலின் ஓவரில் ஒரு மினி ஹெலிகாப்டர் ஷாட் மூலம் பவுண்டரி அடித்த ரியான் பராக் அடுத்த பந்திலேயே தேர்டு மேன் திசையில் தூக்கியடுத்து கேட்ச் ஆனார். 25 ரன்களில் ரியான் பராக் வெளியேறினார்.RCB சிராஜ் லாங் ஆன், லாங் ஆஃப், தேர்டு மேன் திசையிலேயே தொடர்ந்து ஷாட்களை ஆடி பவுண்டரி, சிக்சர்களை அடித்துக் கொண்டிருந்த ஷிவம் துபே லாங் ஆனில் இன்னொரு பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்ச் ஆகி 46 ரன்களில் வெளியேறினார். நம்பர் 7-ல் இறங்கியிருந்த ராகுல் திவேதியாவும் சிறப்பாக ஆடியிருந்தார். ஹர்ஷல் பட்டேல் ஓவரில் அவர் சந்தித்த இரண்டாவது பந்தையே சிக்சராக்கியிருந்தார். சிராஜ் வீசிய 19 ஓவரில் ஒரு பவுண்டரியையும் சிக்சரையும் அடித்தவர் இன்னொரு பெரிய சிக்சருக்கு முயன்று பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். ராகுல் திவேதியா அதிரடியாக அடித்த 40 ரன்கள்தான் ராஜஸ்தான் அணியை 170 ரன்களை கடக்க வைத்தது. கடைசி ஓவரில் ஷ்ரேயாஸ் கோபால் ஒரு சிக்சர் அடிக்க ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 177 ஆனது. சேப்பாக்கத்திலேயே 200 ரன்களை கடந்த அணி என்பதால் வான்கடேவில் ஆர்சிபிக்கு இந்த டார்கெட்டெல்லாம் சிரமமே கொடுக்கவில்லை. கோலியும் தேவ்தத் படிக்கலுமே நின்று முடித்து கொடுத்துவிட்டனர். ஷ்ரேயாஸ் கோபால் கோலியை மூன்று முறை அவுட் ஆக்கியிருக்கிறார் என்பதால் அவரை வைத்தே முதல் ஓவரை தொடங்கினார் சாம்சன். ஆனால், கிங் கோலியிடம் இந்த மேட்ச் அப் வித்தையெல்லாம் எடுபடவில்லை. முதல் ஓவரிலேயே லாங் ஆனிலேயே ஒரு சிக்சரைத் தூக்கினார் கோலி. எப்போதும் உருட்டியடிக்கும் கோலி முதல் ஓவரிலேயே பந்தை பறக்கவிட்டதால் இன்றைக்கு ஒரு வெறித்தனமான இன்னிங்ஸை ஆடப்போகிறார் என தோன்றியது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் தேவ்தத் படிக்கல் ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கினார். RCB கோலி சக்காரியா, மோரிஸ், முஸ்டஃபைசுர் ரகுமான் என அத்தனை பேரின் ஓவர்களிலும் பவுண்டரிக்களையும் சிக்சர்களையும் பறக்கவிட்டார். படிக்கல் ஆடுவதை பார்த்து வாயடைத்துப் போன கோலி, சிங்கிள் தட்டி அவருக்கே தொடர்ந்து ஸ்ட்ரைக்கை கொடுத்து படிக்கலின் ஆட்டத்தை ரசிக்கத் தொடங்கினார். எப்போதும் ஆர்த்தோடாக்ஸ் ஷாட்களையே ஆட விரும்பும் படிக்கல் இன்றைக்கு பிக் ஹிட்டர்களை போல சிக்சர்களாக பறக்கவிட்டதுதான் ஆச்சர்யம். ஸ்ட்ரைக் ரேட்டை ஆரம்பத்திலிருந்தே 200+ல் தான் மெய்ன்டெய்ன் செய்தார். பவர்ப்ளே முடியும் போதே 'அவன் எப்டி போட்டாலும் அடிக்கிறாண்டா' மோடுக்கு சென்றுவிட்ட ராஜஸ்தான் பௌலர்கள் அதன்பிறகு, இந்தக் கூட்டணியை முறிப்பதற்கு பெரிதாக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. முஸ்டஃபைசுர் வீசிய 17-வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து சதத்தை பூர்த்தி செய்தார் தேவ்தத் படிக்கல். இடையில் கோலியும் அரைசதத்தை கடந்து அனுஷ்கா ஷர்மாவுக்கு ஃப்ளையிங் கிஸ்களை பறக்கவிட்டார். இறுதியாக 16.4 ஓவரில் விக்கெட்டே இழக்காமல் இலக்கை எட்டி அசத்தியது ஆர்சிபி. ஆர்சிபி இதுவரை ஆடியுள்ள நான்கு போட்டிகளிலுமே வென்றிருக்கிறது. இந்த வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்துக்கு முன்னேறிவிட்டது. உலக அதிசயங்கள் அத்தனையையும் ஒரே நாளில் சுற்றிப்பார்த்ததை போன்ற மலைப்புடனும் ஆச்சர்யத்துடனுமே ஆர்சிபியை கிரிக்கெட் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஈ சாலா கப் நம்தே?!
http://dlvr.it/RyFmXc

Post a Comment

0 Comments